தேடுதல்

தனது பாவங்களுக்காக வருந்தும் தாவீது அரசர்  தனது பாவங்களுக்காக வருந்தும் தாவீது அரசர்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 51-4, மனமாற்றம் தருவது மனமகிழ்வு!

நமது பாவங்களுக்கான மன மாற்றம்தான், தாவீதைப் போன்று நம்மையும் மகிழ்வொலியையும் களிப்போசையையும் கேட்கும்படி செய்யும்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 51-4, மனமாற்றம் தருவது மனமகிழ்வு!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘‘மெய்ஞானம் பெறுவோம்!!’ என்ற தலைப்பில் 50-வது திருப்பாடலில் 6 முதல் 7 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்துவரும் 8 முதல் 9 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். இப்போது அவ்வார்த்தைகளை பக்திநிறை மனதுடன் வாசிக்கக் கேட்போம். “மகிழ்வொலியும் களிப்போசையும் நான் கேட்கும்படி செய்யும்; நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூர்வனவாக! என் பாவங்களைப் பாராதபடி, உம்முகத்தை மறைத்துக்கொள்ளும்; என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும்” (வச.8-9)

முதலாவதாக, “மகிழ்வொலியும் களிப்போசையும் நான் கேட்கும்படி செய்யும்" என்கின்றார் தாவீது. இவ்வார்த்தைகளைக் கூறுவதன் வழியாக, 'என் பாவங்களை நீர் மன்னிப்பீராகில், நான் மகிழ்வடைவேன். மேலும் அந்த மகிழ்ச்சி என் மனதிற்கு களிப்போசையைக் கொடுக்கும் என்ற உணர்வில் இவ்வாறு உரைக்கின்றார் தாவீது. பாவ மன்னிப்பு என்று அழைக்கப்படும் ஒப்புரவு அருள்சாதனமே ஒரு கொண்டாட்டம்தானே. அதனால்தான், “எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறு பெற்றவர். ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர்” (காண்க திபா 32:1-2) என்று கூறுகின்றார் தாவீது. ஒருவர் மன்னிக்கப்படும்போது பேறுபெற்றவர் ஆவது மட்டுமன்றி, அவர் மகிழ்வடைகிறார், மதிப்படைகிறார், மாண்படைகிறார் மற்றும் புதுவாழ்வடைகிறார். நமது அன்றாட கிறிஸ்தவ வாழ்வில் நாம் இதைக் காண்பதில்லையா? நாம் அருள்பணியாளர்களிடம் பாவ அறிக்கை செய்வதற்கு முன்பும் செய்தபின்பும் நமது மனநிலை எப்படி இருக்கின்றது என்பதை சோதித்தறிந்தாலே இந்த உண்மை நமக்குப் புலப்பட்டுவிடும். நாம் பாவ அறிக்கை செய்வதற்கு முன்பு நம் உடலும் உள்ளமும் அதிகம் பாரமாக இருப்பதைப் போன்ற உணர்வு நம்மிடம் ஏற்படுகின்றது. ஆனால் பாவ அறிக்கை செய்த பிறகு, அந்தப் பாரம் அகற்றப்பட்டு, நம் மனதில் ஓர் இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படுவதை உணர்கின்றோம் அல்லவா? காரணம், நாம் சுமையாகக் கருதிய அந்தப் பாவம் நம்மை வீட்டு அகன்று விடுகிறது. இதே நிலைதான் இங்கே தாவீதுக்கும் ஏற்படுகிறது என்பதை உணர்ந்துகொள்வோம்.

காணாமல் போன மகன் தன் தந்தையிடம் திரும்பிவந்தபோது, இந்த மகிழ்வொலியும் களிப்போசையும் ஏற்பட்டதைப் பார்க்கின்றோம். மனமாற்றம் பெற்று அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வருகிறார். அப்போது அங்கு என்ன நிகழ்கிறது? தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ என்றார். தந்தை தம் பணியாளரை நோக்கி, ‘முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில், என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ (காண்க. லூக் 15:20-24). என்று வாசிக்கின்றோம் அல்லவா? அவ்வாறே, காணாமற்போன ஆடு, காணாமற்போன திராக்மா ஆகிய இரண்டு உவமைகளிலும் வரும் ‘என்னோடு மகிழுங்கள்' (காண்க லூக் 15:6,9) என்ற வார்த்தை இந்தக் கருத்திற்கு மேலும் வலுசேர்க்கிறது.

இரண்டாவதாக, "நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூர்வனவாக!" என்கின்றார் தாவீது. இங்கே கடவுள் நேரிடையாகத் தாவீதின் எலும்புகளை அடித்து ஒடித்தார் என்று நாம் பொருள்கொள்ள கூடாது. மாறாக, தான் பத்சேபாவுடன் செய்த பாவத்தின் விளைவாக ஏற்பட்ட மனஉளைச்சல்கள், மன உறுத்தல்கள், மனவேதனைகள், அழுகைகள், அங்கலாய்ப்புகள், புலம்பல்கள், தூக்கமில்லாத இரவுகள் ஆகியவற்றால் சோர்ந்துபோன மற்றும் நொறுங்கிப்போன தனது எலும்புகள் கடவுளின் பரிவிரக்கம் நிறைந்த மன்னிப்பால் நலம்பெறட்டும், களிகூரட்டும் என்ற அர்த்தத்தில் இவ்வாறு கூறுகின்றார் தாவீது என்பதை நாம் இங்கே புரிந்துகொள்வோம். மேலும் "என் பாவத்தை அறிக்கையிடாதவரை, நாள்முழுவதும் நான் கதறி அழுததால், என் எலும்புகள் கழன்று போயின. ஏனெனில், இரவும் பகலும் உம் கை எனக்கு எதிராக ஓங்கி நின்றது; கோடையின் வறட்சிபோல என் வலிமை வறண்டுபோயிற்று" (காண்க திபா 32 :3-4) என்றும், "நீர் கடுஞ்சினங்கொண்டதால் என் உடலில் நலமே இல்லை; என் பாவத்தால் என் எலும்புகளில் வலுவே இல்லை. என் குற்றங்கள் தலைக்குமேல் போய்விட்டன; தாங்கவொண்ணாச் சுமைபோல அவை என்னை வெகுவாய் அழுத்துகின்றன" (காண்க திபா 38:3-4) என்றும் கூறும் தாவீதின் வார்த்தைகள் இங்கே ஒப்புநோக்கத்தக்கன.

மூன்றாவதாக, "என் பாவங்களைப் பாராதபடி, உம்முகத்தை மறைத்துக்கொள்ளும்" என்கின்றார் தாவீது. இத்தகையதொரு நிலை தங்கள் குற்றங்களையும் பாவங்களையும் உணர்ந்தவர்கள் உள்ளத்திலிருந்துதான் தோன்றும் என்பது நமக்குத் தெளிவாகத் தெரியும். மேலும், "ஆண்டவரே, எண்ணிறந்த தீமைகள் எனைச் சூழ்ந்து கொண்டன; என் குற்றங்கள் என்மீது கவிந்து என் பார்வையை மறைத்துக்கொண்டன. அவை என் தலைமுடிகளைவிட மிகுதியானவை; என் உள்ளம் தளர்ந்து என்னைக் கைவிட்டது" (காண்க திபா 40:12) என்ற அவரின் வார்த்தைகளும் கூட இதே கருத்தை உள்ளடக்கியவைதான் என்பதையும் உணர்ந்துகொள்வோம். மேலும் இயேசு கூறும்  'பரிசேயரும் வரிதண்டுபவரும்' என்ற உவமையில், வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ (காண்க. லூக் 18:13) என்று உரைப்பதுடன், இவ்வரிதண்டுபவரே இறைவனுக்கு விருப்பமுடையவராகி இல்லம் திரும்புகின்றார் என்றும் எடுத்துக்காட்டுகிறார். ஆக, நமது பாவங்கள் தூயோராகிய கடவுளை மட்டுமன்று, இவ்வுலகில் தூய வாழ்வு வாழும் மனிதரையும் கூடப் பார்ப்பதற்குத் தடைக்கல்லாய் அமையும் என்பதையும் நம் உள்ளத்தில் இருத்துவோம்.   

இறுதியாக, “என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும்” என்று குறிப்பிடுகின்றார் தாவீது அரசர். இங்கே துடைத்தருளும் என்பது கழுவியருளும் என்ற கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். "என் தலைவர் சீயோன் மகளின் தீட்டைக் கழுவித் தூய்மைப்படுத்துவார்; நீதியின்படி தீர்ப்பிடும் அவரது தன்மையாலும் நெருப்புத்தணலையொத்த அவரது ஆற்றலாலும் எருசலேமின் இரத்தக் கறைகளைக் கழுவி அதனைத் தூய்மைப்படுத்துவார்" (காண்க. எசா 4:4) என்று இறைவாக்கினர் எசாயா கூறும் வார்த்தைகளில் தீட்டு என்பது பாவம் என்றும் இரத்தக் கறைகள் என்பது அந்தப் பாவத்தினால் ஏற்பட்ட விளைவுகள் என்பதையும் இங்கே அர்த்தப்படுத்துகிறது. மேலும், "எனக்கு எதிராக அவர்கள் செய்துள்ள பாவங்களினின்று அவர்களை நான் தூய்மைப்படுத்துவேன்; அவர்கள் எனக்கு விரோதமாய்ச் செய்துள்ள குற்றங்கள், கிளர்ச்சிகள் ஆகிய எல்லாவற்றையும் நான் மன்னிப்பேன்" (எரே 33:8) என்று இறைவாக்கினர் எரேமியா வழியாக இறைத்தந்தை உரைக்கும் வார்த்தைகளும் ஒத்தகருத்தினைக் கொண்டுள்ளன என்பதையும் நாம் அறிய வருகின்றோம். மேலும் திருப்பலியின்போதும், பல்வேறு மந்திரிப்பு சடங்குகளின்போதும் நம்மீது தெளிக்கப்படும் புனித நீர், நமது பாவங்களும் குற்றங்குறைகளும் மன்னிக்கப்படும் என்பதன் அடையாளமே என்பதையும் இக்கணம் உணர்ந்துகொள்வோம்.

2008-ஆம் ஆண்டு, நியூயார்க் நகரில் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. கடும் குளிர் நிலவிய ஓர் இரவில், சுரங்க  இரயிலில் ஜூலியோ டயஸ் என்ற மனிதர் ஒருவர் பயணம் செய்துகொண்டிருந்தார். தான் இறங்க வேண்டிய இரயில் நிலையம் வந்ததும் இறங்கி நடக்கத் தொடங்கினார். அந்த நடைமேடையில் அதிக ஆள் நடமாட்டம் இல்லை. அந்நேரம், இளைஞன் ஒருவன், பின்புறமாய் வந்து, ஜூலியோவின் முதுகில் ஒரு கத்தியை வைத்து, அவரது பணப்பையை பறித்துக்கொண்டு ஓடினான். அப்போது ஜூலியோ அவனிடம், "நண்பா, ஒரு நிமிடம் நில். நீ ஒன்றை மறந்துவிட்டாய்.  இன்றிரவு, இன்னும் ஒரு சிலரை மிரட்டி நீ பணம் பறிப்பதாக இருந்தால், உனக்கு இது தேவைப்படும்" என்று கூறி, குளிருக்காகத் தான் அணிந்திருந்த மேல் 'கோட்'டை கழற்றி, அவனிடம் நீட்டினார். அதைப் பார்த்ததும் அந்த இளைஞனின் கண்களில் கண்ணீர் கசிந்தது. "நீங்கள் மட்டும் ஏன் என்னிடம் இப்படி நடந்து கொள்கிறீர்கள்?" என்று தட்டுத் தடுமாறி பேசினான். ஜூலியோ அவனிடம், "இவ்வளவு சிரத்தை எடுத்து, நீ பணம் திரட்டவேண்டும் என்றால், உண்மையிலேயே உனக்குப் பணம் அதிகம் தேவை என்பதை நான் புரிந்துகொண்டேன். இன்றிரவு, நீ சந்திக்கப் போகும் ஆபத்துக்களில், குளிர் என்ற அந்த ஆபத்தையாவது நான் கொஞ்சம் குறைக்கலாம் அல்லவா? அதனால், இதை அணிந்துகொள்" என்றார். அப்போது அந்த இளைஞன் நெகிழ்ந்துபோய் நின்றான். உடனே அவனை, உணவருந்த அழைத்துச் சென்றார் ஜூலியோ. உணவருந்தி முடிந்து, அதற்கான கட்டணம் வந்தபோது, அவர் அவனிடம் "நீதான் பணம் கட்டவேண்டும். ஏனென்றால், என் பணப்பை  உன்னிடம்தான் உள்ளது" என்று சொன்னதும், இளைஞன் அவரிடம் பணப்பையைக் கொடுத்தான். ஜூலியோ அவனுக்கு மேலும் 20 டாலர் பணம் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக அவ்விளைஞன் தனக்கு ஏதாவது ஒன்றைத் தர வேண்டுமென்று கேட்டபோது, அவ்விளைஞன், தன்னிடம் இருந்த கத்தியை அவரிடம் கொடுத்துவிட்டு மனமாற்றம் பெற்றவனாகத் திரும்பிச் சென்றான்.

நாமும் மனமுருகி மனம்வருந்தி நம் பாவங்களுக்காக மன்னிப்பு வேண்டும்போது, கடவுள் மனம்நிறைந்த மகிழ்வையும் மாற்றம் நிறைந்த வாழ்வையும் நமக்குத் தருகிறார் என்பதை உணர்வோம். மேலும் இத்தகையதொரு வாழ்க்கை மாற்றமே தாவீதைப் போன்று நம்மை மகிழ்வொலியையும் களிப்போசையையும் நாம் கேட்கும்படி செய்யும் என்பது திண்ணம். ஆகவே, பாவம் ஏற்படுத்தும் விளைவுகளை அறிந்தவர்களாக அவற்றிலிருந்து விடுபட்டு வாழ முயற்சி செய்வோம். அதற்கான இறையருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 March 2024, 11:06