தேடுதல்

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் 

அப்பாவி மக்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது

மனிதாபிமான உதவிப்பொருள்களை வழங்கும் வாகனத்தை நோக்கி விரைந்த பசியுடன் இருந்த கூட்டத்தின் மீது இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் ஏறக்குறைய 112 பேர் இறந்துள்ளனர், 760 பேர் காயமடைந்துள்ளனர்

மெரினா ராஜ் - வத்திக்கான்

மனிதாபிமான உதவிபொருள்கள் வழங்கிக் கொண்டிருக்கும்போது இஸ்ரயேல் இராணுவம் அப்பாவி மக்கள்மீது தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது என்றும், இந்த நியாயமற்ற தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, நீடித்த மற்றும் உடனடியான போர் நிறுத்தம் வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர் எருசலேம் தலத்திருஅவை தலைவர்கள்.

மார்ச் 1 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள எருசலேம் தலத்திருஅவை தலைவர்கள், காசா நகரத்திற்கு மனிதாபிமான உதவிகளை விரைவாக வழங்க அனுமதிக்கும் ஒரு நீண்ட மற்றும் உடனடி போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்டறிய போராடும் தரப்பினருக்கு அழைப்பு விடுப்பதாகவும், சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் மற்றும் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தைக் கண்டறியவும் அழைப்புவிடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிப்ரவரி 29, வியாழனன்று வடக்கு காசா நகரத்தில் மனிதாபிமான உதவிப்பொருள்களை வழங்கும் வாகனத்தை நோக்கி விரைந்த பசியுடன் இருந்த கூட்டத்தின் மீது இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் என்றும், இதனால் ஏறக்குறைய 112 பேர் இறந்துள்ளனர், 760 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அல்-சிஃபா மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் இந்நிகழ்வை நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து அப்பாவி மக்களுக்கும் குறிப்பாக காசாவில் வாழும் கிறிஸ்தவ சமூக மக்களுக்குத் தங்களது செபங்களையும் தெரிவித்துள்ள தலத்திருஅவை தலைவர்கள், பாதிக்கப்பட்ட மற்றும் இறந்த மக்கள் அனைவரும் காசாவில் உள்ள தூய Porphyry ஆர்த்தடாக்ஸ் தலத்திருஅவை மற்றும் திருக்குடும்ப கத்தோலிக்க ஆலயத்தில் ஏறக்குறைய 5 மாதங்களாக தஞ்சம் புகுந்த 800 புலம்பெயர்ந்த கிறிஸ்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

நம்முடைய கடவுளாகிய இயேசு கிறிஸ்து நமக்காக முதன்முதலில் தம் சிலுவையைச் சுமந்த இந்த மண்ணில், போர் நிறுத்தம் மற்றும் அமைதிக்கான இத்தகைய விவாதங்கள் நியாயமான மற்றும் நிலையான அமைதிக்கு வழிவகுக்கும் என்பதே தங்களின் இறுதி நம்பிக்கை என்றும், உயிர்ப்புப் பெருவிழா தரும் நம்பிக்கையின் அடையாளத்திற்கான அருளை இறைவன் நிறைவாகத் தரட்டும் என்றும் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர் தலத்திருஅவை தலைவர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 March 2024, 16:33