தேடுதல்

மனம் வருந்தும் தாவீது அரசர் மனம் வருந்தும் தாவீது அரசர்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 51-3, மெய்ஞானம் பெறுவோம்!

தவக்காலத்தில் இருக்கும் நாம், தாவீதைப்போல நமது பாவங்களுக்காகக் கதறி அழுவோம். கடவுள் நம் பாவங்களைக் கழுவி நம்மைத் தூய்மைப்படுத்துவார்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 51-3, மெய்ஞானம் பெறுவோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'கடவுளின் தீர்ப்பில் வெளிப்படும் நீதி!' என்ற தலைப்பில் 51-வது திருப்பாடலில் 4 முதல் 5 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். அரசனாக இருந்தாலும் அது ஆண்டியாக இருந்தாலும் கடவுள் தீர்ப்பு வழங்குவதில் எவ்வித பாரபட்சமும் பார்ப்பதில்லை என்பதையும், நாம் எந்த நிலையில் இருந்தாலும் தாழ்மையான மனதுடன் நம் பாவங்களை ஏற்றுக்கொண்டு கடவுளிடம் மன்னிப்பு வேண்டுவதுதான் நிறைவாழ்வை அடைவதற்கான ஒரேவழி என்பதையும் சிந்தித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 6 முதல் 7 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது இறைஒளியில் அவ்வார்த்தைகளை வாசிப்போம். "இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே; மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும். ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன்" (வச. 6-7).

இறைவன் விரும்புவது உள்ளத்து உண்மை

முதலாவதாக, "இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே" என்று கூறும் தாவீதின் வார்த்தைக் குறித்துச் சிந்திப்போம். இங்கே ‘உள்ளத்து உண்மை’ என்பது மனசாட்சியைக் குறிக்கிறது. அதாவது, இறைவன் முன்னாள் எதையும் மறைக்காமல் உள்ளத்தில் உள்ளதை ஒளிவுமறைவின்றி அப்படியே உள்ளது உள்ளவாறு கூறுதல் என்று பொருள்படுகிறது. நாம் முதல் திருவிருந்து பெறுவதற்கு முதல் நாள் பாவ அறிக்கை செய்வதற்கு நமக்குப் பயிற்சி அளிக்கும்போது இதனை வலியுறுத்தி கூறுவார்கள் நமது மறைக்கல்வி ஆசிரியர்கள். அதாவது, ‘அருள்பணியாளரிடம் பாவ அறிக்கை செய்யபோகும்போது, நீ எதையும் மறைக்கக் கூடாது. செய்த பாவத்தை அப்படியே அவரிடம் கூறவேண்டும்’ என்று சொல்லிக்கொடுப்பார்கள் இல்லையா? கடவுள் உண்மையை விரும்புவதால் நாம் செய்யும் பாவ அறிக்கைகளில் எதனையும் மறைக்கக் கூடாது என்பதுதான் இதன் அர்த்தம். இந்த அர்த்தத்தின் அடிப்படையில்தான் தாவீதும், 'நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே' என உரைக்கின்றார். ‘கடவுளே இதுதான் நான்... இதுதான் நான் செய்த பாவம்... உன்னிடம் நான் எதையும் மறைக்க விரும்பவில்லை… உனக்கு எல்லாமே தெரியும்..’ என்று திறந்த மனதுடன் கடவுளிடம் தன்னை முழுமையாக வெளிப்படுத்துகிறார் தாவீது அரசர். காணாமல் போன மகன் பற்றிய உவமையில், இளைய மகன் மனம் திருந்தியவனாக, தன் தந்தையிடம் வந்து, "அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்" (காண்க. லூக் 15:21) என்று கூறியபோது, அவருடைய உள்ளத்தின் உண்மையைத் தந்தை நன்கு புரிந்துகொள்கிறார். அவ்வாறே, வரிதண்டுபவரான சக்கேயுவின் வீட்டிற்கு உணவருந்த செல்கின்றார் இயேசு. அப்போது இதைக் கண்ட யாவரும், “பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர்” என்று முணுமுணுகின்றனர். அங்கே என்ன நிகழ்கிறது?  உடனே சக்கேயு எழுந்து நின்று, “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று இயேசுவிடம் கூறுகின்றார். அப்போது சக்கேயுவின் உள்ளத்தின் உண்மையை அறிந்துகொண்ட இயேசு, “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில், இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்” (காண்க. லூக் 19:7-10) என்று கூறி அனைவர் முன்னிலையிலும் அவரைப் பெருமைப்படுத்துகின்றார். அவரதுப் பொதுப் பாவ அறிக்கையை (public confession) ஏற்றுக்கொண்டு அவரை மன்னிக்கின்றார். மேலும், கெனசரேத்து ஏரியில் இயேசுவின் சொல்லை நம்பி வலையை வீசி அதிகமான மீன்களைப்  பிடிக்கின்றனர் சீடர்கள். இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்று உரைக்கின்றார். உடனே இயேசு சீமோனை நோக்கி, “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” (காண்க. லூக் 5:8,10) என்று சொல்லி அவரை பெருமைப்படுத்துகின்றார். ஆக, நம்  உள்ளத்தில் உண்மை இருக்கும்போது, நம் பாவங்களும் பலவீனங்களும் கடவுளால் மன்னிக்கப்பட்டு நாம் புதிய வாழ்வுக்குப் பிறக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்வோம்.

மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும்

இரண்டாவதாக, "மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும்" என்று கூறுகின்றார் தாவீது அரசர். இங்கே 'மெய்ஞானம்' அதாவது, உண்மையான ஞானம்'  என்ற இந்த வார்த்தையை தெளிந்து தேர்வு செய்ய உதவும் ஒரு நற்பண்பாகக் காட்டுகின்றார் தாவீது. இதன்வழி, ‘பாவத்திற்கு இட்டுச்செல்லும் தீமையை விடுத்து, நிலைவாழ்விற்குச் செல்ல வழிகாட்டும் மெய்ஞானத்தை எனக்குத் தாரும்’ என்று வேண்டுகிறார். அப்படியென்றால், ஞானமற்ற நிலைதான் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்யத் தூண்டுகிறது என்பதை தாவீது இங்கே கூறுவிரும்புகின்றார் என்பது தெளிவாகிறது. இறையச்சமே ஞானத்தின் தொடக்கம் என்று பார்க்கின்றோம். இதனைத்தான், 'ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்; தூயவராகிய அவரைப்பற்றிய உணர்வே மெய்யுணர்வு' (காண்க. நீமொ 9:10)  என்கின்றது நீதிமொழிகள் நூல். இறையச்சமற்ற நிலை ஞானத்தை அதாவது, கடவுளைத் தேடத்தூண்டாது என்பது திண்ணம். ஆக, இறையச்சம் ஞானத்தைத் தருகின்றது, ஞானம் நம்மில் குடிகொள்ள விரும்பும் பாவத்தை அகற்றுகிறது. இதன் காரணமாகத்தான், கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றி “உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!” என்று கேட்டபோது, "உம் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்" என்று கேட்கின்றார். மேலும் சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது என்பதையும் பார்க்கின்றோம். (காண்க. 1 அர 3:5,9-10)

மூன்றாவதாக, "ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன்" என்று கூறுகின்றார் தாவீது. ஈசோப் (Hyssop) என்பது ஒரு சிறு புதர்ச்செடி. அது புல் போன்றது. இந்த ஈசோப் செடி பாவம்போக்கும் பலியின் அடையாளமாக விளங்கும் இரத்தத்தில் தோய்த்து அதை மக்கள்மீது தெளிக்கப் பயன்படுத்தப்பட்டது. ஈசோப் என்ற இந்த வார்த்தை விடுதலைப்பயண நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, முதல் பஸ்கா என்ற கடத்தல் நிகழ்வின்போது, மோசே இஸ்ரயேலின் பெரியோர்கள் அனைவரையும் அழைத்து அவர்களிடம், "ஈசோப்புக் கொத்தை எடுத்து கிண்ணத்திலுள்ள இரத்தத்தில் அதைத் தோய்த்து, கதவின் மேல்சட்டத்திலும் இரு நிலைக்கால்களிலும் கிண்ணத்திலுள்ள இரத்தத்தைப் பூசுங்கள்” (காண்க விப 12:21-22) என்று அறிவுறுத்துகின்றார். மேலும், தலைமைக்குருவின் முக்கியப் பணி பாவம் போக்கும் பணி. 'யோம் கிப்பூர்' என்று சொல்லப்படும் நாளில் தலைமைக்குரு எருசலேம் கோவிலின் திருத்தூயகத்திற்குள் நுழைவார். தன் கைகளில் இரண்டு ஆடுகளை எடுத்துச் செல்வார். அவர் எடுத்துச் செல்லும் இரண்டு ஆடுகளில் ஒன்றை தன் பாவங்களுக்காக அவர் பலியிடுவார். இரண்டாவது ஆட்டை எல்லா மக்களின் பாவங்களுக்காகவும் பலியிடுவார். பலியிடப்பட்ட ஆட்டின் இரத்தத்தை ஒரு வாளியில் எடுத்துக்கொண்டு அதில் ஈசோப் தண்டைத் தோய்த்து பீடத்தின் மேலும், பின் வெளியே வந்து மக்களின் மேலும் தெளிப்பார். இதுதான் பாவம் போக்கும் பலி நடபெறும் முறை. அடுத்து, "என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன்" என்கின்றார் தாவீது அரசர். பொதுவாக உறைபனி என்பது பளிச்சிடும் வெண்மை நிறத்தைக் கொண்டிருக்கும். தனது பாவங்கள் கடவுளின் இரக்கத்தால் கழுவப்படும்போது, பளிங்குக் கற்களைப்போல வெள்ளைவெளேரென தனது உள்ளமும் வாழ்வும் மாற்றம்பெறும் என்றும், தான் அந்த உறைபனியைக் காட்டிலும் வெண்மையாக இருப்பேன் என்று உரைக்கின்றார் தாவீது. இதனை மனதில் கொண்டுதான், "ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன்" என்று கூறுகின்றார் தாவீது. அவருடைய இந்த வார்த்தைகளைத்தான் நாம், ஞாயிறு திருப்பலியின் பாவ மன்னிப்புச் சடங்கின்வேளையில் தீர்த்தம் புனிதம் செய்யப்பட்டு, அருள்பணியாளர் அதனை நம்மீது தெளிக்கும்போது, '​ஆண்டவரே ஈசோப் புல்லினால் என் மேல் தெளிப்பீர் நானும் தூய்மையாவேன் நீரே என்னைக் கழுவ நானும் உறைபனி தனிலும் வெண்மையாவேன்' என்று பாடுகின்றோம்.

பாவத்தை அறிக்கையிடுவதில் மூன்று நிலைகள் இருக்கின்றன. முதலாவது, நாம் செய்த பாவத்திலிருந்து நம்மை முற்றிலுமாகத் துண்டித்துக்கொள்வது. இரண்டாவது, நாம் செய்த பாவங்களைக் குறித்து மனம் வருந்தி அழுவது. மூன்றாவது, இனிமேல் ஒருபோதும் அப்பாவத்தைச் செய்வதேயில்லை என மனதில் உறுதிகொள்வது. இந்த மூன்று நிலைகளும் தாவீதின் வார்த்தைகளில் வெளிப்படுகின்றன. நாம் அருள்பணியாளரிடம் பாவ அறிக்கை செய்த பிறகு அவர் நமக்கு மன்னிப்பு வழங்குகின்றார். அப்போது நாம் சொல்லும் மனம் வருந்துதல் செபத்தில் இந்த மூன்று உறுதிப்பாடுகளையும் வெளிப்படுத்துகின்றோம் என்பதை இக்கணம் நினைவு கூர்வோம்.

இன்றைய காலகட்டங்களில் பாவ அறிக்கை செய்வது என்பது வெற்றுச்சடங்காகி வருவது மிகவும் வருந்தத்தக்கதாக இருக்கின்றது. பலர் அதனை கடமைக்காகவே செய்கின்றனர். நான் ஒருமுறை மிகவும் புகழ்பெற்ற ஒரு திருத்தலத்தில் பாவ அறிக்கை கேட்பதற்காகப் போயிருந்தேன். அப்போது என்னிடத்திலே பாவ அறிக்கை செய்ய வந்த ஒருவர், தனது பாவத்தை அறிக்கையிட்டுக் கொண்டிருந்தபோது அவரது தலைக் கவிழவில்லை, அவரிடத்தில் மனத்தாழ்மை இல்லை, அவர் பாவங்களை உணர்ந்து அறிக்கையிடவில்லை. மாறாக, அவர் சுற்றுமுற்றும் மக்களை நோட்டமிட்டுக்கொண்டே என்னிடத்தில் பாவ அறிக்கை செய்துகொண்டிரந்தார். நாம் செய்யும் பாவ அறிக்கை எந்தளவுக்கு அர்த்தமிழந்து வருகிறது என்பதற்கு இதுவொரு எடுத்துக்காட்டு. ஆனால் தாவீதின் வார்த்தைகளில் எவ்வளவு ஆழம் இருக்கிறது பாருங்கள். அவர் எந்தளவுக்கு மனமுடைந்து, மனம் கசிந்து, மனம் உருகி, மனம் திறந்து, தன்னிலை உணர்ந்து தனது பாவங்களுக்காகப் புலம்பி அழுகின்றார் ஆகவே, நமது பாவங்களும் மன்னிக்கப்பட்டு இறைவனின் புனித உறவில் நாம் வளர தாவீதைப் போல மனமுருகி மன்றாடுவோம். அப்போது நாமும் தாவீதைப் போல உறைபனியிலும் வெண்மையாவோம். இவ்வருளுக்காக இறைவனிடம் இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 March 2024, 13:51