தேடுதல்

பேராயர் Zalewski. பேராயர் Zalewski. 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்கும் வியட்நாம்

வியட்நாம் அரசு : வியட்நாம் அரசும் திருஅவையும் ஒருவரை ஒருவர் மதித்து நட்புறவை வளர்த்துக்கொள்வதன் வழியாக நல்லுறவை வலுப்படுத்த முடியும்

ஜெயந்த் ராயன் – வத்திக்கான்

வியட்நாம் அரசும் திருஅவையும் ஒருவரை ஒருவர் மதித்து நட்புறவை வளர்த்துக்கொள்வதன் வழியாக, வியட்நாம் திருஅவையை  உலகளாவிய திருஅவையோடு ஒருங்கிணைப்பதற்கு சாதகமான சூழலை உருவாக்க முடியும் என்று தற்போதைய வியட்நாம் அரசின் உள்துறை துணை அமைச்சரும் மத விவகாரங்களுக்கான அரசுக்குழுவின் முன்னாள் தலைவருமான  Vu Chien Thang தெரிவித்தார்.

எழுபது இலட்சம் வியட்நாம் கத்தோலிக்க மக்களின் இருப்பு, பங்களிப்பு மற்றும் அவர்களின் பணியுடன், வத்திக்கானுடனான உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் அதற்கான சாதகமான சூழலை தொடர்ந்து உருவாக்கும்  பட்சத்தில், திருத்தந்தையின் வியட்நாம் பயணம் நிச்சயம் சாத்தியமாகும் எனவும், திருத்தத்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்பதில் வியட்நாம் அரசு என்றும் மகிழ்ச்சி அடையும் என்றும் Vu Chien Thang தெரிவித்ததாக வியட்நாம் கம்யுனிச கட்சியின் அதிகாரப்பூர்வ இணையவழி செய்தித்தாள் "Dang Cong San Vietnam" தெரிவித்துள்ளது.

இரு நாடுகளின் நல்லிணக்க உறவின் துவக்கமாக கடந்த டிசம்பர் மாதம் திருத்தந்தையின் வியட்நாமுக்கான திருப்பீடப் பிரதிநிதி வியட்நாமிலேயே தங்கி பணிபுரியும் வகையில், போலந்து நாட்டைச் சார்ந்த பேராயர் Marek Zalewski நியமிக்கப்பட வழிவகுத்தது.

திருத்தந்தையின் நியமனம் சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையினை தனக்கு அளித்தது என்றும், கத்தோலிக்க ஆயர்களோடு வியட்நாம் திருஅவைக்காக  இணைந்து பணியாற்ற தான் இங்கு வந்துள்ளதாகவும்,  பேராயர் Zalewski அவர்கள் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டவுடன் அவருக்கு ஏற்பட்ட எண்ணத்தை ஒரு நேர்முகத்தில் பகிர்ந்துகொண்டது நினைவுகூரத்தக்கது.

2010ம் ஆண்டுமுதல் திருஅவைக்கும் வியட்நாம் அரசுக்கும் இடையே உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தையும் நினைவு கூர்ந்த பேராயர் Zalewski, தான் அந்நாட்டிலேயே தங்கியிருந்து பணியாற்ற வழிவகை செய்யப்பட்டிருப்பதன் மூலம் திருஅவைக்கும் அரசுக்குமிடையே உறவுகள் இன்னும் வலுவாகவும், சிறந்ததாகவும் அமையும் என்றும் கூறினார்.

வியட்நாம் அரசின் வெளிப்படைத்தன்மைக்கும், சகிப்புத்தன்மைக்கும் நன்றி தெரிவித்த பேராயர், கடந்த பத்து ஆண்டுகளில் அரசுடன் நல்ல உறவுகளின் மேம்பாட்டு நிலையை அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

மிகச்சிறந்த குடிமக்களையும், கத்தோலிக்க நம்பிக்கையாளர்களையும் நாம் பெற்றிருப்பதால் மட்டுமே இது சாத்தியமானது என்றும் கூறிய திருப்பீடப் பிரதிநிதி. “வியட்நாம் திருஅவை ஓர் இளம் உற்சாகமான சமூகம், பல சவால்களையும் சோதனைகளையும் எதிர்கொண்டபோதிலும் நற்செய்திக்கு உண்மையாகவும், கிறிஸ்துவின் மதிப்பீடுகளுக்கு உண்மையுள்ளவர்களாகவும் நம் மக்கள் வாழ்வார்கள்” என்று நம்புவதாக எடுத்துரைத்தார்.

நல்ல கத்தோலிக்க மக்களாக இருக்க முயற்சி செய்யுங்கள், இயேசுவின் நற்செய்திக்கு உண்மைமையாக இருங்கள், நாம் மகிழ்வாக இருந்தால் மக்களே நம்மைப் பின்தொடர்வார்கள், வார்த்தைகளால் மட்டுமல்ல, உறுதியான பணிகளில், நமக்கு அருகிருப்பவர்களை கவனித்துக்கொள்வதில் நமது நம்பிக்கையை வெளிப்படுத்துவது மிகவும் அவசியம் என்று மேலும், தன் நேர்முகத்தில் கூறியுள்ளார் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Zalewski.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 March 2024, 15:50