தேடுதல்

உரோமில் இடம்பெற்ற வாழ்வுக்கு ஆதரவான ஊர்வலம் உரோமில் இடம்பெற்ற வாழ்வுக்கு ஆதரவான ஊர்வலம்  (ANSA)

மனித வாழ்வை பறிப்பதற்கான உரிமை என்று எதுவும் இருக்கமுடியாது

வாழ்வின் மீதான தாக்குதலாக இருக்கும் கருக்கலைத்தலை, பெண்களின் உரிமை என்ற கோணத்தில் மட்டும் பார்க்காமல், வாழ்வைப் பறித்தல் என்பதாகவும் நோக்க வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கருக்கலைத்தலுக்கு முழு உரிமை வழங்கும் வகையில் பிரான்ஸ் நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளதற்கு அந்நாட்டு ஆயர்களுடன் இணைந்து  வாழ்வுக்கான திருப்பீடத்துறையும் தன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

கருக்கலைத்தலுக்கான உரிமையை அரசியலமைப்பு வழியாகவே அனுமதிக்கும் முதல் நாடாக பிரான்ஸ் மாறவுள்ள நிலையில் தங்கள் கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ள பிரான்ஸ் ஆயர்களுக்கு தன் ஆதரவை வெளியிட்டுள்ள வாழ்வுக்கான திருப்பீடத்துறை, மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவரும் இன்றைய காலக்கட்டத்தில் மனித வாழ்வை பறிப்பதற்கான உரிமை என்று எதுவும் இருக்கமுடியாது என தெரிவித்துள்ளது.

அரசுத்தலைவர் எம்மானுவேல் மக்ரோன் அவர்களால் முன்வைக்கப்பட்டு, தேசிய அவையாலும் செனட் அவையாலும் நிறைவேற்றப்பட்டுள்ள, கருக்கலைத்தலை அனுமதிக்கும் சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தின் ஒன்றிணைந்த அவையின் ஐந்தில் மூன்று பங்கு வாக்குகளைப் பெற்று சட்டமாக்கப்பட உள்ளது.

வாழ்வின் மீதான தாக்குதலாக இருக்கும் கருக்கலைத்தலை, பெண்களின் உரிமை என்ற கோணத்தில் மட்டும் பார்க்காமல், வாழ்வைப் பறித்தல் என்பதாகவும் நோக்கப்படவேண்டும் என வாழ்வுக்கான திருப்பீடத்துறையின் அறிக்கைத் தெரிவிக்கிறது.

கருவில் வளரும் தங்கள் குழந்தைகளை கலைக்காமல், பெற்றெடுக்க விரும்புபவர்களுக்கு உதவும் நடவடிக்கைகள் குறித்து புதிய சட்ட திருத்தம் எதுவும் வெளியிடாதது குறித்தும் தங்கன் கவலையை வெளியிட்டுள்ளது வாழ்வுக்கான திருப்பீடத்துறை.

வாழ்வைப் பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், குழந்தைகளின் கல்வி, நலவாழ்வு போன்றவைகளில் அதிகக் கவனம் செலுத்துவதில் அரசுகளும் மத பாரம்பரியங்களும் முன்னணியில் நிற்கவேண்டும் எனவும் அழைப்புவிடுத்துள்ளது இத்திருப்பீடத்துறை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 March 2024, 14:46