தேடுதல்

தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் கிறிஸ்தவர்கள் (கோப்புப் படம்) தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் கிறிஸ்தவர்கள் (கோப்புப் படம்)   (AFP or licensors)

இந்தியாவில் 11 மாநிலங்களில் கிறிஸ்தவம் பெரிதும் துயருறுகிறது!

பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்துவதற்கான ஆளும் கட்சியின் கருத்தியல், சிறுபான்மை சமூகங்கள் பாதுகாப்பற்றதாக உணரும் இந்தச் சூழ்நிலையைக் கொண்டு வந்ததாகத் தெரிகிறது : UCF அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் A.C. மைக்கேல்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பெரும்பான்மையான இந்திய மாநிலங்கள் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாகச் செயல்படுகின்றன என்று தெற்காசிய நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் துன்புறுத்தல்கள் குறித்த அண்மைய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம்.

மார்ச் 21, இவ்வியாழனன்று வெளியிட்டப்பட்ட அறிக்கையொன்றில் இவ்வாறு கூறியுள்ள புதுதில்லையை தளமாகக் கொண்டு செயல்படும் UCF எனப்படும் ஒருங்கிணைந்த கிறிஸ்தவ அமைப்பு,  மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 19 மாநிலங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கையை கடைப்பிடிப்பதற்காக உயிருக்கு அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றனர் என்று அவ்வறிக்கை சுட்டிக்காட்டுவதாக உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.

இந்த ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி வரை, ஏறத்தாழ 122 கிறிஸ்தவர்கள் மத மாற்றம் செய்ததாகப் பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அதே காலகட்டத்தில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான 161 வன்முறைச் சம்பவங்கள் அதன் உதவிமைய எண்களில் பதிவாகியுள்ளதாக UCF தெரிவித்துள்ளது என்றும் கூறுகிறது அச்செய்திக் குறிப்பு.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள UCF அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் A.C. மைக்கேல்  அவர்கள், நாட்டிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு இது அதிகம் கவலைதரும் ஒரு விடயம் என்றும், பிஜேபி ஆட்சி செய்யும் 11 மாநிலங்களிலும் மதமாற்றத் தடைச்சட்டம் அமலில் உள்ளதுடன், இது தவறாகப் பயன்படுத்தப்பட்டு கிறிஸ்தவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்துவதற்கான ஆளும் கட்சியின் கருத்தியல், சிறுபான்மை சமூகங்கள் பாதுகாப்பற்றதாக உணரும் இந்தச்  சூழ்நிலையை கொண்டு வந்ததாக தெரிகிறது என்று மைக்கேல் அவர்கள்  மார்ச் 21, இவ்வியாழனன்று, யூகான் செய்திக்குத் தெரிவித்ததாகவும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 March 2024, 14:51