தேடுதல்

இயேசு எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்தும் காட்சி இயேசு எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்தும் காட்சி  

தவக் காலம் 3-ஆம் ஞாயிறு : சந்தைக் கலாச்சாரத்தை சாகடிப்போம்!

நமது வழிபாட்டுத் தலங்களான கோவில்களையும், இறைவன் வாழும் நமது உடல் என்னும் கோவிலையும் சந்தையாக்குவதை நிறுத்துவோம்.
தவக் காலம் 3-ஆம் ஞாயிறு : சந்தைக் கலாச்சாரத்தை சாகடிப்போம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. விப 20:1-17     II.  1 கொரி 1:22-25      III.  யோவா 2:13-25)

இன்று நாம் தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். கடவுளுக்குரிய நமது உள்ளமும் உடலும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்ற உயரிய சிந்தனையை நமக்கு முன்வைக்கின்றன இன்றைய நாளின் வாசகங்கள். அதாவது, அகத்தூய்மையும் புறத்தூய்மையும் அவசியம் என்பதை நமக்கு வலியுறுத்துகின்றன. இந்த இரண்டுவிதமான தூய்மைக்கும் அடிப்படியாக அமைவது கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கும் சட்டங்களைக் கடைப்பிடிப்பது என்பதை இன்றைய முதல் வாசகம் பதிவு செய்கிறது. இவ்விரு தூய்மையையும் கடைபிடிக்கும் கடவுளின் மக்களுக்கு அவர் வழங்கும் நிலைத்த நீடித்த ஆசீரும், உடனிருப்பும் என்றுமிருக்கும் என்பதையும் நமக்கு எடுத்துரைக்கின்றன. "என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்" (வச 6) என்ற கடவுளின் வார்த்தைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

சந்தையாக்கப்பட்ட உலகம்!

இன்றைய நற்செய்தி வாசகம், இயேசுவின் காலத்தில் எருசலேம் ஆலயத்தில் நிகழ்ந்த சந்தைக் கலாச்சாரத்தை அம்பலப்படுத்துகிறது. இதன் அடிப்படையிலிலேயே நமது இன்றைய நாள் சிந்தனைகளை உள்வாங்கிக்கொள்வோம். இயேசுவின் காலத்தில் தொடங்கிய சந்தைக் கலாச்சாரம் இன்றைய நம் உலகிலும் அதிதீவிர வளர்ச்சிப் பெற்றிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இன்று உலகின் மூலைமுடுக்குகளெல்லாம் சந்தைகளாகிவிட்டன. அதுவும் பெரும் வியாபார நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் விளம்பரங்கள் கணக்கிலடங்காதவை. இதில் மேற்கொள்ளப்படும் வியாபாரப் போட்டிகள் பல்வேறு மனிதத்தன்மையற்ற சம்பவங்களை நிகழ்த்துகின்றன என்பதையும் செய்தித்தாள்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன. இதில் விளம்பரங்களுக்கான மொத்த செலவுகளையும் மக்களின் தலையில் கட்டிவிடுகிறார்கள். பொருள்களைச் சந்தைப்படுத்தும் இந்த விளம்பர உலகிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்றநிலை வந்துவிட்டதுதான் இதன் சோகம்! அதுவும் விளம்பரத்தின் பெயரால் மனித உணர்வுகள் பலநேரங்களில் மழுங்கடிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, நம் தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்படுகின்றது. அதில் ஒரு பெண் தனது குடும்பச் சூழலைச் சொல்லி கண்ணீர் வடிக்கிறார். இந்தக் காட்சியை அனைவரும் சோகத்துடன் பார்த்து வருகின்றனர். அப்போது, திடீரென்று அக்காட்சியின் இடையில் 'இப்பெண்ணுக்குத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதை ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு பார்ப்போம்' என்ற ஓர் ஆணின் குரலோடு சில விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இதன் அர்த்தம் என்ன? ஒரு பெண்ணின் உண்மையான உணர்வுகளை முறைகேடாகப் பயன்படுத்துவது, அதுகுறித்து பார்வையாளர்களின் உணர்வுகளைத் தூண்டியெழுப்பி அந்தத் தனிப்பட்ட தொலைக்காட்சிக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கையை (TRP-Television Rating Point) பன்மடங்குப் பெருக்கிக் கொள்வது. இதுதான் இன்றைய விளம்பர உலகில் பெரும்பாலும் நிகழ்கிறது. ஆனால் இது வெவ்வேறுத் தளங்களில் நடைபெறுகிறது. ஆக, இவை எல்லாவற்றிக்கும் அடிப்படையானது ஒன்றே ஒன்றுதான், அதுதான் 'பணம்'. யார் அதிகம் சம்பாதிப்பது, யார் முதலில் பணக்காரராவது, சம்பாதித்த பணத்தை எப்படி தக்கவைத்துக் கொள்வது, தனது தொழிலில் தனக்குப் போட்டியாக யாரும் வந்துவிடாமல் எப்படிப் பார்த்துக்கொள்வது ஆகிய இவைகள்தாம்  இன்றைய உலகச் சந்தைக் கலாச்சாரத்தின் அடிப்படைத் தன்மைகள் என்பதை நாம் உணர்ந்துகொள்வோம். இந்தச் சிந்தனைகளை உள்வாங்கியவர்களாக இப்போது இயேசு எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்திய நிகழ்வுக்கு வருவோம்.

நற்செய்தியின் பின்புலம்

நமதாண்டவர் இயேசுவின் பணிவாழ்வில் இதுவொரு முக்கியமான நிகழ்வு என்பதை முதலில் நாம் புரிந்துகொள்வோம். இயேசு எருசேலம் கோவிலைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வை ஒத்தமை நற்செய்தியாளர்கள் மூவருமே பதிவுசெய்துள்ளனர் (காண்க. மத் 21:12-13; மாற் 11:15-17; லூக் 19:45-46). ஆனால் மத்தேயுவும் லூக்காவும் இயேசு எருசலேமில் மாட்சியுடன் நுழைந்த நாளில் அதாவது, குருத்து ஞாயிறன்று இந்நிகழ்வு நடைபெற்றதாகக் காட்டுகின்றனர். மாற்கு நற்செய்தியாளர் வெற்றி ஆர்ப்பரிப்புடன் இயேசு எருசலேமில் நுழைந்த நாளுக்கு அடுத்தநாள் இந்நிகழ்வு நடந்ததாகக் குறிப்பிடுகின்றார். ஆனால் யோவான் நற்செய்தியாளர் மட்டும், இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கத்திலேயே இந்நிகழ்வு நடைபெற்றதாகக் கூறுகின்றார். அதாவது, கானாவில் இயேசு நிகழ்த்திய முதல் அருளடையாளத்திற்குப் பிறகு இந்நிகழ்வு நடப்பதாகக் குறிப்பிடுகின்றார். அப்படியென்றால், எருசலேம் ஆலயத்தில் காணப்பட்ட இந்தச் சந்தைப் பொருளாதாரத்தின் அநியாயச் செயல்களைக் கண்டிக்க அவர் நீண்டநாள் காத்திருக்கவில்லை. மாறாக, இதனைத் தட்டிக்கேட்டும் விதமாக அவர் உடனே சீறியெழுகின்றார் என்று எடுத்துக்காட்டுகின்றார். எப்படியோ இது முதலில் நடந்திருந்தாலும் சரி அல்லது, முடிவில் நடந்திருந்தாலும் சரி, எருசலேம் ஆலயத்தைச் சந்தைப்படுத்தும் பொருளாதாரத்தை இயேசு கடுஞ்சினம்கொண்டு எதிர்த்தார் என்பது மட்டும் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. அவர் எதிர்த்ததற்கான பின்புலம் குறித்து இப்போது அலசுவோம்.

எருசலேம் கோவிலின் கட்டமைப்பு

எருசலேம் கோவில் தெளிவாக வரையறுக்கப்பட்ட ஐந்து மண்டபங்களைக் கொண்டிருந்தது. 01. சந்திப்புக் கூடாரம் (Holy of Holies) 02. குருக்களின் மன்றம் (Court of Priest) 03. இஸ்ரயேலரின் மன்றம் (Court of Israel) 04. பெண்கள் மன்றம் (Cout of women) 05. பிற இனத்தார் மன்றம் (court of Gentiles).  இதில் வெவ்வேறு குழுவினர், தங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட வெவ்வேறு எல்லைக் கோட்டிற்குள் இருந்தவாறு இறைவழிபாடு செய்து வந்தனர். அவரவர்க்குரிய எல்லையைத் தாண்டிச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இன்றைய நற்செய்தியில் நாம் காணும் ‘கோவிலைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வு’ பிறஇனத்தார் மன்றத்தில் நடைபெறுகிறது. இந்தப் பிற இனத்தார் மன்றம் எருசலேம் கோவிலைவிட்டுத் தள்ளி ஓர் ஒதுக்குப்புறமாக இருந்த கட்டிடம் அல்ல, மாறாக, அது ஒருங்கிணைந்த அந்த எருசலேம் பேராலயத்தின் ஓர் அங்கமாகவே இருந்தது. இதுவும் புனிதமான இடம்தான் என்றாலும், இம்மன்றத்தில்தான் வியாபாரமும் அனுமதிக்கப்பட்டிருந்தது. அப்படியென்றால், பிறஇனத்தார் மன்றம் எதோ புனிதம் குறைந்ததாக நினைத்துக்கொண்டு யூத சனாதனம் அதனை மிகவும் இளக்காரமாக நடத்தியது. எனவே, இயேசுவின் கோபத்திற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது என்பது திண்ணம்.

விற்பனையில் கொள்ளை இலாபம்

‘எருசலேம் கோவிலிலிருந்து புறா விற்போரையும், ஆடுமாடுகளையும் துரத்தினார்’ என்றும் யோவான் நற்செய்தியாளர் பதிவுசெய்கின்றார். ஆடு, மாடு, புறா ஆகிய மூன்றுமே பலிப்பொருள்கள் என்பதால், இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அங்கே விற்பனை செய்யப்பட்டன. மேலும் ‘யூத இனத்தில் பிறக்கும் ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்’ என்று மோசேயின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருந்தது. அதனால்தான் அன்னை மரியாவும், யோசேப்பும்  குழந்தை இயேசுவை எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்க வந்தபோது, ‘அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது’ என்பதையும் பார்க்கின்றோம் (காண்க லூக் 2: 22-24). எனவே, இஸ்ரயேல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எருசேலம் ஆலயத்திற்குத் திருப்பயணிகளாக கால்நடையாகவே வந்த யூத மக்கள், தங்களுடன் இந்தப் பலிப்பொருள்களையும் கொண்டுவர இயலவில்லை. அப்படியே அவர்கள் ஆடுமாடுகளைத் தங்களுடன் ஒட்டிக்கொண்டு வந்தாலும் பயணத்தின்போது அவைகள் நோய்களால் தாக்கப்படவோ அல்லது, பலவீனமைடையவோ அதிகம் வாய்ப்புண்டு. மேலும் பலவீனமடைந்த அல்லது நோயுற்ற விலங்குகளைப் பலியாக ஒப்புக்கொடுக்கவும் முடியாது. அதற்குச் சட்டமும் இடம்கொடுக்கவில்லை. இதன் காரணமாக, அவர்கள் எருசலேம் கோவிலுக்கு வந்தவுடன் இவற்றை அங்கேயே வாங்கிக்கொள்ள விரும்பினர். இதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட விற்பனையாளர்கள், ஆடு மாடுகள் மற்றும் புறா விற்பனையில் அதிகமாக விலையேற்றி கொள்ளை இலாபம் பார்க்கத் தொடங்கினர். இதுவும் இயேசுவுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதனால்தான், இயேசு புறா விற்பவர்களிடம், “இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்” என்று கர்ச்சிக்கின்றார்.

நாணயமாற்றுவோரின் நாணயமற்ற செயல்

அடுத்து, 'நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார்' என்று பதிவு செய்கின்றார் யோவான் நற்செய்தியாளர். யூதச் சட்டப்படி, இருபது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட எல்லா யூத ஆண்களும் எருசலேம் கோவிலுக்குக்  கண்டிப்பாக வரிகட்ட வேண்டும்.  இதுகுறித்து விடுதலைப்பயண நூலில் 'தலைக்கட்டு வரி' என்ற தலைப்பில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது (காண்க விப 30:11-16). இந்தத் தலைக்கட்டு வரியை பாஸ்கா விழாவிற்கு முன்பே செலுத்திவிட வேண்டும் என்பது விதி. பெரும்பாலான யூதர்கள் இந்த வரியை எருசலேம் கோவிலின் திருவிழாவிற்கு வரும்போது செலுத்திவிடுவார்கள். வரமுடியாதவர்கள் கோவிலுக்குச் செல்லும் மற்றவர்களிடம் கொடுத்து தங்கள் சார்பாகச் செலுத்துவிடச் சொல்லுவார்கள். இதனை இன்றைய நமது நடைமுறை வாழ்க்கையிலும் கூட ஒரு சில இடங்களில் காண்கின்றோம். மேலும் எருசலேம் கோவிலுக்குச் செலுத்தப்படும் வரியை யூத நாணயங்களாக மட்டுமே கொடுக்க வேண்டும். பிற நாணயங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே, திருப்பயணிகள் கொண்டுவந்த உரோமை மற்றும் கிரேக்க நாணயங்களை வாங்கிக்கொண்டு அதற்கு இணையாக யூத நாணயங்களைக் கொடுத்தார்கள் நாணயம் மாற்றுவோர். அதுமட்டுமன்றி, பணத்தாள்களை (currency) வாங்கிக்கொண்டு சில்லறைகளைத் தந்தார்கள். இன்று யூரோ, டாலர் போன்ற பிறநாட்டு பணங்களை இந்தியப் பணமாக மாற்றும்போது 100-க்கு இவ்வளவு என்று கமிஷன் எடுத்துக்கொள்வதைப் போலவே அன்றும் இந்த நாணயமாற்றுவோர் செய்து வந்தனர். இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், திருவிழாக் காலங்களில் இவர்கள் கொள்ளை இலாபம் பார்த்தனர். இதுவும் இயேசுவுக்குக் கடும்கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆக, மேற்கண்ட இந்தக் காரணங்கள்தாம் இயேசுவை சாட்டையை எடுத்துச் சுழற்றச் செய்தது என்பது நமக்குப் புலனாகிறது. அதுமட்டுமன்று, இயேசு இந்தக் காரியத்தை உடனே செய்திருக்க வாய்ப்பில்லை. குறைந்தபட்சம் சில மாதங்களாவது அவர் இந்த முறைகேடான செயல்களைக் கவனித்திருந்திருக்க வேண்டும். அதனால்தான், ‘பொறுத்ததுபோதும் பொங்கியெழு’ என்ற கதையாக இயேசு எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் இந்தச் செயலை அதிதீவிரக் கோபத்துடன் அரங்கேற்றியிருக்க இருக்கிறார் என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.

இயேசு எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்தும் காட்சி
இயேசு எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்தும் காட்சி

இயேசு என்னும் அழியாத கோவில்

இயேசு யூதர்களிடம், “இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்”  என்றும், 'அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார்' என்றும் தெரிவிக்கின்றார் யோவான் நற்செய்தியாளர். இதுகுறித்து இறையியல் பார்வையில் சிந்திக்கும்போது, நாம் பார்த்துப் பார்த்துக் கட்டி பெருமைகொள்ளும் இவ்வுலகின் கோவில்களும், பல்வேறு உடைகளையும் அலங்காரப் பொருள்களையும் கொண்டு அழகுபடுத்திப் பார்க்கும் நமது உடல்களும் நிலையின்றி அழிந்துபோகும் என்பதும், ஆனால், கடவுளுக்கு மட்டுமே சொந்தமான ஆன்மா, என்றும் அழியாது (காண்க.லூக்:9:25) என்பதும் உண்மையாகிறது. எனவே, இயேசு கூறும் இந்த உள்ளார்ந்த அர்த்தத்தை யூதர்கள் புரிந்துகொள்ளவில்லை. அதனால்தான் அவர்கள், “இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ?” என்று கேட்கின்றனர். மேலும் “இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்”  என்ற இயேசுவின் இந்தக் கூற்று யூதர்களின் உள்ளத்தில் தவறான புரிதலை ஏற்படுத்தியதன் விளைவாக, அவருக்கு மரணதண்டை வழங்க, இதனை ஒரு முக்கிய சாட்சியாகவும் பயன்படுத்துகின்றனர் யூதர்கள். சிலர் எழுந்து, “மனித கையால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோவிலை இடித்து விட்டுக் கையால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன் என்று இவன் சொல்லக் கேட்டோம்” என்று அவருக்கு எதிராகப் பொய்ச் சான்று கூறினர் (காண்க மாற் 14:58) என்றும், பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை. இறுதியாக இருவர் முன்வந்தனர். அவர்கள், “இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான்” என்று கூறினார்கள் (மத் 26:61) என்றும் நாம் வாசிக்கின்றோம். இம்மண்ணில் மனிதரின் உடல் அழிவதுபோன்று இயேசுவின் உடல் அழிவுறவில்லை, மாறாக, அவர் தனது திருவுடலுடன் உயிர்பெற்று எழுந்தார். இதனை மனிதரின் அறிவால் அல்ல, இறைவன் அருளும் ஞானத்தால் மட்டுமே அறிந்துணர்த்துகொள்ள முடியும். இதனடிப்படியில்தான், "அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும் அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார். ஏனெனில், மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானம் மிக்கது; மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது" என்று உரைக்கின்றார் புனித பவுலடியார்.

நமது கோவிலையும் உடலையும் சந்தையாக்க வேண்டாம்.

ஆக, எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வு வழியாக, நீங்கள் வழிபாடு செய்யும் உங்கள் கோவில்களையும், கடவுள் படைத்த உங்கள் உடல் என்னும் கோவிலையும் சந்தையாக்க வேண்டாம் என்ற படிப்பினையை இன்று இயேசு நமக்கு வழங்குகின்றார். ஆகவே முதலாவதாக, நமது வழிபாட்டுத் தலங்கள் அரசியல் காரணங்களுக்காகவும், தனிப்பட்ட நமது சொந்த நலன்களுக்காகவும் சந்தையாக்கப்படுவதைத் தவிர்ப்போம். இரண்டாவதாக, நமது தூய உடல்கள் வர்த்தகமயமாக்கப்படுவதைத் தவிர்ப்போம். இன்றைய நம் உலகில் மனித வர்த்தகம் கொடிகட்டிப் பறக்கின்றது. மனித உடல்களைச் சந்தைப்படுத்துவதில் கொள்ளை இலாபம் ஈட்டப்படுவதால் ஆயுத வர்த்தகத்திற்கு ஈடாக மனித வர்த்தகமும் நடைபெறுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, நமது வழிபாட்டுத் தலங்களான கோவில்களையும், இறைவன் வாழும் நமது உடல் என்னும் கோவிலையும் சந்தையாக்குவதை நிறுத்துவோம். அதற்கான இறையருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 March 2024, 13:22