தேடுதல்

காசாவில் போர் பாதிப்புக் காட்சிகள் காசாவில் போர் பாதிப்புக் காட்சிகள்   (AFP or licensors)

காசாவில் போரை நிறுத்துங்கள்! : அயர்லாந்து ஆயர்கள் வேண்டுகோள்!

இருள் சூழ்ந்திருக்கும் புனித பூமியில், ஓர் ஒளியைச் சுடர்விடச் செய்ய வல்லமை கொண்ட நம் இறைத்தந்தையையிடமும், உலகத்தின் ஒளியாக விளங்கும் நம் இயேசுவிடமும் மன்றாடுவோம் : அயர்லாந்து ஆயர்கள்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அயர்லாந்தின் கத்தோலிக்க ஆயர்கள் என்ற முறையில், காசாவில் முழுமையான போர்நிறுத்தத்திற்கான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இதயப்பூர்வமான வேண்டுகோளை எதிரொலிக்கும் விதமாக, நாங்களும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுகின்றோம் என்று அறிக்கையொன்றில் கூறியுள்ளதாக ICN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அயர்லாந்தின் Maynooth நகரில் நடைபெற்று வரும் அந்நாட்டிற்கான ஆயர் பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தில் இத்தகையதொரு அழைப்பை விடுத்துள்ளதுடன், காசாவில் அவசர மற்றும் முழுமையான போர்நிறுத்தம் வேண்டுமெனவும், புனித பூமியில் கொலை, காயம் மற்றும் சொத்துக்களை அழிக்கும் அன்றாடப் பயங்கரவாதச் செயல்களுக்கு உடனடியாக முடிவுகட்ட வேண்டுமெனவும் அந்நாட்டு ஆயர்கள் இஸ்ரயேல் அரசிற்கு விண்ணப்பித்துள்ளனர் என்றும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாலஸ்தீனியர்கள் உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை பாதுகாப்புத் தேவைகளுக்கு முழுமையான மற்றும் தடையின்றி அணுகுவதை உறுதி செய்வதில் அடிப்படை மனித மற்றும் பன்னாட்டுக் கோரிக்கைகளுக்கு இணங்குமாறு இஸ்ரேலிய அரசை அந்நாட்டு ஆயர்கள் அவ்வறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அச்செய்திக் குறிப்புக் குறிப்பிடுகின்றது.

அதேவேளையில், அனைத்துப் பிணையக் கைதிகளையும் விடுவிக்கவும், இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதல்களை நிறுத்தவும் ஹமாஸை தாங்கள் கேட்டுக்கொள்வதாகவும், அதேபோன்று, மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், பொதுவெளியில் அதிக கவனத்தை ஈர்ப்பதில்லை என்பதும் கண்டிக்கத்தக்கது என்றும், இந்தப் பகுதியில் நடப்பதை தார்மீக முறையில் நியாயப்படுத்த முடியாது என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாவும் கூறுகிறது அச்செய்தி நிறுவனம்.

இந்தத் தவக்காலத்தில், இஸ்லாமியர்கள் இரமலான் மற்றும் யூதர்கள் பஸ்கா விழாவிற்குத் தயாராகும்போது, ​​கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் பாஸ்கா மறைபொருளைக் கொண்டாடுவதற்கு கிறிஸ்தவர்களாகிய நாங்கள் தயாராகி வருகின்றோம் என்றும் ஆயர்கள் அவ்வறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ளதாகவும் அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 March 2024, 14:11