தேடுதல்

பாதம் கழுவும் சடங்கின்போது திருத்தந்தை பிரான்சிஸ் பாதம் கழுவும் சடங்கின்போது திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

பாதம் கழுவும் சடங்கு முன்மொழியும் கூட்டியக்கப் பாடங்கள்

ஒவ்வொருவரும் தாம் அன்பு செய்பவர்களுக்கு பிரியும் பொழுதிலே பல நினைவுகளை, சின்னங்களாகவும், பொருள்களாகவும், பொருள்பொதிந்த வார்த்தைகளாகவும் விட்டுச்செல்வர். இயேசு இவ்வுலகை விட்டுப் பிரியும் முன் தன் பிரியமான சீடர்களுக்கு விட்டுச்சென்ற வார்த்தைகள், அடையாளங்கள், அனுபவங்கள் அனைத்தையும் சிறப்பாக நினைவு கூரும் நாளே புனித வியாழன்.

புனித வியாழன் சிறப்பு நிகழ்ச்சிகள்

மெரினா ராஜ் - வத்திக்கான்

துணிந்தவன் எல்லாம் நல்ல தலைவனல்ல,

தன் சுயநலத்தைத் துறக்கத் துணிந்தவனே உண்மையானத் தலைவன்.

முன்னால் நிற்பவன் மட்டும் தலைவன் அல்ல,

முன்மாதிரிகையாகத் திகழ்பவனே நல்ல தலைவன்.

நம் தலைவர் இயேசு சுயநலமற்றவர். நம் சுயத்தை மட்டுமே நாடுபவர். முன்மாதிரிகையான வாழ்க்கைக்கு நல் உதாரணமாகத் திகழ்ந்தவர். இத்தகைய இயேசுவின் தலைமைத்துவத்தைக் கொண்டாடும் நாள் தான் புனித வியாழன். ஒவ்வொருவரும் தாம் அன்பு செய்பவர்களுக்கு பிரியும் பொழுதிலே பல நினைவுகளை, சின்னங்களாகவும், பொருள்களாகவும்,  பொருள்பொதிந்த வார்த்தைகளாகவும் விட்டுச்செல்வர். இயேசு இவ்வுலகை விட்டுப் பிரியும் முன் தன் பிரியமான சீடர்களுக்கு விட்டுச்சென்ற வார்த்தைகள், அடையாளங்கள், அனுபவங்கள் அனைத்தையும் சிறப்பாக நினைவு கூரும் நாளே புனித வியாழன். இந்த சிறப்பான நாளை இன்னும் சிறப்பாக மாற்றுவதற்காக பாதம் கழுவும் சடங்கு முன்மொழியும் கூட்டியக்கப் பாடங்கள் பற்றிய கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்முனைவர் இயேசு கருணாநிதி.

அருள்முனைவர் யேசு கருணாநிதி, மதுரை உயர்மறைமாவட்ட அருள்பணியாளர். தற்போது இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் விவிலியப் பணிக்குழுவின் செயலராகப் பணியாற்றுகிறார். மேலும், கூட்டியக்கத்துக்கான மாமன்றம் மற்றும் யூபிலி 2025-க்கான தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுகிறார். இன்றைய நாளில், ‘பாதம் கழுவும் சடங்கின் பின்புலத்தில் கூட்டியக்கத் திருஅவைக்கான முதல் அமர்வின் தொகுப்பு அறிக்கையின் உட்கூறுகள்’ என்னும் தலைப்பில் நம்மோடு தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளார் தந்தை அவர்களை எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

அருள்முனைவர் யேசு கருணாநிதி

பாதம் கழுவும் சடங்கு முன்மொழியும் கூட்டியக்கப் பாடங்கள் - அருள்முனைவர் யேசு கருணாநிதி

தன் தலைவி சாராவிடமிருந்து தப்பி ஓடி வந்த ஆகாரைப் பாலைநிலத்தில் எதிர்கொள்கிற வானதூதர் அவரிடம், ‘எங்கிருந்து வருகிறாய்?’ ‘எங்கே செல்கிறாய்?’ என்று இரண்டு கேள்விகள் கேட்கின்றார் (காண். தொநூ 16:8). முதல் கேள்விக்கு மட்டுமே விடை அறிந்திருக்கிறார் ஆகார். தன் தலைவி சாராவிடமிருந்து தப்பி ஓடி வருவதாகச் சொல்கிறார் ஆகார். எங்கே செல்கிறார் என்பதை அவர் அறியாமல் நின்ற ஆகாரைத் தன் தலைவியின் இல்லம் நோக்கித் திரும்பச் சொல்கிறார் வானதூதர்.

கூட்டியக்கத்துக்கான மாமன்றத்தின் 16-ஆவது பொது அமர்வின் முதல் கூடுகை முடிந்திருக்கும் இந்நேரம் நம்மில் எழுகிற கேள்விகளும் இவையே: ‘எங்கிருந்து வருகிறாய்?’ ‘எங்கே செல்கிறாய்?’

மாமன்றப் பொது அமர்வின் முதல் கூடுகைக்குச் சென்றவர்கள் இதற்கு முன்னர் நடந்த அமர்வுகளுக்கும் இந்த அமர்வுக்கும் நிறைய வித்தியாசம் இருந்ததை ஒருசேர மொழிகிறார்கள்: முந்தைய மாமன்றங்களில் ஆயர்கள் மட்டுமே கூடினர். இந்த மாமன்றத்தில் ஆயரல்லாதவர்களும் - அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், பொதுநிலையினர், இளைஞர்-இளம்பெண்கள் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் ஓட்டுரிமையும் பெற்றிருந்தனர். முந்தைய மாமன்றங்கள் வெறும் நிகழ்வுகளாக (events) அமைந்தன. இந்த மாமன்றமோ ஓர் அனுபவமாக (experience) இருந்தது. முந்தைய மாமன்றங்கள் இறுதியில் வெளிவரக்கூடிய ஏட்டை (pசழனரஉவ) மையப்படுத்தியதாக இருந்தன. இந்த மாமன்றமோ செயல்பாட்டு முறைக்கே (product) முக்கியத்துவம் கொடுத்தது.

இந்த மாமன்றப் பொதுஅமர்வு நடத்தப்பட்ட முறையில் மூன்று கூறுகள் பாராட்டுதற்குரியவை: (அ) ஆவியாரில்உரையாடுதல் (conversation in the spirit) ஒருவர் பேச அறையில் உள்ள யாவரும் கேட்க என்னும் நிலை மாறி யாவரும் பேச யாவரும் கேட்கவாம் என உறுப்பினர்கள் சிறிய குழுக்களாக அமர்த்தப்பட்டார்கள். மேலும், பேசிக்கொண்டே இருப்பதற்குப் பதிலாக ஒருவர் மற்றவருக்குச் செவிகொடுக்கவும், செவிகொடுத்ததைப் புரிந்துகொள்ளவும், புரிந்துகொண்டபின்னர் அமைதி காக்கவும் அறிவுறுத்தப்பட்டார்கள். (ஆ) திருமுழுக்கு அடையாளத்தை மையப்படுத்திய ஒன்றிப்பு (communion through baptismal identity) உலகின் பல பகுதிகளிலிருந்தும் பின்புலங்களிலிருந்தும் வந்திருந்த உறுப்பினர்கள் அனைவரும் தாங்கள் பெற்றிருக்கும் திருமுழுக்கு என்னும் அடையாளத்தை மட்டுமே மையமாக வைத்து ஒன்றுகூடினர். படிநிலை அல்லது அமைப்பு ரீதியான எந்த வேறுபாடும் பார்க்கவில்லை. மேலும், திருமுழுக்கு தண்ணீரை நினைவுகூர்ந்து ஒன்றுகூடிய இவர்கள், போரினாலும் சுற்றுச் சூழல் அழிவுகளாலும் மானுடமும் இயற்கையும் வடிக்கும் கண்ணீரையும் நினைவுகூர்ந்தனர். (இ) நிரப்புநிலை அல்லது இணைவுநிலை (complementarity)  – ஆன்மிக வழிகாட்டுதல்கள் அருள்தந்தை ஒருவராலும் அருள்சகோதரி ஒருவராலும் வழங்கப்பட்டன (பாலின நிரப்புநிலை), அமர்வுகளில் அமைதியும் உரையாடலும் ஒன்றோடொன்று இணைந்து சென்றன, படிநிலை அருளும் அருங்கொடை அருளும் ஒன்றோடொன்று பொருந்தி நின்றன.

பொதுஅமர்வின் முதல் கூடுகையில் ஓட்டெடுப்பு வழியாக உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்ற ’41 பக்கக் கருத்துத்தொகுப்பு அறிக்கை’ ‘மறைத்தூதுப்பணியில் கூட்டியக்கத் திருஅவை’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மூன்று பகுதிகளையும் 20 அலகுகளையும் கொண்டுள்ளது. மூன்று பகுதிகளும் ‘தோழமை, பணி, பங்கேற்பு’ (communion – mission - participation) என்னும் மாமன்ற இலக்கிவாக்கியச் சொல்லாடல்களின் விளக்கவுரைகளாக அமைந்துள்ளன.

ஒவ்வோர் அலகும் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) ஏற்றுக்கொண்டவை (Convergences) (அனைவராலும் ஏறக்குறைய ஏற்றுக்கொள்ளப்பட்ட எண்ணங்களும் செயல்முறைகளும்). (ஆ) கருத்தில்கொள்ள வேண்டியவை (Matters for Consideration) (கூடுதல் தெளிவுகளும் புரிதல்களும் தேவைப்படுகிற தளங்கள்). (இ) முன்மொழிதல்கள் (Proposals) (தலத்திருஅவைகள், ஆயர்பேரவைகள், ஆயர் பேரவைக் கூட்டமைப்புகள், அகிலஉலகத் திருஅவை ஆகிய தளங்களில் தேர்ந்துதெளியப்பட வேண்டியவை).

மாமன்றக் கருத்துத்தொகுப்பு அறிக்கையில் காணப்படுகிற பின்வரும் சொல்லாடல்கள் நம் சிந்தனையைத் தூண்டுகின்றன: ‘கூட்டியக்கப் பண்பாடு,’ ‘கூட்டியக்கத்துக்கான உருவாக்கம்,’ ‘அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் இணைந்த கூட்டு உருவாக்கப் பயிற்சி,’ ‘அனைத்துத் தளங்களிலும் ஆவியாரில் உரையாடுல்,’ ‘மாற்றியமைக்கப்பட வேண்டிய மேய்ப்புப்பணிப் பங்கேற்பு அமைப்புகள்,’ ‘அமைப்புகள் பற்றிய திருஅவைச் சட்ட இறையியல் ஆய்வுகள்,’ ‘பணிமைய இயக்கம்,’ ‘அருங்கொடை அறிகுறி,’ ‘பெண்கள் மறைப்பணியில் பங்கேற்பாளர்கள்,’ ‘அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள் பணித் திறனாய்வு,’ ‘ஆயர்நிலைக்குத் தெரிவுசெய்யப்படுவதற்கான செயல்முறை மறுஆய்வு,’ ‘ஆயர்களின் பணிகள் திறனாய்வு,’ ‘தலத்திருஅவைகளை இணைத்தல்,’ ‘நற்செய்தி அறிவிப்பு ஒன்றிப்பு. கூட்டியக்கத் திருஅவையின் மையமாக இருக்கக் கூடிய ஒற்றைச் சொல் மறைப்பணி. மறைப்பணியே நற்செய்தி அறிவிப்பின் மகிழ்ச்சியாகக் கனிகிறது.

இம்மாதம் 14-ஆம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கர்தினால் க்ரெக் அவர்களுக்கு எழுதிய மடலில், வருகிற இரண்டாம் அமர்விற்காக 10 முதன்மைகளை முன்மொழிந்துள்ளார்.

தன் பணிவாழ்வு முழுவதும் பல்வேறு போதனைகள், வல்ல செயல்கள் என்று அவர்களுக்குச் சொல்லாலும் செயலாலும் கற்பித்து வந்த இயேசு, 'இப்படிச் சொல்லிக் கொண்டே இருந்தால் இவர்களுக்குப் புரியாது' என்று நினைத்தவர், சட்டென்று எழுந்து, மேலாடையைக் கழற்றிவிட்டு, இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு, குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களின் காலடிகளைக் கழுவித் துடைத்து, மீண்டும் மேலாடை அணிந்து பந்தியில் அமர்ந்துகொள்கின்றார். அப்படி அமர்ந்த அவர் தம் சீடர்களிடம், 'உங்களுக்குப் புரிந்ததா?' என்கிறார். பாதம் கழுவும்போதும் பேதுருவிடம், 'இப்போது உனக்குப் புரியாது. பின்னரே புரிந்துகொள்வாய்' என்கிறார்.

இயேசுவின் சீடர்களுக்கு இந்நிகழ்வு பேரதிர்ச்சியைத் தந்திருக்க வேண்டும். இன்றைய உருவகத்தில் சொல்ல வேண்டுமெனில், ஒருநாள் காலையில் நம் வீட்டு அழைப்பு மணி அடிக்கிறது. திறந்து பார்த்தால், நம் மறைமாவட்ட ஆயரும் நம் பங்குத்தந்தையும் கையில் வாளி மற்றும் குவளையுடன் நிற்கிறார்கள். நம்மிடம், ‘நாங்க உங்க வீட்டைச் சுத்தம் செய்ய வந்திருக்கிறோம்’ என்கிறார்கள். அந்த நேரத்தில் நாம் எப்படி உணர்வோம்?

யூத மரபில் பாதம் கழுவுதலுக்கு மூன்று அர்த்தங்கள் இருந்தன: 1) தனிநபர் தூய்மை, 2) விருந்தோம்பலின் அடையாளம், 3) எருசலேம் ஆலயச் சடங்கு முறை. இயேசு தம் சீடர்களின் பாதம் கழுவிய நிகழ்வு இந்த மூன்றையும் தாண்டுகின்றது. விருந்து பின்புலமாக இருந்தாலும் இயேசு இதன் வழியாக ஒரு புதிய சீடத்துவத்தை, புதிய குருத்துவத்தை தன் சீடர்களுக்குக் கற்பிக்கின்றார்.

இயேசு தன் சீடர்களின் பாதங்களைக் கழுவுதல் ஆறு நிலைகளாக நடக்கிறது:

1. பந்தியிலிருந்து எழுதல் 2. மேலாடையைக் கழற்றி வைத்தல் 3. இடுப்பில் துண்டைக் கட்டுதல் 4. குவளையில் தண்ணீர் எடுத்தல் 5. பாதங்களில் ஊற்றுதல் 6. துண்டால் துடைத்தல்

1. பந்தியிலிருந்து எழுதல்

அதாவது, தான் செய்து கொண்டிருக்கும் ஒரு செயலை நிறுத்திவிட்டு, இன்னொரு செயல் செய்யப் புறப்படுதல்.

2. மேலாடையைக் கழற்றுதலும்,

3. துண்டைக் கட்டுதலும்

இந்த இரண்டு செயல்களும் இணைந்து செல்கின்றன. யூதர்களில் உயர்குடியினர் இரண்டு வகை ஆடைகளை அணிவர். ஒன்று, நீண்ட அங்கி. இரண்டு அதன் மேல் மேலாடை. ஆக, மேலாடை உயர்குடிப்பிறப்பின் அல்லது செல்வத்தின் அல்லது மாட்சியின் அடையாளம். அதைக் களைந்துவிட்டு அடிமையின் ஆடையான துண்டை இடுப்பில் கட்டிக்கொள்கின்றார் இயேசு.

4. குவளையில் தண்ணீர் எடுத்தல்

தண்ணீர் என்பது தூய்மையின் அடையாளம் மட்டுமல்ல. மாறாக, அது தூய்மையாக ஆக்கும் தகுதி கொண்டது. ஆக, இந்த நிகழ்வை வெறும் அடையாளமாக செய்யாமல், பயன்படு நிகழ்வாகவே செய்கின்றார்.

5. பாதங்களில் தண்ணீர் ஊற்றி பாதங்களை நனைத்தல் அடிமைகளின் வேலை. மேலிருப்பவருக்கு கீழிருப்பவர் செய்யும் வேலை. இவ்வளவு நாள் இவர்களுக்கு ஆண்டவராகவும், போதகராகவும் மேலிருந்த இயேசு இன்று மேல்-கீழ் நிலையை கீழ்-மேல் நிலை என்று புரட்டிப் போடுகின்றார்.

6. துண்டால் துடைத்தல்

துடைத்தல் சீடர்களின் தயார்நிலையைக் குறிக்கின்றது.

கூட்டியக்கத் திருஅவையின் மூன்று கூறுகளாக நாம் காண்கிற தோழமை (ஒன்றிப்பு), பணி, பங்கேற்பு ஆகியவற்றுக்கான நெறியை இயேசு பாதம் கழுவும் நிகழ்விலிருந்து கற்றுக்கொள்கிறோம்.

(1) தோழமை அல்லது ஒன்றிப்பு

ஆண்டவராகிய இயேசு இறுதி இராவுணவில் தம் சீடர்களிடம், ‘உங்களை நான் நண்பர்கள் என்றேன்’ என்கிறார். நட்பின் அடையாளமாக நடந்தேறுகிற பாதம் கழுவும் நிகழ்வில், இயேசு தம் தோழமை அல்லது ஒன்றிப்பை வெளிப்படுத்துகிறார். ஆண்டவரும் போதகருமாக இருக்கிற இயேசு நண்பராக, தம் சக நண்பர்களின் பாதங்களைக் கழுவுகிறார். இந்நிகழ்வில் தரப்படுகிற அன்புக் கட்டளை, பாதம் கழுவும் செயலின் நீட்சியாக இருக்கிறது.

(2) பணி

“ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்” எனச் சொல்கிற இயேசு, ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவுதலே தம் சீடர்களின் முதன்மையான பணி என அறிவுறுத்துகிறார். ஒத்தமைவு நற்செய்திகளில் - மத்தேயு, மாற்கு, லூக்கா - நற்கருணையை ஏற்படுத்துகிற இயேசு, ‘இதை என் நினைவாகச் செய்யுங்கள்’ எனத் தம் சீடர்களுக்குக் கட்டளையிடுகிறார். யோவான் நற்செய்தியில் வழங்கப்படும் கட்டளை சற்றே மாறுபட்டதாகத் தெரிந்தாலும் அதன் உட்பொருள் ஒன்றுதான். பணி செய்வதில் சீடர்கள் இயேசுவை நினைவுகூர வேண்டும்.

(3) பங்கேற்பு

பேதுருவிடம் இயேசு வந்தபோது, அவர் தம் காலடிகளைக் கழுவுவதற்கு அனுமதி மறுக்கிறார் பேதுரு. ‘நான் உன்

காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை’ என மொழிகிறார் இயேசு. மற்றவர்களுடைய காலடிகளைக் கழுவத் தயாராக இருக்கும் நாம், நம் காலடிகளையும் மற்றவர்களை நோக்கி நீட்ட வேண்டும். மற்றவர்களின் பங்கேற்பை வரவேற்பதற்கு முன்னர், நான் என்னுடைய பங்கேற்பை நினைவுகூர வேண்டும். என் தனிப்பட்ட திறமைகள், தனிவரங்கள், கொடைகள் அனைத்தையும் குழுமத்தின் வளர்ச்சிக்காக நான் பயன்படுத்த வேண்டும். அனைவரையும் உள்ளடக்கியே திருஅவையே கூட்டியக்கத் திருஅவை என மொழிகிற நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விளிம்புநிலையில் இருப்பவர்களையும் வெளியே இருப்பவர்களையும் அழைத்துக்கொண்டு வந்து அவர்களுடைய பங்கேற்பைக் கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

இனியவர்களே, இன்றைய நாளில் நாம் கொண்டாடுகிற பாதம் கழுவும் சடங்கு, வெறும் சடங்காகவோ, காட்சியாகவோ அமைந்துவிட வேண்டாம். தலைகீழ் மாற்றத்தை சீடர்களிடம் ஏற்படுத்திய இந்நிகழ்வு கூட்டியக்கத்துக்கான நம் பயணத்திலும் நம்மில் ஏற்படுத்தட்டும்! தோழமையை வளர்த்து, பங்கேற்பை ஊக்குவித்து, பணியை வளர்த்தெடுப்போம்! இன்றும்! என்றும்!

சீடர்களின் பாதங்களை இயேசு கழுவியதன் வழியாக நமது பாவங்களைக் கழுவுகின்றார். பணிவிடை பெற அல்ல பணிபுரிய என்ற தன் வாழ்விற்கான இலக்கணத்தை உரக்கக் கூறுகின்றார். தன்னையே உணவாக் கொடுத்து நம் வாழ்விற்கு உயிர் கொடுத்தார். மரியின் மகனாய் மனுக்குலம் தளைக்க தன் வாழ்வை பலியாக்கிய இயேசுவின் தியாக அன்பை அனுதினமும் சுவைப்போம். பாடுகளில் அவரோடு பயணிக்கும் நாம் உயிர்ப்பின் மகிழ்விலும் அவருடன் இணைவோம் என்ற நம்பிக்கையில் வாழ்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 March 2024, 14:31