தேடுதல்

திருப்பணியாற்றும் தகுதி பெறுவோம் திருப்பணியாற்றும் தகுதி பெறுவோம் 

விவிலியத் தேடல் : திருப்பாடல் 50-3, திருப்பணிக்குத் தகுதி பெறுவோம்!

கடவுள் நமக்கருளிய உடன்படிக்கையை மீறுவதும், அவரது ஒழுங்குமுறைகளை வெறுத்தொதுக்குவதும், தீய வாழ்வுக்கு நம்மை இட்டுச் செல்லும்.
விவிலியத் தேடல்:திருப்பாடல் 50-3, திருப்பணியாற்றும் தகுதி பெறுவோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘‘உண்மை வழிபாட்டைப் போற்றுவோம்!’ என்ற தலைப்பில் 50-வது திருப்பாடலில் 7 முதல் 13 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்துவரும் 14 முதல் 20 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது அவ்வார்த்தைகளை அமைதியான மனதுடன் வாசிக்கக் கேட்போம். ஆனால், கடவுள் பொல்லாரைப் பார்த்து இவ்வாறு கூறுகின்றார்; ‛என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை? நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். திருடர்களைக் கண்டால் அவர்களோடு விருப்புடன் சேர்ந்து கொள்கின்றீர்கள்; கற்பு நெறி தவறியவர்களோடும் உங்களுக்கு உறவு உண்டு. உங்கள் வாய் உரைப்பது தீமையே; உங்கள் நா புனைவதும் பொய்ம்மையே. உங்கள் சகோதரரைப் பற்றி இழிவாகப் பேசுகின்றீர்கள்; உங்கள் தாயின் மக்களைப்பற்றி அவதூறு பேசுகின்றீர்கள். (வசனம் 14-20)

முதலாவதாக, "கடவுள் பொல்லாரைப் பார்த்து இவ்வாறு கூறுகின்றார்; ‛என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை? நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள்" என்றுரைக்கின்றார் தாவீது. தனது திருப்பாடல்கள் முழுவதும் நல்லார் பொல்லார் பற்றி அதிகம் பேசுகின்றார் தாவீது என்பதை நாம் அறிவோம். ஆனால் இங்கே, கடவுளின் திருப்பணிக்குத் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை கடவுளே பொல்லார் என்று கூறுவதாகத் தாவீது அரசர் குறிப்பிடுகின்றார். இங்கே கடவுளின் அடியார்கள் இழைத்த இரண்டு முக்கியமான காரியங்களைக் கடவுள் எடுத்துக்காட்டுகிறார். "நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள்" என்பதுதான் அது. கடவுள் இஸ்ரயேல் மக்களுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கைகள் என்பது, அவர் அருளிய ஒழுங்குமுறைகளிலும் கட்டளைகளிலும் அடங்கியுள்ளது. இவற்றை மீறுவது என்பது கடவுளின் புனித உடன்படிக்கையையே மீறுவதாகும். இதனை செய்யும்போது, கடவுளுக்குத் திருப்பணியாற்றும் தகுதியையும் அவருடைய உடன்படிக்கையைப் பற்றி பேசும் தகுதியையும் இழக்கும் நிலை ஏற்படுகிறது. அதனால்தான், "என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை?" என்று கடவுள் அவர்களை நோக்கிக் கேள்வி எழுப்புவதாகத் தாவீது கூறுகின்றார்.

கடவுளுக்கு எதிராகப் பாவங்கள் இழைப்பதும், அவரது கட்டளைகளையும் உடன்படிக்கையையும் மீறுவதும் இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் அடிக்கடி நிகழ்வதை பழைய ஏற்பாட்டின் பல்வேறு இடங்களில் காண்கின்றோம். அவர்களின் பிரமாணிக்கமற்ற செயல்கள் காரணமாக, கடவுளின் கோபத்திற்கு ஆளாகி வேற்றின அரசர்களால் அவர்களின் நாடுகளுக்குச் சிறைபிடித்துச் செல்லப்படும் அளவிற்கு சூழல் மோசமாக மாறியது. இதற்கொரு எடுத்துக்காட்டாக, யூதாவின் அரசன் செதேக்கியாவின் காலத்தில் நிகழ்ந்ததைப் பார்ப்போம். செதேக்கியா அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தொன்று. அவன் எருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் கடவுளாம் ஆண்டவரின் பார்வையில் தீயனவே செய்தான்; ஆண்டவர் பெயரால் பேசிய இறைவாக்கினர் எரேமியா முன் தன்னையே தாழ்த்திக் கொள்ளவில்லை. அதுபோல், குருக்களின் தலைவர்களும், மக்களும் வேற்றினத்தாரின் அனைத்து அருவருப்புகளையும் தொடர்ந்து செய்து, உண்மையற்றவர்களாய், ஆண்டவர் தமக்காக எருசலேமில் தூய்மையாக்கியிருந்த திருக்கோவிலை மேலும் தீட்டுப்படுத்தினர். அவர்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவர் தம் மக்களின் மீதும், தம் உறைவிடத்தின் மீதும் இரக்கம் கொண்டு, தம் தூதர்களை மீண்டும் மீண்டும் அவர்களிடம் அனுப்பினார். ஆனால், அவர்கள் கடவுளின் தூதர்களை ஏளனம் செய்து, அவர்தம் வார்த்தைகளைப் புறக்கணித்து, அவர்தம் இறைவாக்கினர்களை இழித்துரைத்தனர். ஆதலால், அவர்கள் தப்பமுடியாத அளவுக்கு ஆண்டவரது சினம் அவர்கள்மேல் கனன்றெழுந்தது. (காண்க 2 குறி 36:11, 14-16). இந்தப் பகுதியை நாம் தொடர்ந்து வாசிக்கும்போது, கடவுளுக்கு எதிராக இழைத்த பாவத்தின் காரணமாக அவர்கள் பெற்ற அடிமை வாழ்வையும் பின்னர் கடவுளின் இரக்கப்பெருக்கத்தால் மன்னிக்கப்பட்டு மீண்டும் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பியதையும் அறிய முடிகின்றது.

இரண்டாவதாக, "திருடர்களைக் கண்டால் அவர்களோடு விருப்புடன் சேர்ந்து கொள்கின்றீர்கள்; கற்பு நெறி தவறியவர்களோடும் உங்களுக்கு உறவு உண்டு. உங்கள் வாய் உரைப்பது தீமையே; உங்கள் நா புனைவதும் பொய்ம்மையே. உங்கள் சகோதரரைப் பற்றி இழிவாகப் பேசுகின்றீர்கள்; உங்கள் தாயின் மக்களைப்பற்றி அவதூறு பேசுகின்றீர்கள்" என்று கடவுள் காட்டமாகக் கூறுவதாகத் தாவீது அரசர் பதிவு செய்கின்றார். பொதுவாக, திருடர்களோடு யார் உறவு வைத்துகொள்ளவார்கள்? திருடர்களும் திருடர்களும்தான் தங்களுக்குள் உறவு வைத்துக்கொள்வர். காரணம் அது அவர்கள் மேற்கொண்டுள்ள தொழிலின் தீய பழக்கம். ஆனால், நல்லார் அதாவது, கடவுளுக்கு அஞ்சி வாழும் அனைவரும் திருடர்களையும் திருட்டுத் தொழிலையும் வெறுப்பர். நமது நடைமுறை வாழ்க்கையில் திருடர்கள் யாரிடமாவது நாம் பேசினால், "திருடனோடு உனக்கென்ன பேச்சு...? அவனுடன் பழக்கவழக்கம் வச்சுக்கிட்டா, உனக்கும் அதே திருட்டுப் புத்திதான் வரும், அப்புறம் உன் வாழ்வும் நாசமாயிரும்... கவனமா இருந்துக்க..." என்று பெரியவர்கள் அறிவுரை கூறி நம்மைத் திருந்துவார்கள். ஆக கடவுள், "திருடர்களைக் கண்டால் அவர்களோடு விருப்புடன் சேர்ந்து கொள்கின்றீர்கள்" என்று பொல்லார் நிலைக்கு மாறிய தனது அடியவர்களைப் பார்த்துக் கூறுகின்றார் என்றால், அவர்களின் நடவடிக்கை எந்தளவுக்கு மோசமாக இருந்திருக்கும் என்பதையும், அத்தகைய செயல்கள் கடவுளுக்கு எவ்வளவுபெரிய கோபக்கனலை மூட்டியிருக்கும் என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா?

அடுத்து இந்தத் திருட்டு நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக, கற்பு நெறி தவறியவர்களோடு உறவுகளை ஏற்படுத்த தூண்டும். இது கடவுளுக்கு எதிரான பாவத்தின் அடுத்தநிலை. எப்படி ஒரு பாத்திரத்திலுள்ள பாலில் சிறிதளவு நஞ்சை கலக்கும்போது அந்தப் பாத்திரத்திலுள்ள பால் முழுவதும் நஞ்சாக மாறுகிறதோ, அவ்வாறுதான் கற்பு நெறி தவறியவர்களோடு நாம் மேற்கொள்ளும் உறவுகளும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இங்கே கற்புநெறி தவறியர்கள் என்று கூறும்போது, பெண்கள் மட்டுமே இத்தகையோர் என்று நாம் தவறாக மதிப்பீடு செய்யக் கூடாது. கற்புநெறி என்பது ஆண்களுக்கும் பொருத்தும். ஏனென்றால், கற்புநெறி என்பது இருவருக்கும் பொதுவானது. அடுத்து இந்தத் திருடர்களுடான உறவும் கற்புநெறி தவறியவர்களுடனான உறவும், தீமையை பேசும் மூன்றாம் நிலைக்கு நம்மைக் கடத்துகிறது. தீமைபேசுதல் என்பது புறணி பேசுதல், மற்றவர்களின் நற்பெயருக்குக் களங்கம் கற்பித்தல், உண்மையான உறவுகளுக்கிடையே உறுவிளைவித்தல், அமைதியான வாழ்வை அழித்தல் ஆகிய நெறிகேடான செயல்களை உள்ளடக்கியது என்பதையும் நம் மனங்களில் நிறுத்துவோம். அடுத்தப்படியாக, 'உங்கள் நா புனைவதும் பொய்ம்மையே' என்றதொரு வார்த்தையையும் கடவுள் இங்கே பயன்படுத்துகிறார். பொய்மையைப் புனைவதில் நமது நா முக்கியப் பங்காற்றுகிறது. நா விளைவிக்கும் கொடிய தீமையைப்பற்றி திருத்தூதர் யாகப்பர் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். அப்பகுதியை இப்போது கவனமுடன் வாசிப்போம். "பாருங்கள், சிறியதொரு தீப்பொறி எத்துணை பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது. நாவும் தீயைப் போன்றதுதான். நெறிகெட்ட உலகின் உருவே அது. நம்முடைய உறுப்புகளுள் ஒன்றாக அமைந்திருக்கும் இந்த நா நம் உடல் முழுவதையும் கறைப்படுத்துகிறது. அது நம் வாழ்க்கைச் சக்கரம் முழுவதையும் எரித்துவிடுகிறது; எரிப்பதற்கான நெருப்பை நரகத்திலிருந்தே பெறுகிறது. காட்டில் வாழ்வன, பறப்பன, ஊர்வன, கடலில் வாழ்வன ஆகிய எல்லா உயிரினங்களையும் மனிதர் அடக்கிவிடலாம்; அடக்கியும் உள்ளனர். ஆனால், நாவை அடக்க யாராலும் முடிவதில்லை. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அது கொடியது; சாவை விளைவிக்கும் நஞ்சு நிறைந்தது. தந்தையாம் ஆண்டவரைப் போற்றுவது அந்நாவே; கடவுளின் சாயலாக உண்டாக்கப்பட்ட மனிதரைத் தூற்றுவதும் அந்நாவே" (காண்க யாக் 3:5-9)

இம்மூன்று தீங்குகளும் நம்மைச் சுற்றி வாழும் நம் சகோதரர் சகோதரிகளையும், நம் அன்னையின் ஒருவயிற்றுப் பிள்ளைகளாகப் பிறந்த நம் உடன்பிறந்தோரையும் இழிவாகப் பேசி, அவர்களின் வாழ்விற்குத் தீங்கு விளைவிக்கும் அளவிற்கும் நம்மைக் கொண்டு சென்றுவிடும் என்பது திண்ணம். அதனால்தான், "உங்கள் சகோதரரைப் பற்றி இழிவாகப் பேசுகின்றீர்கள்; உங்கள் தாயின் மக்களைப்பற்றி அவதூறு பேசுகின்றீர்கள்" என்று கடவுள் கூறுகின்றார். ‘ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து அதன்பின்னர் ஆளையே கடித்த கதையாகிவிட்டதே!’ என்று நம் முன்னவர்கள் கூறியிருக்கின்றனர் அல்லவா? அப்படிதான் திருடர்களோடு நாம் கொள்ளும் உறவும் படிப்படியாக நம்மை அடுத்தடுத்த தீமையான நிலைகளுக்கு இட்டுச்சென்று நம் வாழ்வையே நிர்மூலமாக்கிவிடும். .

தொற்றுநோய் மற்றும் புற்றுநோய் போன்று அத்தீய செயல்கள் நம் உள்ளத்திலும் உடலிலும் சிறிது சிறிதாகப் பரவி இறுதியில் நம் உயிரையே பறித்துவிடும் அளவிற்கு ஆபத்தானவை. அப்படிதான் கடவுளுக்கு எதிராக நாம் செய்யும் செயல்களும். கடவுளுக்கு எதிரான செயல்களை ஊக்குவிப்பதில் தீய ஆவியின் பங்கு, அதாவது, அலகையின் வழிநடத்துதல் அதிகம் இருக்கும். ஆனால் இம்மாதிரியான நெருக்கடியான வேளைகளில், கடவுள்மீது கொண்டுள்ள நம்பிக்கையிலும் பிரமாணிக்கத்திலும் நிலைத்து நின்றால் நாம் வெற்றிபெறுவது உறுதி. இதற்கு யோபுவின் வாழ்வு ஒர் எடுத்துக்காட்டு. அலகையால் சோதிக்கப்பட்டு எல்லாவற்றையும் அவர் இழந்த நிலையிலும், கடவுள்மீது தான் கொண்டிருந்த நம்பிக்கையில் உறுதியாக நிலைத்து நின்றார் யோபு. ஆனால் கடவுளின் மக்களாக, பக்தர்களாக, அடியவர்களாக, அருள்பணி செய்பவர்களாக வாழும் பலர் 'கோவில் பூசாரி கடவுளுக்கு அஞ்சுவதில்லை' என்ற நம் முன்னோரின் பழமொழிக்கேற்ப இறையச்சமின்றி வாழ்ந்து கடவுளின் கொடிய தண்டனைக்கு உள்ளாகின்றனர். ஆகவே, கடவுள் நமக்கருளிய உடன்படிக்கையை மீறுவதும், அவரது ஒழுங்குமுறைகளை வெறுத்தொதுக்குவதும், தீய வாழ்வுக்கு நம்மை இட்டுச் செல்லும் என்பதை உணர்ந்து வாழ்வோம். அவரை எப்போதும் நமது உரிமைச் சொத்தாகப் பற்றிக்கொள்ளும் அருளை இறைவன் நமக்கு ஈந்திட அவரிடம் இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 February 2024, 12:29