தேடுதல்

மலையேறி வழிபடுதல் மலையேறி வழிபடுதல்  (ANSA)

தடம் தந்த தகைமை - உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுதல்

தோல்வி - துன்பம் - போராட்டம் - இழப்பு ஆகியவற்றை அறிந்து அவற்றின் ஆழத்திலிருந்து வெளியேறும் வழியைக் கண்டவர்களே மிக அழகான மனிதர்கள்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

சமாரியப்பெண் இயேசுவிடம், “ஐயா, எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால், நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே” என்கிறார்.

இயேசு அவரிடம், “அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்........ உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர்.(4 20-21,23) என்று பதிலளிக்கிறார்.

“யூதர்” எனப் பார்க்கப்பட்டு “ஐயா” என வழிப்போக்கராக அழைக்கப்பட்டு “எம் தந்தை யாக்கோபைவிடப் பெரியவரோ” எனக் கேள்விக்கு உட்படுத்தப்பட்ட இயேசு, இப்போது சமாரியப் பெண்ணால் “இறைவாக்கினர்” எனக் கண்டுகொள்ளப்பட்டார். நல்ல உரையாடல்

எப்போதும் உண்மையின் ஆழத்திற்கு அழைத்துச் செல்லும். அது புதுச் செயல்பாடுகளுக்கான வாசல்களைத் திறக்கும். தண்ணீர் பற்றிய உரையாடல் தவழ்ந்து ஓடி எருசலேம் வழிபாட்டில் வந்து நிற்கிறது.

தோல்வி - துன்பம் - போராட்டம் - இழப்பு ஆகியவற்றை அறிந்து அவற்றின் ஆழத்திலிருந்து வெளியேறும் வழியைக் கண்டவர்களே மிக அழகான மனிதர்கள். இயேசுவோடு நடந்த உரையாடலின் விளைவாக சமாரியப் பெண் தண்ணீர்ப் பகிர்வைக் கடந்து வாழ்வு, வழிபாடு என விவாதிக்கத் தொடங்கினார். அவை அவருக்குள் அமுங்கிக் கிடந்த தேடலின் கேள்விகள். உருவமற்ற கடவுளை உள்ளத்துக்குள் இருத்தி வழிபடுதலே உண்மை வழிபாடு என்று சொன்ன இயேசுவின் கூற்று நம்முள் எப்போது மெய்ப்படும்?

நம் மதிப்பீடுதான் நம்மை மதிப்பிடுகிறது, அதோடு நம்மை வரையறுக்கவும் செய்கிறது.

இறைவா! நீர் என்றும் எப்போதும் என் உள்ளத்தில் வாழ்கின்றீர். இதனை உணர்வதே வழிபாடு எனப் புரிய வரம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 March 2024, 12:36