தேடுதல்

கடவுளே உண்மையான நீதிபதி! கடவுளே உண்மையான நீதிபதி!  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 50-1, கடவுளே என்றுமுள நீதிபதி!

அநீதிகள் நிறைந்த சூழல்களில் நாம் வாழ நேரிட்டாலும் கடவுள் நமக்கு நீதித்தீர்ப்பு வழங்க நம்மைத் தேடி வருவார் என்ற நம்பிக்கையில் நமது கிறிஸ்தவ வாழ்வின் பயணத்தைக் தொடர்வோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 50-1, கடவுளே, என்றுமுள நீதிபதி!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘‘கண்ணியில் சிக்க வைக்கும் செல்வபற்று!’ என்ற தலைப்பில் 49-வது திருப்பாடலில் 16 முதல் 20 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து அத்திருப்பாடலை நிறைவுக்குக் கொண்டு வந்தோம். இவ்வாரம் 50-வது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். 'உண்மை வழிபாடு' என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 23 இறைவசனங்களைக் கொண்டுள்ளது. இத்திருப்பாடல் தனக்குத் திருப்பணி செய்த அடியார்களையெல்லாம் இறைவன் அழைத்து அவர்களின் தீய நடத்தைகளைக் கண்டிப்பதாக அமைத்துள்ளது. மேலும் அவர்களின் தகுதியின்மையை எடுத்துரைக்கும் கடவுள், அவர்கள் தன்னை மறந்தவர்கள் அல்லது இறைப்பற்று அற்றவர்கள் என்றும் எடுத்துக்காட்டுகிறார். இறுதியாக, இத்தகையோர் தங்கள் குற்றங்களை உணர்ந்து திருந்தாவிட்டால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், தவறுகளை அறிந்து தங்கள் வழிகளைச் செம்மைப்படுத்துவோர் தான் அருளும் மீட்பைக் கண்டைவர் என்று கடவுள் உரைப்பதாகவும் கூறி இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது அரசர். இத்திருப்பாடலை முழுவதுமாக வாசிக்கின்றபோது, மனிதர்கள் பாவத்தில் வீழும்போது அல்லது கடவுளை மறந்த நிலைக்குச் செல்லும்போது அவர் அவர்கள்மீது சினம் கொண்டாலும் அது நீடிப்பதில்லை என்பதை பார்க்க முடிகின்றது. அதுமட்டுமன்றி, கடவுள் தனது சினத்தைத் தனித்து அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு மீட்பளிக்கின்றார் என்பதை வெட்டவெளிச்சமாக்குகிறது இத்திருப்பாடல். இதுவும் மற்ற திருப்பாடல்களைப் போலவே அவநம்பிக்கையில் தொடங்கினாலும் நம்பிக்கையில் நிறைவடைகின்றது. இப்போது இத்திருப்பாடலின் முதல் ஆறு வசனங்கள் குறித்து தியானிப்போம். அதற்கு முன்னதாக அவ்வார்த்தைகளைப் பக்தி நிறைந்த உள்ளமுடன் வாசிக்கக் கேட்போம்.  "தெய்வங்களுக்கெல்லாம் இறைவனாம் ஆண்டவர் பேசினார்; கதிரவன் எழும் முனையினின்று மறையும் முனைவரை பரந்துள்ள உலகைத் தீர்ப்புப் பெற அழைத்தார். எழிலின் நிறைவாம் சீயோனின்று, ஒளிவீசி மிளிர்கின்றார் கடவுள். நம் கடவுள் வருகின்றார்; மௌனமாய் இருக்கமாட்டார்; அவருக்கு முன்னே, சுட்டெரிக்கும் தழல் நெருப்பு! அவரைச் சுற்றிலும், கடுமையான புயற்காற்று! உயர் வானங்களையும் பூவுலகையும் அவர் அழைத்து, தம் மக்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றார். பலியிட்டு என்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட என் அடியார்களை என்முன் ஒன்று கூட்டுங்கள்.’ வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்!" (வச 1-6)

ஒரு குளிர் இரவில், செல்வந்தர் ஒருவர் வயதான ஏழை ஒருவரை தன் வீட்டின் வெளியில் சந்தித்தார். அப்போது, அவர் அவரிடம், "உங்களுக்கு வெளியில் குளிர்ச்சியாக இல்லையா, ஏன் கம்பளி சால்வை எதுவும் அணியவில்லை?" என்று கேட்டார். அதற்கு அந்த ஏழை முதியவர், "என்னிடம் அது இல்லை, ஆனால் நான் பழகிவிட்டேன்." என்று பதிலளித்தார். அதற்கு அச்செல்வந்தர் அவரிடம், "எனக்காகச் சற்று நேரம் காத்திருங்கள், நான் என் வீட்டிற்குள் சென்று உங்களுக்காக சால்வை ஒன்றைக் கொண்டு வருகிறேன். அதனை அணிந்துகொண்டு நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகத் தூங்கலாம்" என்றார். அந்த ஏழை முதியவரும்  மகிழ்ச்சியடைந்தார். அவருக்காக காத்திருந்தார். செல்வந்தர் அவரது வீட்டிற்குள் நுழைந்ததும், அங்குள்ள வேலையில் மூழ்கி அந்த ஏழையை மறந்துவிட்டார்.

மறுநாள் காலையில் செல்வந்தர் அந்த ஏழை முதியவரை நினைவு கூர்ந்தார். உடனே, அவரைத் தேடி வெளியே சென்றார். ஆனால், அவர் குளிர் காரணமாக இறந்து போயிருந்தார். அதேவேளையில், அவர் ஒரு குறிப்பை விட்டு சென்றிருந்தார். அதில்,"என்னிடம் ஆடைகள் இல்லாதபோது, ​​​​எனக்குப் போராடும் வலிமை இருந்தது. ஏனென்றால், எனக்கு அது பழகி விட்டது. ஆனால் எனக்கு உதவி செய்வதாக நீங்கள் எனக்கு உறுதியளித்தபோது, ​​உங்கள் வாக்குறுதியால் நான் என் போராடும் வலிமையை இழந்து விட்டேன்" என்று குறிப்பிட்டு இருந்தார். இதனைப் படித்த அச்செல்வந்தர் வெட்கத்தால் தலைகுனித்தார். இவ்வுலகின் செல்வந்தர்கள் பலர் வெற்று வாக்குறுதிகளைத் தரும் நபர்களாகவே காட்சியளிக்கின்றனர். பல வேளைகளில் அவர்கள் தாங்கள் என்ன சொன்னோம் என்பதைக்கூட மறந்துவிடுகின்றனர். அந்தளவுக்குத் தங்கள் சொந்த காரியங்களில் மூழ்கிப்போய் விடுகின்றனர். ஆனால் கடவுள் அப்படிப்பட்டவர் அல்ல. தன் மக்களைக் காக்கும் கடவுள் ஒருபோதும் அயர்வதுமில்லை உறங்குவதுமில்லை என்று திருவிலியத்தில் வாசிக்கின்றோம் இல்லையா? உண்மை நீதிபதியான அவர், தான் அளித்த வாக்குறுதிகளை ஒருபோதும் மறந்துவிடுவதில்லை. அவற்றை அவர் எப்போதும் தன் நினைவில் கொண்டுள்ளார். அவரது நீதித்தீர்ப்புகள் எப்போதும் நிலையானவை, நேர்மையானவை. "எழிலின் நிறைவாம் சீயோனின்று, ஒளிவீசி மிளிர்கின்றார் கடவுள்" என்கின்றார் தாவீது. சீயோன் நகர் என்பது எருசலேமைக் குறிக்கின்றது. கடவுள் குடியிருக்கும் நகர் அது என்றும், அதில் நீதியின் கதிரவனாகக் கடவுள் வீற்றிருக்கின்றார் என்றும், தாவீது வெவ்வேறுத் திருப்பாடல்களில் கூறியிருக்கின்றார். தாவீது யூதா, இஸ்ரயேலின் அரசரானபோது, அவருடைய ஆட்களுடன் அம்மண்ணின் மைந்தர் எபூசியருக்கு எதிராக எருசலேம் சென்றபோது, அவர்கள் தாவீதை நோக்கி, “நீர் இங்கே வர முடியாது; பார்வையற்றவரும் முடவரும்கூட உம்மை அப்புறப்படுத்தி விடுவார்கள்”- அதாவது “இங்கே தாவீது வர முடியாது” என்றனர். இருப்பினும், தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினார். அதுவே தாவீதின் நகர் (காண்க 2 சாமு 5:6-7). எதற்காக இப்பகுதியை குறிப்பிட்டுக் காட்டுகின்றேன் என்றால், தாவீது எருசலேமைக் கைப்பற்றியது மட்டுமன்றி, அதனைத் தனது அரசின் தலைநகராகவும் மாற்றுவதற்குக் காரணமே இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் அது கடவுள் வாழும் இல்லமாகவும் கோயிலாகவும் கருதப்பட்டதால்தான். அதனால்தான் தாவீது அரசர் உடன்படிக்கை பேழையை கிரியத் எயாரிமிலிருந்து எருசலேமுக்குக் கொண்டு வந்தார் (காண்க 1 குறி 13:1-4). “கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்; என் சார்பாகச் செயலாற்றிய கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்! எருசலேமில் உமது கோவில் உள்ளது; எனவே, அங்கு அரசர் உமக்குக் காணிக்கை கொணர்வர்” (காண்க திபா 68:28-29) என்றும், “எருசலேமைத் தம் உறைவிடமாகக் கொண்டிருக்கும் ஆண்டவர் போற்றப்படுவாராக; சீயோனிலிருக்கும் ஆண்டவர் போற்றப்படுவாராக. அல்லேலூயா!” (காண்க திபா 135:21) என்றும் எருசலேமைத் தனது உறைவிடமாகக் கொண்டு அதில் தங்கி வாழும் கடவுள் குறித்தும் புளங்காங்கிதம் அடைந்து கூறுகின்றார் தாவீது. அதனால்தான் இன்றும் கூட எருசேலம் கோவில் உலகெங்கிலும் வாழும் யூத மக்களின் இதயமாக விளங்குகின்றது என்பதை அறிய வருகின்றோம்.

அடுத்து, "நம் கடவுள் வருகின்றார்; மௌனமாய் இருக்கமாட்டார்; அவருக்கு முன்னே, சுட்டெரிக்கும் தழல் நெருப்பு! அவரைச் சுற்றிலும், கடுமையான புயற்காற்று! உயர் வானங்களையும் பூவுலகையும் அவர் அழைத்து, தம் மக்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றார்” என்று உரைக்கின்றார் தாவீது அரசர். சீயோன் நகரைத் தனது உறைவிடமாகக் கொண்டுவாழும் கடவுள் அநீதிகளைக் கண்டும் காணாமலும் இருக்கமாட்டார் என்றும், தனது மக்களுக்குத் தீர்ப்பு வழங்கி அவர்களைக் காப்பாற்றுகிறார் என்றும் கூறும் விதமாகவே தாவீது இந்த வார்த்தைகள் அமைகின்றன. மேலும் இங்கே கூறப்படும் 'சுட்டெரிக்கும் தழல் நெருப்பு!' ‘கடுமையான புயற்காற்று!’ ஆகிய இரண்டையும் அநீதிக்கு எதிரான கடவுளின் கோபக் கனலாகவே நாம் பார்க்கலாம். அத்துடன் 'உயர் வானங்களையும் பூவுலகையும் அவர் அழைத்து, தம் மக்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றார்' என்ற வார்த்தைகள் அவர் வழங்கும் நீதித்தீர்ப்பிற்கு அவைகள் சாட்சிகளாக அமைவதையும் நாம் கண்டுகொள்ளலாம்.

இறுதியாக, "பலியிட்டு என்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட என் அடியார்களை என்முன் ஒன்று கூட்டுங்கள்.’ வான்வெளி அவரது நீதியை  எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்!" என்று உரைக்கின்றார் தாவீது. இந்த இறைவார்தைகளில் 'உடன்படிக்கை' என்பது குறித்து சற்று ஆழமாகச் சிந்திப்போம். இன்றும் மனிதர் வாழ்வில் உடன்படிக்கை என்பது பல்வேறு தளங்களில் மிகவும் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது. கடவுள் தனது அன்புறவை இஸ்ரயேல் மக்களுடன் நிலைநிறுத்திக்கொள்ள உடன்படிக்கையை ஏற்படுத்தினார் என்பதைப் பார்க்கின்றோம். திருவிவிலியத்தில் பல உடன்படிக்கைகள் காணப்படுகின்றன. ஆனால் திருவிவிலியத்தின் கதையையும், கடவுளின் மீட்புத் திட்டத்தையும் நாம் புரிந்துகொள்வதற்கு ஐந்து உடன்படிக்கைகள் மிகவும் முக்கியமானவையாக உள்ளன. அவைகள்: நோவாவுடன் உடன்படிக்கை, ஆபிரகாமுடன் உடன்படிக்கை, மோசேயுடன் உடன்படிக்கை, தாவீதுடன் உடன்படிக்கை மற்றும் புதிய உடன்படிக்கை. பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட கடவுளின் மக்களை மீட்டல் மற்றும் புதுப்பித்தல் பற்றிய எரேமியாவின் வாக்குறுதியில் புதிய உடன்படிக்கை என்பது முதலில் பயன்படுத்தப்பட்ட மொழியாகும். "இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன், என்கிறார் ஆண்டவர்  என்றும், அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே; என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்" (காண்க  எரே 31:31, 33) என்றும் வாசிக்கின்றோம்.

மேலும், "உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். எனது பெயருக்காக கோவில் கட்டவிருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான்" (காண்க 2 சாமு 12-14b) என்பது கடவுள் தாவீது அரசருடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையாகும் என்பதையும் இக்கணம் நினைவுகூர்வோம். ஆகவே, அநீதிகள் நிறைந்த சூழல்களில் நாம் வாழ நேரிட்டாலும் கடவுள் நமக்கு நீதித்தீர்ப்பு வழங்க நம்மைத் தேடி வருவார் என்ற நம்பிக்கையில் நமது கிறிஸ்தவ வாழ்வின் பயணத்தைக் தொடர்வோம். அவருடனான நமது உடன்படிக்கையை புதுப்பித்துக் கொள்வோம். அதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 February 2024, 13:58