தேடுதல்

முதுபெரும்தந்தை பியர்பத்திஸ்தா பிஸ்ஸாபால்லா முதுபெரும்தந்தை பியர்பத்திஸ்தா பிஸ்ஸாபால்லா   (ANSA)

அயலாரை அன்பு செய்து இயேசுவின் நண்பர்களாக இருக்க முயல்வோம்

குருத்தோலைப் பவனியானது இயேசுவே நமது மீட்பர், மெசியா, கடவுள், கிறிஸ்து என்று உரக்கக்கூற நம்மை அழைக்கின்றது என்றும் கூறினார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

பகைமை உணர்வினை நம் இதயத்தில் வளர்த்து உடன் வாழும் சகோதர சகோதரிகளை நாம் அன்பு செய்யாமல், துன்ப நேரங்களில் அவர்களுக்கு உதவாமால் வாழ்ந்தோமானால் இயேசுவின் நண்பர்களாக நாம் இருக்க முடியாது என்றும், இயேசுவோடும் இயேசுவிற்காகவும் துன்புறவும், வாழவும், செயல்படவும் நாம் விரும்ப வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார் முதுபெரும்தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பிஸ்ஸாபால்லா.

மார்ச் 24 ஞாயிற்றுக்கிழமை எருசலேமில் நடைபெற்ற குருத்தோலைப் பவனியின்போது வழங்கிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் Pierbattista Pizzaballa.

புனித பூமியாம் எருசலேமில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் போரினால், வழக்கமான திருப்பயணிகள் கூட்டம், உடன் சகோதர சகோதரிகள் என பலர் இல்லாமல் சிறிய எண்ணிக்கையிலான மக்களைக் கொண்டு இக்குருத்தோலைப் பவனியானது நடைபெற்றாலும், இயேசுவே நமது மீட்பர், மெசியா, கடவுள், கிறிஸ்து என்று உரக்கக்கூற இப்பவனியினால் நாம் அழைக்கப்படுகின்றோம் என்றும் கூறியுள்ளார் முதுபெரும்தந்தை பிஸ்ஸாபால்லா.

இயேசுவோடு எருசலேமுக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த நாம் அவரைப் பின்பற்றி சிலுவைச் சாவை ஏற்கும் அளவிற்குத் துணிந்த அவருடன் எல்லா இடங்களிலும் உடன் செல்ல வேண்டும் என்ற நமது உறுதிப்பாட்டைப் புதுப்பிக்கின்றோம் என்றும், வலி நிறைந்த சிலுவைப் பாதை, தடைகள், தவறான புரிதல்கள், நிராகரிப்புக்கள், பகைமை, என பல துன்பங்கள் நிறைந்த வாழ்வு நம் ஊக்கத்தை ஒருபோதும் இழக்கச்செய்யாது என்றும் கூறியுள்ளார்.

புனிதமான இப்பூமி இன்று வெறுப்பு மற்றும் பகைமையால் காயப்படுத்தப்பட்டிருந்தாலும்  இப்புனித பூமியை இயேசுவை நாம் அன்பு செய்கின்றோம் என்பதை வெளிப்படுத்துவதற்காகவே நாம் இன்றைய பவனியில் கலந்து கொண்டோம் என்று கூறியுள்ள முதுபெரும்தந்தை பிஸ்ஸாபால்லா அவர்கள், இத்தகைய மாசுபட்ட பகைமை உணர்வுகளிலிருந்து நம் இதயத்தைக் காக்க இறைவனின் அருள்வேண்டுவோம் என்றும் கூறியுள்ளார்.

மிகவும் துயரமான போர்கள் ஒரு போதும் முடிவடையாதது போன்று, நம் குடும்பங்களின் எதிர்காலம் பற்றிய பயத்தினை வளர்த்துக் கொண்டிருக்கின்றது என்றும், இயேசு கிறிஸ்துவை நமது வாழ்வின் முக்கியமாகக் கொண்டு, முழு வலிமை மற்றும் நம்பிக்கையுடன், நாம் தனியாக இல்லை, கைவிடப்படவில்லை, பயம் கொள்ளவில்லை என்பதை எடுத்துரைக்கும் வகையில் ஒன்று கூடி இருக்கின்றோம் என்றும் எடுத்துரைத்துள்ளார் முதுபெரும்தந்தை பிஸ்ஸாபால்லா.

புனித பூமியில் துன்புறும் அனைத்து மக்களுக்காகவும் நகரத்திற்காகவும் செபிப்போம் என்று கூறிய முதுபெரும்தந்தை அவர்கள், புனித வாரத்தில் நுழைந்திருக்கும் நாம் இயேசுவின் பாடுகள் மற்றும் மரணத்தில் அவருடன் இணைந்திருந்து உயிர்ப்பிற்காகக் காத்திருப்போம் என்றும், கிறிஸ்து  நம்மை ஒருபோதும் தனியே விடுவதில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார் முதுபெரும்தந்தை.

இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர் பெறச் செய்வார் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து நமது மகிழ்ச்சியை நாம் உறுதி செய்வோம் என்றும் கூறியுள்ளார் முதுபெரும்தந்தை கர்தினால் பிஸ்ஸாபால்லா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 March 2024, 09:36