தேடுதல்

இறைவேண்டல் செய்யும் விசுவாசி இறைவேண்டல் செய்யும் விசுவாசி  

விவிலியத் தேடல் : திருப்பாடல் 50-4, கடவுள் தரும் மீட்பைக் காண்போம்!

கடவுளை மேன்மைப்படுத்தி, நமது பாவ வழிகளைச் செம்மைப்படுத்தி, அவர் அருளும் மீட்பைக் கண்டடைவோம்!
விவிலியத் தேடல்: திருப்பாடல் 50-4, கடவுள் அருளும் மீட்பைக் காண்போம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘‘‘திருப்பணியாற்றும் தகுதி பெறுவோம்!’!’ என்ற தலைப்பில் 50-வது திருப்பாடலில் 14 முதல் 20 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்துவரும் 21 முதல் 23 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவுக்குக் கொண்டு வருவோம். இப்போது அவ்வார்த்தைகளை இறை ஒளியில் வாசிக்கக் கேட்போம். “இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்; நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்; ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்; உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்துரைக்கின்றேன். கடவுளை மறந்தோரே! இதைக் கண்டுணருங்கள்; இல்லையேல், நான் உங்களைப் பீறிப் போடுவேன்; உங்களை விடுவிக்க யாரும் இரார். நன்றிப்பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர்” (வசனம் 21-23)

நமது இவ்வாரத் திருப்பாடல் சிந்தனை, கடந்த வார விவிலியத் தேடல் சிந்தனையின் தொடர்ச்சியாக அமைகின்றது. கடவுள் தனக்குத் திருப்பணியாற்றியோரை எந்தளவுக்குக் கடிந்துகொண்டார் என்று கடந்த வாரம் பார்த்தோம். இன்றைய நம் திருப்பாடல் சிந்தனையில் முதலாவதாக, “இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்; நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்" என்று கடவுள் கூறுவதாகத் தாவீது தெரிவிக்கின்றார். அவர்கள் இவ்வாறு குற்றம் குறைகள் செய்தும் கடவுள் ஏன் மௌனமாக இருந்தார் என்றால், அவர்கள் மனம் மாறி தன்னிடம் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கைதான். ஆனால் அது நடக்கவில்லை என்ற விரக்தியில் கடவுள் இவ்வாறு கூறுவதாக நாம் எண்ணிக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, விதை விதைத்துவிட்டு அதன் விருட்சத்திற்காக காத்திருக்கும் விவசாயிக்கு அது நிகழாதபோது எப்படி இருக்கும்? ஒரு தந்தை தனக்கிருந்த பிள்ளைகளையெல்லாம் மிகவும் சிரமப்பட்டு படிக்கச் வைக்கிறார், அவர்களுக்காகத் தன் வாழ்வையே அர்பணிக்கிறார், ஆனால் அப்பிள்ளைகள் அனைவரும் சிறிதளவுகூட அக்கறையின்றி இருக்கின்றனர். தந்தையின் தியாகத்தை மறந்து தான்தோன்றித்தனமாகத் திரிந்து படிக்காமல் தேர்வில் தோல்வியடைகின்றனர். அப்போது அந்தத் தந்தையின் மனநிலை எப்படியிருக்குமோ. அதே மனநிலைதான் கடவுளுக்கும் இருக்கும் என்பதை இங்கே நாம் உணர்ந்துகொண்டே அடுத்து, "நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்" என்று கடவுள் எழுப்பும் கேள்வி ஓர் எச்சரிக்கை மணி ஓசை எழுப்புவதைப் போல் உள்ளது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு, ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்ற நம் முன்னவர்களின் பழமொழிக்கு ஒத்ததாக இருக்கின்றது. அப்படியானால் கடவுள் அருளும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு திருந்தவில்லையெனில் அதற்கான பலனை அடைந்தே தீரவேண்டும். அதாவது, கடவுளின் கோபத்திற்குக் கண்டிப்பாக ஆளாக நேரிடும் என்பதை இதன்வழி அறிகின்றோம்.

மூன்றாவதாக, "ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்; உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்துரைக்கின்றேன்" என்று கடவுள் உரைப்பதாக கூறுகின்றார் தாவீது. இன்றைய நம் நடைமுறை வாழ்க்கையில் இதனைப் பார்க்கின்றோம். அதாவது, அரசுக்கு எதிராக எத்தனையோ போராட்டங்களும் கண்டனப் பேரணிகளும் நடைபெறுகின்றன. அவற்றில் எல்லாம், ‘கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம், அரசின் அத்துமீறிய செயல்களைக் கண்டிக்கிறோம், நிறைவேற்று நிறைவேற்று எங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்று, திருந்திடு திருந்திடு மக்களை ஒடுக்கும் பாவச் செயலிலிருந்து திருந்திடு’ என்று முழங்குவார்கள். இவற்றில் கலந்துகொள்ளும் பேச்சாளர்கள் ஆற்றும் உரைகளில் அரசு இழைத்துள்ள அநியாயச் செயல்களையெல்லாம் பட்டியலிடுவார்கள். இறுதியாகத் தீர்மானங்கள் இயற்றி அதனை அறிக்கையாக மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிப்பார்கள். இத்தகையதொரு அணுகுமுறை கடவுளுடைய செயமுறைகளில் இருப்பதைக் காண்கின்றோம். அதேவேளையில் கடவுள் மனிதரை பாவநிலையிலேயே விட்டுவிடுவதில்லை, மாறாக, அவர்கள் மனம் திருந்தி வரும்போது அல்லது தங்களின் குற்றச் செயல்களை உணரும்போது அவர்களை ஏற்றுக்கொள்கிறார். பாலைநிலத்தில் உணவின்றி, தண்ணீரின்றி வாடியபோது இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கும் தங்களை வழிநடத்திச் சென்ற மோசேவுக்கும் எதிராக முணுமுணுத்தனர். அப்போது, கடவுள் கோபக்கனல் கொண்டு பொங்கியெழுந்தாலும் இறுதியில் தன் மனதை மாற்றிக்கொண்டு அவர்களின் பாவங்களை மன்னித்து ஏற்கின்றார். பழைய ஏற்பாட்டில் வரும் 'வெண்கலப் பாம்பு' என்ற நிகழ்வு இதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு. இப்போது அந்நிகழ்வைக் கேட்போம். ஏதோம் நாட்டைச் சுற்றிப்போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து அவர்கள் “செங்கடல் சாலை” வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமையிழந்தனர். மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்; “இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது” என்றனர். உடனே ஆண்டவர் கொள்ளி வாய்ப் பாம்புகளை⁕ மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் பாவம் செய்துள்ளோம்” நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றி விடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும்” என்றனர். அவ்வாறே, மோசே மக்களுக்காக மன்றாடினார். அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார். அவ்வாறே, மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான் (காண்க எண் 21:4-9).

இறுதியாக, "கடவுளை மறந்தோரே! இதைக் கண்டுணருங்கள்; இல்லையேல், நான் உங்களைப் பீறிப் போடுவேன்; உங்களை விடுவிக்க யாரும் இரார்" என்று இஸ்ரயேல் மக்களை எச்சரிக்கும் கடவுள், நன்றிப்பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர்” என்று கூறி மனமாற்றம் பெற்று நன்றிப்பலி செலுத்தி தங்களைப் புதுப்பித்துக்கொள்ள அழைப்பு விடுகின்றார் கடவுள், ஆக, மனிதர் தங்களது பாவச் செயல்களால் அவநம்பிக்கையற்ற நிலையில் வாழ்ந்தாலும், கடவுள் அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதன் வழியாக அவர்களுக்குப் புதுவாழ்வு அளிக்கின்றார். 'இதைக் கண்டுணருங்கள்' என்ற கடவுளின் வார்த்தைகள், நீங்கள் இழைத்த குற்றச் செயல்களை எண்ணிப்பாருங்கள், அவற்றிலிருந்து மீண்டு வாருங்கள், மனம் திருந்தி வாருங்கள், உங்கள் வாழ்வை மாற்றிக்கொள்ளுங்கள், உங்கள் வழிகளை சரிசெய்து கொள்ளுங்கள், உங்களை நீங்கள் புதுப்பித்துக் கொள்ளுங்கள்’ என்ற அர்த்தங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் இதனை மனம் திருந்துவதற்காகக்  கடவுள் அருளும் ஒரு சந்தர்பமாகவே நாம் கருதலாம்.

அவன் ஒரு பாவி! அவனுக்கு ஒரு நாள் தான் ஒரு புனிதனாக வேண்டும், அக ஒளி பெற்றவனாக, தூய்மை நிறைந்த மனம் படைத்தவனாக மாறவேண்டுமென்ற ஆசை வந்தது. எல்லாருக்கும் நல்வழி காட்டும் துறவி ஒருவர் காட்டுக்குள் வாழ்வதாக அவன் அறிந்து, அவரைத் தேடி காட்டுக்குள் சென்றான். அவரிடம் சென்ற அந்தப் பாவி, "சாமி, நான் ஒரு பெரும் பாவி! இப்போது, மனம் திருந்தி நல்லவனாக வாழ ஆசைப்படுகின்றேன். எனக்கு நல்வழி காட்டுங்கள்" என்று வேண்டினான். அந்தப் பாவியைப் பார்த்து அந்தத் துறவி, "நீ போய் ஒரு வெங்காயத்தாமரைச் செடியைக் கொண்டு வா" என்றார். அவனும் போய்க் கொண்டு வந்தான். அப்போது அந்தத் துறவி, "இந்தச் செடியைக் கொண்டு போய் கடலில் எறிந்து விட்டு வா" என்றார். அதை எடுத்துக்கொண்டு அவன் கடற்கரைக்குச் சென்றான். அவன் எத்தனை முறை அந்தச் செடியை கடலுக்குள் எறிந்தாலும் அத்தனை முறையும் அந்தச் செடியைக் கரைக்குக் கொண்டுவந்து தள்ளின அந்தக் கடலலைகள். அவன் திரும்பி வந்து, நிகழ்ந்ததை துறவியிடம் கூறினான். அதற்கு அந்த துறவி, "மகனே!  ஒரு வெங்காயத் தாமரைச் செடி கடலுக்குள் புகுந்தால் போதும்! அது வளர்ந்து, படர்ந்து கடல் முழுவதையும் அடைத்துவிடும் என்பது அந்தக் கடலுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் அந்தச் செடி உள்ளே வராதபடி அந்தக் கடலலைகள் அதைத் தூக்கி கரையில் எறிந்திருக்கின்றன. அவ்வாறே, உன் மனம் முழுவதையும் பாவத்தால் நிரப்ப ஒரு சிறு பாவம் போதும்! ஆகவே, ஒரு சிறு பாவம் கூட உனக்குள் நுழையாமல் பார்த்துக்கொள், பாவம் உன் பக்கத்தில் வரும்போது அதைத் தூக்கி எறிந்துவிடு" என்றார். அவனும் சென்று அவ்வாறே செய்தான். புனிதனாக மாறி, கடவுளுக்கு ஏற்புடையவனானான்.

நாம் தவக்காலத்தைத் தொடங்கியிருக்கிறோம். மனமாற்றத்திற்கு அழைக்கும் யோவேலின் வார்த்தைகளுடன் இவ்வார விவிலியத் தேடல் நிகழ்ச்சியை நிறைவு செய்வோம். “இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்” என்கிறார் ஆண்டவர். “நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்.” அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்; செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர்" (காண்க யோவே 2:12-14). ஆகவே, நமது பாவ வழிகளைச் செம்மைப்படுத்தி, கடவுள் அருளும் மீட்பைக் கண்டடைவோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 February 2024, 12:45