தேடுதல்

புனித வார துவக்கம் புனித வார துவக்கம்  (AFP or licensors)

தடம் தந்த தகைமை - உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்

இயேசுவின் சீடத்துவ நெறி மிகக் கடினமானது, கரடுமுரடானது. உண்மையிலும் நன்மையிலும் வேரூன்றி வாழ்கையில் உலகம் நம்மை உதறித்தள்ளும், உருக்குலைக்கும்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால், உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும் (யோவா 16:20) என தன் சீடர்களிடம் கூறுகிறார் இயேசு.

உலகம் பல பரிசுகளை உள்ளடக்கிய வணிகக்கூடம். அதனுள் நல்ல பரிசுகளும் உண்டு, கெட்ட பரிசுகளும் உண்டு. இயேசுவின் நெறியில் நடந்தால் எதிர்ப்பு, ஏளனம், பழித்தல், பகைத்தல், ஒதுக்குதல், ஒடுக்குதல், அவமதித்தல், அழச்செய்தல், பெயர் பறித்தல், உயிர்

எடுத்தல் எனும் பரிசுகளைத் தாராளமாகத் தரும். அதேவேளையில், அறநெறி தவிர்த்து வேடமிட்டு நடந்தால், பதவி, பாராட்டு, புகழ், பணம், கௌரவம், மதிப்பு எனும் பரிசுகளைத் தந்து உயர்த்தி நிற்கும். இயேசுவின் சீடத்துவ நெறி மிகக் கடினமானதும் கரடுமுரடானதும் ஆகும். உண்மையிலும் நன்மையிலும் வேரூன்றி வாழ்கையில் உலகம்

நம்மை உதறித்தள்ளும், உருக்குலைக்கும். ஆயினும் நிலைகுலையாது வாழ்தலே உண்மைச் சீடரின் உயர்ந்த உள்ளம். இறைநெறியில் வாழ்ந்து இறக்கும்வரை துன்புற்றாலும் மனதுக்குள் பிறக்கும் ஆனந்த நிறைவே கடவுள் தரும் மாபெரும் பரிசு. ஊரும், உலகமும் போற்றவேண்டி வாழ்வது உண்மை வாழ்க்கை அன்று. உள்ளத்துள் வாழும் கடவுளின் நெறியில் நாளும் நடப்பதே நிறைவான வாழ்வு, நிலையான வாழ்வு.

துன்பத்திலும் இன்பத்திலும் நினைவில் கொள்ள வேண்டியது, இந்த நிமிடம் நிரந்தரம் இல்லை என்பதை.

இறைவா! எத்துயரத்திலும் நீர் என் துணையாயிருக்கிறீர் என்ற நம்பிக்கையில் துணிவோடு பயணிக்கப் பலம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 March 2024, 13:34