தேடுதல்

சிலுவையைச் சுமந்து நடந்திட தயாரா? சிலுவையைச் சுமந்து நடந்திட தயாரா?  (AFP or licensors)

விடை தேடும் வினாக்கள்: துன்பக் கிண்ணத்திலிருந்து குடிக்க இயலுமா?

தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர் என்றவர் இயேசு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, குருத்து ஞாயிறும், புனித வாரமும் நமக்கு மிக அருகிலேயே உள்ளன. தவக்காலத்தின் இறுதி நாட்களாகிய இத்தருணத்தில், இயேசு நம்மைப் பார்த்து கேட்கும் ஒரு கேள்வி குறித்து இன்று காண்போம். நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? என்று நம் ஒவ்வொருவரையும் பார்த்துக் கேட்கிறார் இயேசு.

இயேசு இந்த கேள்வியைக் கேட்ட சூழலை மத்தேயு நற்செய்தியும் மாற்கு நற்செய்தியுமே விவரிக்கின்றன. முதலில் மத்தேயு நற்செய்தியை எடுத்துக்கொள்வோம். இதில் யாக்கோபு

மற்றும் யோவானின் தாய், அதாவது செபதேயுவின் மனைவி சலோமி இயேசுவை அணுகி ஒரு விண்ணப்பத்தை முன்வைக்கிறார். இந்த சலோமியும், இயேசுவின் தாய் அன்னை மரியாவும் உறவுமுறையில் சகோதரிகள் என்பதை நாம் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

செபதேயுவின் மனைவி இயேசுவிடம் வந்து பணிந்து நின்று, “நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்” என்று வேண்டுகிறார். அதற்கு இயேசுவோ, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?” என்று கேட்கிறார். அவர்கள் “எங்களால் இயலும்” என்று பதிலுரைக்கின்றனர். இயேசு அவர்களை நோக்கி, “ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்” என்கிறார்......

பின் சிறிது நேரத்திலேயே சீடர்களிடம், உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” (மத் 20 22-28) என்று கூறுகிறார்.

இந்த நிகழ்வுக்கு இன்னொருப் பின்னணியும் இருக்கிறது. யாகப்பர் மற்றும் யோவானின் தாய் இந்த விண்ணப்பத்தை வைப்பதற்கு முன்னர்தான் இயேசு தன் சீடர்களிடம், தன் பாடுகள் மற்றும் மரணம் குறித்து மூன்றாம் முறையாக முன்னறிவிப்புச் செய்கிறார்.

“மானிட மகன் தலைமைக் குருக்களிடமும், மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள். அவர்கள் அவரை ஏளனம் செய்து, சாட்டையால் அடித்து, சிலுவையில் அறையும்படி பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள். ஆனால், அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்” என்று சீடர்களிடம் இயேசு கூறுவதைக் காண்கிறோம்.

மத்தேயு நற்செய்தியில் விவரிக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்வுக்கும், அதாவது, யாக்கோபு மற்றும் யோவானுக்குரிய இடம் குறித்த நிகழ்வுக்கும், மாற்கு நற்செய்தியில் கூறப்பட்டிருக்கும் இதே நிகழ்வுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. மத்தேயு நற்செய்தியிலோ, தாய் சலோமி தன் இரு மகன்களுக்காக இயேசுவை நோக்கி விண்ணப்பிப்பதாக நாம் காண்கிறோம். ஆனால் மாற்கு நற்செய்தியில், செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவை அணுகிச் சென்று அவரிடம், இந்த விண்ணப்பதை முன்வைப்பதாக வாசிக்கின்றோம். விண்ணப்பிப்பவர் யார் என்பதுதான் மாறியிருக்கிறதேயொழிய, கேள்வி, பதில், நடந்தவை எல்லாமே வித்தியாசமின்றி அப்படியே உள்ளன.

இயேசுவின் தாய் மரியாவின் சகோதரி மகன்கள் இருவரும் தங்கள் தந்தை செபதேயுவுடனும் பணியாளர்களுடனும் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த இயேசு யாக்கோபிடமும் யோவானிடமும், என் பின்னே வாருங்கள் என்கிறார். உடனே அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள். இயேசுவின் பணிவாழ்வில், அவரோடு நெருக்கமாக இருந்த சீடர்களில் யாக்கோபு, யோவான் மற்றும் பேதுரு முக்கியமானவர்கள். இவர்கள் மூவரும்  இயேசுவோடு மிகவும் முக்கியமான தருணங்களில் உடனிருந்தவர்கள். தொழுகைக்கூடத் தலைவராகிய யாயிரின் மகளைக் குணப்படுத்தும்போது (மாற் 5: 37-48), இயேசுவின் உருமாற்றத்தின்போது (மாற் 9: 2-8), கெத்சமனி தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்தபோது (மத் 26:37) என பலவேளைகளில் இவர்கள் மட்டுமே அவரோடு நெருங்கியிருந்திருக்கின்றனர்.

இத்தகைய ஒரு பின்னணியில் இவர்கள் மூவரையும் குறித்து கொஞ்சம் எண்ணிப் பார்ப்போம். ஏற்கனவே புனித பேதுரு தலைமை இடத்திற்கு நியமிக்கப்பட்டுவிட்டார். அதாவது, விண்ணரசின் திறவுகோல்களை உன்னிடம் நான் தருவேன் என இதற்கு முன்னரே இயேசு கூறிவிட்டார். “உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” (மத் 16:16-19) என்ற வெகுமதி அவருக்கு வழங்கப்பட்டாகிவிட்டது. அப்படியானால், தனக்கு நெருக்கமாக இருந்த ஏனைய இரு சகோதரர்களுக்கும் என்ன தரப்போகிறார் என ஒரு தாய் எதிர்பார்ப்பது நியாயம் தானே. இயேசு கூப்பிட்டவுடன் அனைத்தையும் விட்டுவிட்டு, தங்கள் தொழிலை மட்டுமல்ல, தந்தையையும் விட்டுவிட்டு உடனடியாக பின்தொடர்ந்த இவர்களுக்கு என்ன கிடைக்கும் என எதிர்பார்ப்பதும், அவரின் இரு பக்கத்திலும் அவர்களை அமரவைக்க வேண்டும் என்று தாய் ஆசைப்படுவதும்  நியாயமானதுதான். ஆனால் இயேசுவோ, அது தன் கையில் இல்லை, தன் தந்தையே அதை தீர்மானிப்பவர் என்று கூறிவிடுகிறார்.

நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? எனக் கேட்கிறார் இயேசு. எவ்வாறு இவ்விரு சீடர்களும் ஆம் என பதில் சொன்னார்களோ, அதன்படியே, அவர்களின் பிற்கால சான்று வாழ்வும், மரணமும் இருந்தது.  இவர்கள் இருவரும் துன்பக் கிண்ணத்தை மனமுவந்து அருந்தினார்கள். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை  உரியவராக்குவர் (யோவா 12:25) என்ற இயேசுவின் வார்த்தைகள் இவர்கள் இருவரில் உண்மையானதை வரலாறு நமக்கு உரைக்கிறது. தன் சீடர்கள் தன்னுடன் இறுதிவரை இருக்கவேண்டுமானால், முதலில் சிலுவையை தூக்கி தன்னைப் பின்செல்ல வேண்டும் என்பதைத்தான், என் துன்பக்கிண்ணத்தில் அருந்துவது என்கிறார் இயேசு. சீடன் என்பவன் சிம்மாசனத்தில் அமரக்கூடியவனல்ல, மாறாக, சிலுவையைச் சுமக்கக் கூடியவன் என்பதை வலியுறுத்துகின்றார்.

சீடர்கள் மத்தியில் யார் பெரியவன்? யார் தலைவன்? என்ற போட்டி நிலவியதைப் பார்க்கின்றோம். அது மட்டுமில்லாமல் இயேசுவின் இறப்பிற்குப் பின் யார் வழிநடத்துவது? என்ற குழப்பமும் நிலவியது. அதனால் தான் இயேசு தொண்டு ஏற்பவர்களாக நீங்கள் இருக்கக் கூடாது. மாறாக, தொண்டு ஆற்றுபவர்களாக இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றார்.

‘பதவி மோகம்’ என்பது அரசியலில் மட்டுமல்ல, உலகின் அனைத்துப் பகுதிகளிலும், திரு அவையிலும் இன்று தலைவிரித்தாடுகிறது. பதவிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் இழிவான செயல்களை நமது கையில் எடுக்கத் தயங்குவதில்லை என்பதை அக்கால வரலாறும் இக்கால வரலாறும் படம்பிடித்துக் காட்டி நிற்கின்றன. இயேசு அன்று செபதேயுவின் மனைவிக்கும் மகன்களுக்கும் சொன்னதை இன்று மீண்டும் நம்மிடம் கூறுகிறார், "நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை". நாம் இறைவனிடம் என்ன கேட்கிறோம்?. வேலைவாய்ப்பு, சொந்த வீடு, சொந்த வாகனம், நல்ல பதவி உயர்வு, குழந்தைகளின் படிப்பு என அடுக்கிக்கொண்டேப் போகிறோம். அதுவும், இந்த உலகில் நாம் மட்டுமே இருக்கிறோம், நாம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்பது போல். இயேசு இதற்கு என்ன கூறுவார்?.  செபதேயுவின் மனைவிக்கு இயேசு சொன்ன பதில் நமக்கும் பொருந்துவதாக இருக்கும். "நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை" என்பார் இயேசு.

ஆம், முதலில், தாம் கேட்பது தன்னலம் நிறைந்த ஒரு வேண்டுதல் என்பது செபதேயுவின் மனைவிக்கும், மக்களுக்கும் தெரியவில்லை. இரண்டாவது, இந்த வேண்டுதல் இறைவனின் திருவுளத்துக்கு ஏற்றதா என்பதுவும் தெரியவில்லை. மூன்றாவது, தாங்கள் கேட்டது உண்மையிலேயே தங்களுக்கு நிறைவான மகிழ்ச்சியைத் தருமா என்பதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை. எனவேதான், இயேசுவின் அந்த மறுமொழி.

பதவி என்பது, பணிசெய்யவும் தொண்டு செய்யவும் என்கிறார் இயேசு. பணம் சேர்ப்பதும் சுகம் அனுபவிப்பதும் பதவியை தக்க வைப்பதும், வேண்டியவர்களுக்கு வரம்பு மீறி சலுகை செய்வதும், வேண்டாதவனை கசக்கி பிழிவதும் இன்றைக்கு பதவி என்று ஆகிவிட்டது. நாமும் அதன் பகுதியா என சிந்திக்க வேண்டியுள்ளது.

யூதர்களின் நம்பிக்கையின்படி, அப்பத்தைப் பகிர்வது ஆசிர்வாதங்களைப் பகிர்வதற்குச் சமம். கிண்ணத்தைப் பகிர்வது என்பது துன்பங்களைப் பகிர்வதற்குச் சமம். இயேசு தம் சீடர்களிடம் தமது பாடுகளைப் பகிர்வதற்கு அவர்கள் தயாரா என்று வினவுகிறார். யாக்கோபும், யோவானும் இயேசுவுடன் அப்பத்தைப் பகிர்ந்தனர், துன்பக் கிண்ணத்தையும் பகிர்ந்தனர். அவரது அன்பையும், ஆசிர்வாதங்களையும் பகிர்ந்து கொண்டனர். அதுபோல, அவரது பாடுகளிலும், துன்பங்களிலும் பங்கெடுத்தனர். உண்மையான உறவுகள், சீடர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தனர்.

துன்பத்தின் வழியாகவே நிறைவாழ்வை நாம் பெற முடியும் என்பதை இயேசு தம் வாழ்விலும் சாவிலும் தெளிவாகக் காட்டினார். துன்புற்று, சாவுக்குக் கையளிக்கப்பட்டு இயேசு இறந்தாலும் கடவுள் அவரைச் சாவிலிருந்து விடுவித்தார்; இயேசுவைப் புத்துயிர் பெற்றவராக உயிர்பெற்றெழவும் செய்தார். இயேசுவைப் பின்செல்வோரும் அவரைப் போல மக்களுக்குப் பணிசெய்வதில் ஈடுபடும்போது மக்கள் கடவுளின் அன்பை அனுபவித்து உணர்ந்து அறிந்துகொள்வார்கள்.

நமது வாழ்வில் வரக்கூடிய சிக்கல்களாக இருக்கட்டும், பிரச்சனைகளாக இருக்கட்டும் அவற்றையெல்லாம் ஒரு வாய்ப்பாக, சவாலாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து முன்னேறினோம் என்றால், ஒருநாள் நாம் உயர்ந்த இடத்தை அடைவோம் என்பது உறுதி. அதைவிடுத்து வாழ்வில் வரும் துன்பங்களைக் கண்டு மனம்வருந்திக் கொண்டிருந்தால், ஒருநாளும் உயர்வடைய முடியாது.

வீணான நடத்தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது பொன்னும் வெள்ளியும் போன்று அழிவுக்குட்பட்டது அல்ல; மாறாக, மாசு மறுவற்ற ஆட்டுக் குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர்மதிப்புள்ள இரத்தமாகும் (1 பேதுரு 1:18,19) என்கிறார் புனித பேதுரு.

இயேசுவின் சீடர்களாக, அவருடைய பணியைத் தொடர்பவர்களாக,  துன்பங்களைத் துணிவுடன் ஏற்றுக்கொள்ளும் மனத்துணிவை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் உறுதியான மனநிலையில் இயேசுவுக்காக பணிசெய்ய முடியும். இயேசு கிறிஸ்து நிந்தை அவமானங்களை, துன்பங்களை திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டார். ஆகையால் நாமும் இறைபணி ஆற்றும்போது வரக்கூடிய துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும், அதற்கான மன நிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

"நம்மைப் பயமுறுத்துகின்ற நிகழ்வுகளிலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரே வழி, அவற்றைத் துணிச்சலாக ஏற்றுக்கொள்வதுதான்" என்பதையும் உணர்ந்து செல்பட, முன்னோக்கிச் செல்வோம். இயேசுவின் துன்பக் கிண்ணம் மீட்பை தரவல்லது. விரும்பி வாங்கி அருந்துவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 March 2024, 16:58