தேடுதல்

இயேசுவே இவ்வுலகின் ஒளி இயேசுவே இவ்வுலகின் ஒளி  (ANSA)

பல்சுவை - நீங்களே மண்ணுலகிற்கு உப்பும் ஒளியும்

உணவில் சேர்க்கப்படுகின்ற உப்பு தன்னையே கரைத்து உணவுக்குச் சுவையூட்டுகிறது. விளக்குத் தண்டில் வைக்கப்பட்ட விளக்கு வீட்டிலிருக்கின்ற பொருள்கள் தெரியும் விதத்தில் ஒளிபரப்பும், ஆனால் தன்னை வெளிச்சமிட்டுக் காட்டாது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்பு நண்பர்களே! மத்தேயு நற்செய்தியில் வருகின்ற ''மலைப் பொழிவு'' என்னும் பகுதியில் இயேசு கூறிய விளக்கு மற்றும் உப்பு குறித்து இன்றைய பல்சுவையில் காண்போம். கடந்த வியாழனின் விடை தேடும் வினாக்கள் என்ற தொடரில் உப்பு குறித்துக் கண்டோம். இப்போது இயேசுவின் உப்பு மற்றும் ஒளி பற்றிய படிப்பினைகள் குறித்து ‘கிறிஸ்துவுக்குள் நாம்’ என்ற தலைப்பில் திருச்சி திரு. அல்போன்ஸ் அவர்களின் கருத்துக்களை தன் குரலில் தருகின்றார் கோடம்பாக்கம் திரு. எம். சார்லஸ்.

உலகின் உப்பும் ஒளியும்
  • உப்பும் ஒளியும் குறித்த சிந்தனைப் பகிர்வைக் கேட்டீர்கள்.
  • எழுதியவர் திருச்சி திரு. அல்போன்ஸ். குரல் கொடுத்து உதவியவர் கோடம்பாக்கம் திரு. எம். சார்லஸ். தயாரிப்பு அன்பின்மடல் திரு. நவராஜன்.

மலைப் பொழிவின்போது இயேசு தம் சீடரை நோக்கி, ''நீங்கள் மண்ணுலகிற்கு உப்பு...நீங்கள் உலகிற்கு ஒளி'' (மத் 5:13-14) என்று கூறுகிறார். ''உப்பில்லாப் பண்டம் குப்பையிலே'' என்னும் பழமொழிக்கு ஏற்ப, உப்பு உணவுக்குச் சுவை சேர்ப்பதை நாம் அறிவோம். பொருள்கள் கெட்டுவிடாமல் பாதுகாக்கவும், தூய்மையாய் இருக்கவும் உப்பு பயன்படுகிறது. இஸ்ரயேல் மக்கள் நடுவே உடன்படிக்கை செய்யப்பட்டபோதும், வழிபாட்டின்போதும் உப்பு இடம்பெற்றதாக விவிலியத்தில் பார்க்கிறோம். இயேசு, தன்னைப் பின்பற்றுவோர் உப்பைப் போல இந்த உலகிற்குச் சுவை கூட்ட வேண்டும் என அழைப்பு விடுக்கிறார். இதன் வழியாக, மக்கள் கடவுளின் அன்பைச் சுவைக்க முடியும். சீடர்கள் இவ்வுலகைத் தூய்மைப்படுத்தி, அது கெட்டுப் போகாமல் பாதுகாக்க வேண்டும் என்பது இயேசுவின் அழைப்பு. உப்பு எவ்வாறு தன் காரத்தை இழந்துவிடக் கூடாதோ, அதுபோல சீடர்களும் துன்பங்களுக்கு நடுவே தங்கள் உள உறுதியை இழந்துவிடலாகாது என கூறும் இயேசு, மேலும்,  சீடர்களை ''உலகுக்கு ஒளி'' என கூறுகிறார். அதாவது, தம் சீடர்கள் ஏழையரின் உள்ளத்தவராய், இரக்கப் பண்பு நிறைந்தவராய், பிறருக்கு உதவுகின்ற வேளையில் உலகுக்கு ஒளியாக விளங்குவார்கள் என்று எடுத்துரைக்கிறார். பிறரை அடக்கி ஆளுகின்ற போக்கு இல்லாமல்,  பிறருடைய வாழ்வை ஒளிமயமானதாக மாற்ற உழைக்க வேண்டும் என கேட்கிறார் இயேசு. இவ்வாறு, இயேசு தம் சீடர்கள் பிறருக்குப் பயன்படுகின்ற உப்பாகவும் ஒளியாகவும் இருக்கும்படி அழைக்கிறார். உணவில் சேர்க்கப்படுகின்ற உப்பு தன்னையே கரைத்து உணவுக்குச் சுவையூட்டுகிறது. அதுபோல, விளக்குத் தண்டில் வைக்கப்பட்ட விளக்கு வீட்டிலிருக்கின்ற பொருள்கள் தெரியும் விதத்தில் ஒளிபரப்பும், ஆனால் தன்னை வெளிச்சமிட்டுக் காட்டாது. இவ்வாறுதான் சீடர்களும் தாங்கள் புரிகின்ற நற்செயல்கள் வழியாகக் கடவுளுக்குப் பெருமை சேர்க்கவேண்டுமே ஒழிய, தம்மையே முன்னிறுத்தக் கூடாது என்பது எதிர்பார்க்கப்படுகின்றது. இயேசுவின் சீடர்கள், இன்றைய உலகம் கடவுளின் அன்பைச் சுவைக்க உதவுகின்ற ''உப்பாக'' மாற வேண்டும்; உலக மக்கள் கடவுளை நோக்கி நடந்து செல்ல வழிகாட்டுகின்ற ''ஒளியாக'' விளங்க வேண்டும். கிறிஸ்தவர், கத்தோலிக்கர் தங்களுக்கென ஒரு தனித்தன்மை கொண்டு, உப்பாகவும் ஒளியாகவும் செயல்பட அழைக்கப்படுகிறார்கள்.

அன்பு நெஞ்சங்களே, உப்பாகவும் ஒளியாகவும் இருக்க அழைப்புவிடப்படும் இதே மலைப்பொழிவுப் போதனையில்தான் இயேசு, நாம் நம் வாழ்வுக்காக சேர்த்துவைக்க வேண்டிய  செல்வம் குறித்து எடுத்துரைக்கிறார். ஒளியாகவும் உப்பாகவும் நாம் விளங்க வேண்டுமெனில் நமது வாழ்வு ஓர் எடுத்துக்காட்டான வாழ்வாக இருக்க வேண்டும். பூச்சிகள் அரிக்கும், மற்றும் கள்வர்கள் கன்னம் வைக்கக் காத்திருக்கும் செல்வத்தைத் தேடித்தான் இன்றைய உலகம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இயேசுவோ, விண்ணகத்தில் செல்வத்தைச் சேர்த்துவைக்கும்படி கூறுகிறார். ஏனெனில் நம் செல்வம் எங்குள்ளதோ அங்கேதான் நம் மனமும் இருக்கும். இவ்வுலகச் செல்வம் நோக்கி ஓடினால், அது தருவது துயரம் மட்டுமே. கடவுளைத் தேடி ஓடினால் அது தருவது அமைதி, நிம்மதி. இத்தவக்காலத்தில் இதை உணர்ந்து நம் வாழ்வை செம்மைப்படுத்துவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 March 2024, 13:30