தேடுதல்

லிபியாவிலிருந்து உரோமை வந்தடைந்த புலம்பெயர்ந்தோர் லிபியாவிலிருந்து உரோமை வந்தடைந்த புலம்பெயர்ந்தோர்   (ANSA)

லிபியாவில் இருந்து இத்தாலிக்கு 97 புலம்பெயர்ந்தோர் வருகை!

புலம்பெயர்ந்தோருக்கு லிபியா மேலும் மேலும் மிகவும் சிக்கலை ஏற்படுத்தக்கூடிய நாடு என்பதை நாங்கள் அறிவோம். இதுவரை புலம்பெயர்ந்தோரின் வாழ்வில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை : Chiara Cardoletti.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

97 குழந்தைகள், பெண்கள் மற்றும் நோயுற்று உடல் நலிந்தோர் லிபியாவில் இருந்து மனிதாபிமான உதவிகள் வழியாக முதன் முதலாக உரோமைக்கு வந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் இத்தாலியின் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய விதிமுறைகளின்படி உரோம் நகரிலுள்ள Sant'Egidio எனப்படும் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு, Anci என்ற இத்தாலிய அமைப்பு மற்றும் Evangelical  கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பால் இவர்கள் வரவேற்கப்பட்டுள்ளனர் என்றும் UNHCR  எனப்படும் ஐநாவின் புலம்பெர்ந்தோர் அமைப்பு இவர்களின் மீள்குடியேற்றம் மற்றும் ஒருங்கிணைப்புக்கு உதவும் என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விதிமுறைகளின்படி அடுத்த சில ஆண்டுகளில் 1,500 நபர்களின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது என்றும், அவர்கள் குடும்பங்களுடன் தங்குவதற்கான இல்ல வசதிகள் இத்தாலி முழுதும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும், குழந்தைகள் பள்ளிக்குச் செல்வார்கள், பெரியவர்கள் இத்தாலிய மொழி வகுப்புகளுக்குச் செல்வார்கள், வேலை தேடுவதில் அவர்களுக்கு உதவப்படும் என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதுகுறித்து வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில் கூறியுள்ள Sant'Egidio அமைப்பின் தலைவர் Marco Impagliazzo அவர்கள், இம்மக்கள் குறிப்பாக, பல ஆண்டுகளுக்கு முன்பு லிபியாவிற்கு வந்தவர்கள் மற்றும் எளிதில் பாதிப்பிற்கு உள்ளாகக் கூடியவர்கள் என்றும், அவர்கள் ஆபிரிக்க நாடுகளிலிருந்து மிகுந்த சிரமங்களுக்கு இடையே இந்தப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர் என்றும் உரைத்துள்ளார்.

மேலும் அவர்களில் பலர் நோய்வாய்ப்பட்டிருப்பதால், அவர்களின் எதிர்காலத்திற்கான வழியைக் கண்டறியவும் சிகிச்சை பெறவும் உண்மையில் உதவியும் வரவேற்பும் தேவைப்படும் நபர்கள் இவர்கள் என்று சுட்டிக்காட்டியுள்ள Impagliazzo அவர்கள், இம்மக்கள் யாவரும் இங்கே இத்தாலியில் இருப்பார்கள் என்றும், அவர்கள் வாழ்க்கையில் புதியதொரு பாதையாக அவர்களை வரவேற்கும் சமூகங்களால் ஒருங்கிணைக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், UNHCR  எனப்படும் ஐநாவின் புலம்பெர்ந்தோர் அமைப்பு கடினமான சூழ்நிலையில் போராடி, துன்பத்தில் இருக்கும் இப்புலம்பெயர்ந்தோருக்கு உதவி வருகிறது என்றும் லிபியா அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான நாடு இல்லை என்றும் கூறியுள்ளார் இத்தாலி, திருப்பீடம் மற்றும் San Marino-வுக்கான அவ்வமைப்பின் அதிகாரி Chiara Cardoletti.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 March 2024, 13:59