தேடுதல்

இறைவனையும் அவர் வழங்கிய நற்செய்தியையும் பற்றிக்கொள்ளல் இறைவனையும் அவர் வழங்கிய நற்செய்தியையும் பற்றிக்கொள்ளல்  (AFP or licensors)

விடை தேடும் வினாக்கள் - வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

ஒன்றிற்கு ஈடாக, அல்லது ஈடுபடுத்தும்விதமாகக் கொடுக்கப்படுவதுதான் இழப்பீடு. அதேவேளை, ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றைப்பெற இயலும் என்பதும் உண்மை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? (மத்தேயு 16:26) என்ற இயேசுவின் கேள்விதான் இன்று நாம் நோக்க உள்ளது.

இந்த இயேசுவின் கேள்வியை நினைத்துப் பார்க்கும்போது, இயேசு சபையின் புனித லொயோலா இஞ்ஞாசியார், புனித  பிரான்சிஸ் சவேரியார் ஆகியோர் உடனடியாக நினைவுக்கு வருகின்றனர். தூய இஞ்ஞாசியார் அவர்கள் தூய சவேரியாருக்கு அடிக்கடி இந்த இறைவார்த்தையைச் சொல்லி வந்ததால், இதன் அர்த்தம் உணர்ந்து, தான் ஆற்றிய பேராசிரியப் பணியை விடுத்து மறைப்பணி செய்ய சவேரியார் புறப்பட்டார் என்பது வரலாறு. வாழ்க்கையில்  நம் எல்லாருக்கும் ஒரு திருப்புமுனை உண்டு என்பதுபோல், அன்று தூய சவேரியாருக்கு திருப்புமுனையைக் கொடுத்தது இந்த வரிகளே. உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை, ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை என்பதை ஆழமாக உள்ளத்தில் உணர்ந்து ஏற்றுக்கொண்டு, அழியும் செல்வம் சேர்ப்பதா! அழியா ஆன்மாவைக் காப்பதா! என்ற கேள்விக்கு பதிலாய் வாழ்ந்தவர்தான் புனித சவேரியார்!

இயேசுவின் இன்றைய கேள்விகளுக்குள் செல்லும் முன்னர் இந்த கேள்வி கேட்கப்பட்ட சூழலைப் புரிந்துகொள்ள முதலில் முயல்வோம். 

இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு எடுத்துரைக்கத் தொடங்குகிறார். பேதுருவோ அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டு, “ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது” என்கிறார். ஆனால், இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, “என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில், நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்கிறார். பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? என்ற கேள்விகளை முன்வைக்கிறார்.

இங்கு, வாழ்விற்கு ஈடாக எதை நாம் கொடுக்க முடியும்? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. பொருட்களுக்கு இழப்பீடாக பணத்தைக் கொடுத்துவிடலாம். ஆனால், இழப்பீடு தர முடியாத ஒன்று இருக்கிறது என்றால், அது நிச்சயம் வாழ்வு தான். பொன் கோடி கொடுத்தாலும், பதவி, புகழ், உயரிடம் பெற்றாலும், நமது வாழ்வை இழந்துவிட்டால், அதற்குமேல் இழப்பதற்கு வேறு எதுவுமில்லை.

இழப்பீடு என்பது இழப்பிற்கு சமமான ஒன்றைக் கொடுப்பதாகும். நாம் ஏதாவது பொருளை இழந்து விட்டால், அல்லது மழை வெள்ளத்தில் நமது பொருட்களை இழந்துவிட்டால், அரசு நமக்கு இழப்பீடு தருவதைப் பார்க்கிறோம். அதேபோலத்தான், விபத்திற்கென்று இழப்பீடு, மருத்துவ இழப்பீடு என்று, இதில் பல வகைகள் அடங்கியிருக்கின்றன. ஆகவே, ஒன்றிற்கு ஈடாக, அல்லது ஈடுபடுத்தும்விதமாகக் கொடுக்கப்படுவதுதான் இழப்பீடு. அதேவேளை, ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றைப்பெற இயலும் என்ற உண்மையைப் பலநேரங்களில் மறந்து விடுகிறோம். எதற்காக எதை இழப்பது? என்பதில்கூட நாம் குழம்பிப்போய்விடுகிறோம்.

மானிட வாழ்வின் மிகப் பெரிய மறைபொருள்களில் ஒன்று இழப்பு. யாரும் எதையும் இழக்க ஆவல் கொள்வதில்லை. ஆனால், சிலவற்றை சில நேரங்களில் இழக்கும்போது, அந்த இழப்புக்கு கைம்மாறாக நாம் பெறும் இன்பம், இழந்ததைவிட பன்மடங்கு மதிப்பு மிக்கது, மேலானது என்பதை அனுபவத்தின் மூலமாகத்தான் அறிய முடியும். ஞானிகள், அறிஞர்கள், மாமனிதர்கள், குறிப்பாக கிறிஸ்தவ மறைசாட்சிகள் இந்த மறைபொருளை, வாழ்வின் இரகசியத்தை அறிந்திருந்தனர். எனவே, இழப்பதற்கு அஞ்சாமல் இழக்க முன் வந்தனர், பல வேளைகளில் தம் உயிரையும்கூட! இயேசு இன்றைய கேள்வி வழி இந்த ஞானத்தை நமக்குக் கற்றுத் தருகிறார். தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டு தம்மையே அழித்துக்கொள்கிற எவரும் வாழ்வடைவர், என்கிறார்.

"ஒருவர் எதையாவது பெறவேண்டுமெனில், வேறு எதையாவது இழக்கவேண்டியிருக்கும்" என்பது இங்கு ஒளிவு மறைவின்றி தெள்ளத் தெளிவாக சொல்லித் தரப்படுகின்றது. இயேசு நம்மைப் பார்த்துக் கேட்கும் கேள்விகளை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள அவரே சில சந்தர்ப்பங்களில் கூறிய சில வார்த்தைகளை இங்கு பொருத்திப் பார்ப்போம்.

அறிவற்ற செல்வன் உவமையின் இறுதியில், பல்லாண்டுகளுக்கு செல்வம் சேர்த்த செல்வனை நோக்கி கடவுள், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்று கேட்டார் என உரைக்கிறார் இயேசு (லூக்கா 12:20).

உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது (மத்தேயு 5:29) என பிறிதொரு இடத்தில் கூறுகின்றார் இயேசு.

மேலும், செல்வரும் இலாசரும் உவமையில், “அதற்கு ஆபிரகாம், ‘மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்” (லூக்கா 16:25) என்று இயேசு கூறுவதைக் காண்கிறோம்.

இன்னுமொரு இடத்தில் இயேசு, "கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால், அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்" (யோவான் 12: 24-25) என்கிறார்.

கிறிஸ்துவுக்கென வாழ்ந்த பவுல் அடியார், இழப்பதையும், பெறுவதையும் குறித்து, இயேசு கூறியதை, தன் வாழ்வின் அனுபவமாகப் பகிர்ந்துகொள்வதையும் பார்க்கிறோம்.

எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின்பொருட்டு இழப்பு எனக் கருதினேன். உண்மையில், என்னைப் பொருத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன் (பிலி 3: 7-8) என்கிறார் தூய பவுல்.

கடவுள் இந்த அழகான வாழ்வை மட்டும் நமக்குக் கொடுக்கவில்லை, அதை நம் விருப்பம்போல் வாழ்வதற்கான சுதந்திரத்தையும் நமக்குக் கொடுத்திருக்கிறார். எப்படி வாழப்போகிறோம்? என்பதை நிர்ணயிக்கப் போவது நாம் தான். நம் முன்னால் இரண்டு முதன்மையான வழிகள் இருக்கின்றன. இரண்டுமே, நாம் செல்ல வேண்டிய இலக்கை அடையக்கூடிய வழிகள் என்ற நிலையில், எது ஆபத்தில்லாத வழியோ, எது நமக்கு துன்பம் தராத வழியோ, அதைத்தான் தேர்ந்தெடுப்போம். ஒருவேளை, மற்றொரு வழி துன்பம் தருகிற வழியாக இருந்து, அந்த துன்பம் தருகிற வழியில் நாம் ஒரு புதிய பாதையை உருவாக்க இயலுமானால், அதனால் பல மக்கள் பயன்பெறுவார்கள் என்ற நிலை இருந்தால், நாம் நமது துன்பத்தைப் பார்ப்போமா? அல்லது, நமது துன்பத்தால் பயன்பெறக்கூடிய மக்களை நினைத்துப் பார்ப்போமா? இதில் தான், நாம் நமது வாழ்வை எப்படி வாழப்போகிறோம் என்பதன் இரகசியம் அடங்கியிருக்கிறது.

வாழ்வு என்பது இன்பமும், துன்பமும் நிறைந்தது. இரண்டுமே நிரந்தரமானவை அல்ல. வாழ்வில் துன்பம் வருகிறபோது சோர்வடைவதும், மகிழ்ச்சி வரும்போது துள்ளிக் குதிப்பதும் மனித இயல்பு. ஆனால், நாம் பிறருக்காக துன்பத்தைத் தாங்குவதிலும் மகிழ்ச்சி அடைய முடியும் என்கிறது கிறிஸ்தவம்.

எவ்வாறு ஒன்றுக்கொன்று முரண்பாடான பொருட்களை, விடயங்களை, தத்துவங்களை, கொள்கைகளை நம் வாழ்வில் தினம் தினம் பார்த்துவருகிறோமோ, அதுபோல்தான் இருவேறு உலகங்களும் நம் முன் நிற்கின்றன. ஒன்று வெளியில் இருக்கிறது, மற்றொன்று உள்ளே இருக்கிறது. வெளியே உள்ளதற்குப் பெயர் உலகம். உள்ளே உள்ள உலகத்திற்குப் பெயர் ஆன்மா அல்லது வாழ்வு என நாம் புரிந்து வைத்திருக்கிறோம். வெளியே உள்ள உலகத்தை முழுவதுமாக ஒருவர் தமதாக்கிக் கொண்டாலும், உள்ளே உள்ள உலகம் தமதாக்கப்படவில்லையென்றால் அது அவருக்கு இழப்பு தான். அந்த இழப்புக்கு ஈடாக ஒருவர், தான் வெளியில் பெற்ற எதையும் அவரால் கொடுக்க முடியாது. இன்னும் கொஞ்சம் விரிவாகப் பாருங்கள். நாம் உலகம் முழுவதும் பயணம் செய்திருந்தாலும், நாம் நம் வாழ்வில் செல்லும் மிக நீண்ட பயணம் நம் உள்மனப் பயணம்தான். வெளியே தேடும் தேடல் நமக்கு நிறைவு தருவதேயில்லை. ஒன்று கிடைக்க மற்றொன்றின் மேல் ஆசை என இந்தப் பயணம் தொடர்கிறது. பொருள் மேலான நம் ஆசை, அதை அனுபவிக்க ஆசை, அந்த பொருளைப் பாதுகாக்க ஆசை என தொடர்ந்துகொண்டேச் செல்லும். இது மட்டுமா,  பின்னாலேயே நிழல்போல வெற்றிடமும் தொடர்ந்து கொண்டே வரும். இங்கு ஒன்றை நாம் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். மகிழ்ச்சி என்பதும் வாழ்வு என்பதும் ஓர் உள்மன வேலை. அதை வெளியே எதிர்பார்ப்பதில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. நம்மிடம் இழக்க ஒன்றும் இல்லை என்று நினைப்பவர்கள் எதைக் குறித்தும் பயப்படுவதில்லை. நம் உள் இருக்கும் நிறைஒளியை நம்மேல் படர விடுவதே வாழ்வைப் பெற்றுக் கொள்வது! அதாவது, நம் உள்மனதின் குரல் கொண்டு நாம் இவ்வுலகை ஆளவேண்டுமேயொழிய, எதிர்மாறாக அல்ல. இதற்காக, ''உலகத்தையும்'' ''ஆன்மாவையும்'' ஒன்றுக்கொன்று எதிரியாகக் காண்பித்து, ஆன்மாவைக் காத்துக்கொள்ள நாம் உலகத்தைக் கைவிட வேண்டும் என்று நாம் தவறான அர்த்தம் கொண்டுவிடக்கூடாது. ஏனெனில்  இயேசு வாக்களிக்கின்ற புதிய வாழ்வு ஆன்மாவைச் சார்ந்தது மட்டுமல்ல, அந்த வாழ்வு ''முழு மனிதரை'' உள்ளடக்குகின்ற வாழ்வு. இரண்டு உலகமும் தேவை. அதேவேளை அவைகளின் சமநிலை புரிந்ததாக வாழ்வு அமைய வேண்டும்.

குழந்தையாய் இவ்வுலகிற்கு வரும்போது வெறுமையாய் வருகிறோம். அப்புறம் வரிசையாகச் சேர்த்துக்கொண்டே போகிறோம். உடை, உணவு, படிப்பு, உடைமைகள், நண்பர்கள், உறவினர்கள் என கூடிக்கொண்டேச் செல்கிறது. இறுதியில் ஒன்றுமில்லாதவர்களாகத்தான் தனியாக விடைபெறுகிறோம். இந்த இடைநிலையில் எத்தனை ஆசைகள், அவலங்கள். முக்கியமானவற்றை முதன்மைப்படுத்த தெரியாததால்

ஆன்மாவை இழந்து நிற்கும் நிலை. உடல் சார், மூளைசார், உள்ளம்சார் எதுவும் நமக்கு நிறைவைத் தருவதில்லை. அப்படியே அவை நிறைவைத் தருவனபோலத் தோன்றினாலும் விரைவிலேயே அவை சலிப்பையும் வெறுமையையும் தந்துவிடுகின்றன. சேர்த்துக்கொண்டேச் செல்லும்போது, அவை குறித்த கவலைகளும் பெருகுகின்றன. இருப்பவைகளைக் கொஞ்சம் குறைத்துப் பாருங்கள், மனதும் இலகுவாகும், வாழ்வும் எளிமையாகும்.

இழப்பது துன்பம் என்றால், அதை ஏற்கும் மனநிலையைப் பெறுவது இன்பம். புகழ்பெற்ற உளவியலாளர் விக்டர் ப்ராங்கிள் கூறுவார், ‘மனிதர் துன்பத்தினால் அழிக்கப் படுவதில்லை. மாறாக, துன்பத்தின் அர்த்தம் புரியாததனாலேயே அழிகின்றார்’ என்று.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 March 2024, 11:02