தேடுதல்

எருசலேமின் துறவு பெருமடத்துத் தலைவர் Nikodemus Schnabel எருசலேமின் துறவு பெருமடத்துத் தலைவர் Nikodemus Schnabel   (Elias Ungermann)

நாங்கள் திருச்சிலுவையின் கீழ் வாழும் கிறிஸ்தவர்கள்!

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதியன்று ஹமாஸால் கொல்லப்பட்ட கத்தோலிக்கர்களில் பெரும்பாலும் புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் தேடி வந்தவர்கள் : துறவுமடத் தலைவர் Nikodemus Schnabel

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

புனித வாரத்தில் நிகழும் இயேசுவின் பாடுகளும் மரணமும், காசாவிலும் புனித பூமியிலும் வாழும் கிறிஸ்தவர்களின் துயரமான சூழல்களை உலகுக்கு நினைவூட்டுகின்றன என்று ACN எனப்படும் தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவும் பிறரன்பு அமைப்பிடம் எருசலேமின் துறவு பெருமடத்துத் தலைவரான Nikodemus Schnabel அவர்கள் கூறியுள்ளதாக ICN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் புனித பூமியில் வாழும் கிறிஸ்தவர்களின் கடுமையான துயரங்களை இப்பிறரன்பு அமைப்பிற்கு Schnabel அவர்கள் விவரித்துள்ள வேளை, இந்த உயிர்ப்புப் பெருவிழாவில், அங்கு நிகழ்ந்து வரும் தற்போதைய நெருக்கடியைப் பற்றி சிந்திக்க உலகெங்கிலும் உள்ள விசுவாசிகளை அவர் வலியுறுத்தியுள்ளார் என்றும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.

காசாவில் நிகழ்வது கிறிஸ்தவர்களாகிய எங்களுக்கு மிகப்பெரும் பேரழிவு என்றும், இது இருதரப்பிலும் நிகழ்கிறது என்றும் கவலை தெரிவித்துள்ள Schnabel அவர்கள், மக்கள் ஒருவரை கொல்வதுதான் பாவங்களிலேயே மிகவும் கொடியது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாங்கள் திருச்சிலுவையின் கீழ் வாழும் கிறிஸ்தவர்கள்! என்று இப்பிறரன்பு அமைப்பிடம் எடுத்துக்காட்டிய Schnabel அவர்கள், மேற்குக் கரை மற்றும் எருசலேமில் கிறிஸ்தவர்களும் துயருகின்றனர் என்றும், அங்கு உங்களால் சிலுவையைப் பார்க்க முடியாது, ஏனென்றால் அங்கு மக்கள் படும் துன்பங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை என்றும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

புனித பூமி முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் உண்மையில் மிகவும் கடினமான சூழ்நிலையில் உள்ளனர் என்றும், அவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுவாக உள்ளனர் என்றும் கூறியுள்ள Schnabel அவர்கள், அம்மக்களின் அனுபவம் புனித சனிக்கிழமையின் அனுபவத்தை பிரதிபலிக்கிறது என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் புனித பூமியில் 3,448 கிறிஸ்தவர்களுக்கு அவசரகால உதவி, உணவு கூப்பன்கள், உயிர்காக்கும் மருந்து மற்றும் வீட்டுச் செலவுகள் மற்றும் கல்விக் கட்டணங்களுக்கான உதவியை ACN வழங்கியுள்ளது. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 March 2024, 14:13