தேடுதல்

உண்மை வழிபாட்டைப் போற்றுவோம்! உண்மை வழிபாட்டைப் போற்றுவோம்! 

விவிலியத் தேடல்: திருப்பாடல் 50-2, உண்மை வழிபாட்டைப் போற்றுவோம்!

கடவுளை பெருமைப்படுத்தும், அவருக்கு மனமகிழ்வைத் தரும், நீதியையும் நேர்மையையும் வெளிப்படுத்தும் உண்மை வழிபாட்டைப் போற்றுவோம்!
விவிலியத் தேடல்: திருப்பாடல் 50-2, உண்மை வழிபாட்டைப் போற்றுவோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘‘கடவுளே, என்றுமுள நீதிபதி!’ என்ற தலைப்பில் 50-வது திருப்பாடலில் 01 முதல் 06 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்துவரும் 7 முதல் 13 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது அவ்வார்த்தைகளை அமைதியான மனதுடன் வாசிக்கக் கேட்போம். என் மக்களே, கேளுங்கள்; நான் பேசுகின்றேன்; இஸ்ரயேலே! உனக்கு எதிராய்ச் சான்றுகூறப் போகின்றேன்; கடவுளாகிய நானே உன் இறைவன்; நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன. உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக்கிடாய்களையோ, நான் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில், காட்டு விலங்குகளெல்லாம் என் உடைமைகள்; ஓராயிரம் குன்றுகளில் மேயும் கால்நடைகளும் என்னுடையவை. குன்றத்துப் பறவை அனைத்தையும் நான் அறிவேன்; சமவெளியில் நடமாடும் யாவும் என்னுடையவை. எனக்குப் பசியெடுத்தால் நான் உங்களைக் கேட்கப் போவதில்லை; ஏனெனில், உலகும் அதில் நிறைந்துள்ள யாவும் என்னுடையவையே. எருதுகளின் இறைச்சியை நான் உண்பேனோ? ஆட்டுக்கிடாய்களின் குருதியைக் குடிப்பேனோ? கடவுளுக்கு நன்றிப்பலி செலுத்துங்கள்; உன்னதர்க்கு உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள். துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்; உங்களைக் காத்திடுவேன்; அப்போது, நீங்கள் என்னை மேன்மைப்படுத்துவீர்கள். (வச 7-15)

இன்று நாம் தியானிக்கும் இத்திருப்பாடலின் 7 முதல் 15 வரையுள்ள இறைவசனங்கள் தான் தெரிந்துகொண்ட இஸ்ரயேல் மக்களுக்கு எதிராக வழங்கப்போகும் கடவுளின் நீதித்தீர்ப்பாகவே அமைந்துள்ளது என்பதை இதனை வாசிக்கும்போது நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. ஆக, மனிதர்மீதான கடவுளின் நீதித்தீர்ப்புகள் அவர்தம் மதியற்றதனத்தின் விளைவாகவே அமைகின்றன என்பது திண்ணமாய் விளங்குகிறது. அவ்விதத்தில், மனிதரின் இந்த மதியற்றதனத்திற்கு காரணம் என்ன, எம்மாதிரியான மனநிலை மனிதரை இத்தகையதொரு நிலைக்குத் தள்ளுகின்றது, உண்மையில் கடவுள் மனிதரிடமிருந்து எதை விரும்புகின்றார், அவருடைய எதிர்பார்ப்புகள் எவை என்பதையெல்லாம் குறித்து தியானிக்க இன்றைய நமது விவிலியத் தேடல் நமக்கு உதவுகின்றது.

ஜெர்மனி வரலாற்றின் இருண்ட காலத்தில் ழூளைசலவை செய்யபட்ட கும்பல் அப்பாவி கடை உரிமையாளர்களின் சன்னல்களில் கற்களை எறிந்து உடைத்தனர்.  பொது இடத்திவ் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொடூரமாக அவமானப்படுத்தினர். அப்போது Dietrich Bonhoeffer என்ற இளங்குரு ஒருவர் சர்வாதிகாரத்தின் இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராகப் பகிரங்கமாகப் பேசத் தொடங்கினார். பல ஆண்டுகளாக மக்களின் மனதை மாற்ற முயற்சித்த பின்னர், போன்ஹோஃபர் ஒரு மாலைவேளையில்  வீடு திரும்பியபோது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருக்கும்போது, கவிஞர்கள் சிந்தனையாளர்களின் நாடாக விளங்கிய ஜெர்மனி, கோழைகள், வஞ்சகர்கள், குற்றவாளிகளின் கூடாரமாக எப்படி மாறியது என்பதைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினார். இறுதியில், பிரச்சனையின் ஆணி வேர் தீமை அல்ல, மதியற்றதனம் (முட்டாள்தனம்) என்ற முடிவுக்கு வந்தார்.

சிறையில் இருந்து வெளிவந்த அவரது புகழ்பெற்ற கடிதங்களில், தீமையை விட மதியற்றதனம்தான் நன்மைக்கு மிகவும் ஆபத்தான எதிரி என்று போன்வோஃபர் வாதிட்டத்தை அறிய முடிந்தது. ஏனெனில் "ஒருவர் தீமைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கலாம்; தனது திறமையான ஆற்றலைப் பயன்படுத்தி அதை வெளிப்படுத்தலாம், தடுக்கலாம்.  ஆனால், மதியற்றதனத்திற்கு எதிராக நாம் பாதுகாப்பற்றவர்கள் என்றும், போராட்டங்கள், வலிமையைப் பயன்படுத்துவது  போன்ற எதனாலும் அதனை வெல்ல முடியாது என்றும் அக்கடிதங்களில் விளக்கியிருந்தார். மேலும் மதியற்றவர்கள் தங்களது தவறான முடிவுக்கு முரணான உண்மை செய்திகளை நம்ப மாட்டார்கள் என்றும், மறுக்க முடியாத உண்மையைக் கூட தற்செயலானவை பயனற்றவை என்று ஒதுக்கித் தள்ளிவிடுவர் என்றும் கூறுவார். குறிப்பாக, மதியற்றவர்கள் மதியீனத்தில் திருப்தியாகி, உண்மையயைக் கண்டு எளிதில் எரிச்சல் அடைந்து, பிறரைத் தாக்கும் அளவிற்கு ஆபத்தானவர்களாக மாறுகின்றனர் என்பதையும், இதனால்தான், தீயவனை விட மதியற்றவர்களுடன் பழகும்போது அதிக எச்சரிக்கை தேவை என்பதையும் அக்கடிதத்தில் விளக்கியிருந்தார். ஆக இவற்றையெல்லாம் மனதில்கொண்டு சிந்திக்கும்போது, மதியற்றதனம் என்பது ஓர் அறிவின் குறைபாடு அல்ல, ஆனால் அதுவொரு தார்மீக குறைபாடு என்பதை நம்மால் அறிய முடிகிறது. அதிகம் படித்தவர்களும் சிலர் முட்டாளாக இருக்கின்றனர், அதேவேளையில், படிப்பறிவற்ற பலர் மதிநுட்பத்துடன் நடந்துகொள்கின்றனர். அப்படியென்றால் மதியற்றதனம் ஒரு பிறவிக் குறைபாடு அல்ல என்பதும் நமக்குப் புலனாகிறது. ஆனால் சில சூழ்நிலைகளில், மக்கள் தங்கள் வாழ்வில் மதியற்றதனத்தை அனுமதிக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். மேலும் மதியற்றதனம் என்பது ஓர் உளவியல் பிரச்சனை என்பதைவிட சமூகவியல் பிரச்சனை  என்றே எண்ணத் தோன்றுகிறது.

அரசியல் அல்லது மத அதிகாரத்தின் ஒவ்வொரு வலுவான எழுச்சியும், பெருவாரியான மக்களை மதியற்றவர்களாக்கியது என்பது தெளிவாகத் தெரிகிறது.  ஒருவரின் அதிகாரப் பசிக்கும் மதவெறிக்கும் பலருடைய மதியற்றதனம் தேவைப்படுகிறது. அறிவுத் திறன்கள் திடீரென்று தோல்வியடைவதால் அல்ல. மாறாக, அதிகார எழுச்சியின் அதீத பாதிப்பால்  பலர் தங்கள் உள்மனச் சுதந்திரத்தை இழந்துவிடுகின்றனர். இது சுயசார்பு இல்லாமல் ஏறத்தாழ தன்னாட்சியை இழப்பது போன்றதுதான். அவ்விதத்தில் பார்க்கும்போது, தங்களைத் தாங்களே மதியற்றத்தனத்திற்கு ஆட்படுத்திக்கொள்ளும் நபர்கள் அனைவரும் தங்களைத் தவறாக வழிநடத்திக்கொள்வதுடன் பிறரையும் தவறான பாதையில் நடத்துகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. அப்படியென்றால் விடுதலைச் செயல் மட்டுமே மதியீனத்தை வெல்ல முடியும், அறிவுரைகள் அல்ல. முதலில் புறவிடுதலை. அதற்கு பிறகே, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உண்மையான அக விடுதலை சாத்தியமாகிறது என்பதை உணர வேண்டும்.

இன்றைய உலகின் ஆன்மிக வாழ்விலும் இந்த மதியற்றதனம் நிலவுவதைப் பார்க்கின்றோம். இதனை இன்னும் எப்படிச் சொல்லலாம் என்றால் கடவுளின் உண்மை இயல்பை புரிந்துகொள்ளாத நிலை. அதாவது, நாம் வணங்கும் கடவுள் பலியை விரும்பும் கடவுள். ஆகவே, நாம் எத்தனைவிதமான தவறுகளையும் பாவங்களையும் செய்தாலும், கடவுளுக்குப் பலிகள் செலுத்துவதன் வழியாக நாம் அதனைப் போக்கிவிடலாம் என்ற மதியற்றதனத்தை நம் காலத்து ஆன்மிகவாதிகள் பலர் கொண்டுள்ளனர். 'அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுப்பா... நல்லா சாப்பிட்டுட்டு இரண்டு மாத்திரையை சேர்த்துப் போட்டுக்கிட்டுப் போய்த் தூங்கு.. எல்லாம் சரியாகிடும்... என்று விருந்துகளின் போது நீரிழிவு நோயாளர்களிடம் பலர் சொல்லக் கேவிப்பட்டிருக்கின்றேன். அதேவேளையில், இதனைப் புரிந்துகொள்ளாது அப்படிச் செய்பவர்கள் சிலநேரங்களில் மரணித்துப்போவதும் உண்டு. ஆக இப்படித்தான், செய்வதையெல்லாம் செய்துவிட்டு பலிகொடுத்துவிட்டால் போதும் என்ற தவறான மனப்பான்மை அன்றைய இஸ்ரயேல் மக்களிடமும் விளங்கியது என்பதை நமது திருவிவிலியத்தின் பல இடங்களில் காண்கின்றோம். இஸ்ரயேல் மக்களின் குருக்கள் பலரின் முறையற்ற வாழ்க்கை, மற்றும் பலிகள் யாவும் கடவுளின் உள்ளதை நொறுக்கியது மட்டுமன்றி, அவரது மனவேதனைகளையும் அதிகப்படுத்தின.

கடவுள் இஸ்ரேல் மக்களின் இரண்டு முக்கியமான செயல்களைக் கண்டித்தார். முதலாவது அவர்களின் அர்த்தமற்ற நோன்பைக் கண்டித்தார். உண்மையான நோன்பின் அர்த்தத்தை புரிந்துகொள்ளாத அவர்களின்  மதியற்றதானம்தான் அதற்கு முக்கிய காரணம். "ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணாநோன்பின் நாளாகத் தெரிந்து கொள்வது? ஒருவன் நாணலைப் போல் தன் தலையைத் தாழ்த்திச் சாக்கு உடையையும் சாம்பலையையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? இதையா நீங்கள் நோன்பு என்றும் ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும் அழைக்கின்றீர்கள்?” என்று கடிந்துகொள்ளும் கடவுள், “கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு! பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!” (எசா 58:5-8) என்று உண்மையான நோன்பின் வழிமுறைகளை எடுத்துக்காட்டுவதையும் காண்கின்றோம். இத்தகையதொரு மனநிலை அன்றுமட்டுமல்ல, இன்றும் நம்மிடத்தில் காணப்படுகிறது என்பதை நம்மால் மறுக்க முடியுமா? குறிப்பாக, இப்போது தவக்காலத்தைத் தொடங்கிவிருக்கும் நாம் எத்தகைய உண்ணாநோன்பு நம்மிடத்தில் நிலவ வேண்டும் என்பதைக் குறித்து இந்நாள்களில் சிந்திப்போம்.

இரண்டாவதாக, கடவுள் இஸ்ரயேல் மக்களின் பலிகளை வெறுக்கிறார். காரணம் இவையும் அர்த்தமற்ற முறையில் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டன. எதையும் செய்துவிட்டு பலி ஒப்புக்கொடுத்தாலே போதும் என்ற மதியற்றதனமே அவர்களிடத்தில் நிலவியது. அதனால்தான் இவைகளைக் கடவுள் கீழ்க்கண்டவாறு கண்டிக்கின்றார். “உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன்; உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் எனக்கு விருப்பமே இல்லை. எரிபலிகளையும் தானியப் படையல்களையும் எனக்கு நீங்கள் செலுத்தினாலும் நான் ஏற்க மாட்டேன்; கொழுத்த விலங்குகளை நல்லுறவுப் பலிகளாகச் செலுத்தும்போது நான் ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன். என் முன்னிலையில் நீங்கள் இரைச்சலிட்டுப் பாடும் பாடல்களை நிறுத்துங்கள், உங்கள் வீணைகளின் ஓசையை நான் கேட்க மாட்டேன். மாறாக, நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக! (காண்க ஆமோ 5:21-24). ஆக, இப்படித்தான் இஸ்ரயேல் மக்களின் இத்தகைய அர்த்தமற்ற வழிபாடுகளுக்கு எதிராகக் கடவுள் தனது நீதித்தீர்ப்புகளை வெளிப்படுகின்றார் என்பதை அவரது இறைவார்தைகள் வழியாகவே எடுத்துக்காட்டுகின்றார். குறிப்பாக, நீங்கள் கொடுக்கும் எதுவும் எனக்குத் தேவையில்லை, காரணம், உலகும் அதில் நிறைந்துள்ள யாவும் என்னுடையவையே என்று கூறும் கடவுள், 'கடவுளுக்கு நன்றிப்பலி செலுத்துங்கள்; உன்னதர்க்கு உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள். துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்; உங்களைக் காத்திடுவேன்; அப்போது, நீங்கள் என்னை மேன்மைப்படுத்துவீர்கள்' என்று எடுத்துரைப்பதன் வழியாக எது தேவையில்லாத ஆன்மிகம் எது தேவையான ஆன்மிகம் என்பதைத் தெளிவாக எடுத்துரைப்பதைப் பார்க்கின்றோம். ஆகவே, கடவுளை பெருமைப்படுத்தும், அவருக்கு மனமகிழ்வைத் தரும், நீதியையும் நேர்மையையும் வெளிப்படுத்தும் உண்மை வழிபாட்டை போற்றுவோம்! அதற்கான இறையருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 February 2024, 12:22