தேடுதல்

கர்தினால் ஃபெலிப் நேரி ஃபெர்ராவ் கர்தினால் ஃபெலிப் நேரி ஃபெர்ராவ் 

கோவாவில் தவக்காலத்தின் தொடக்கமாக சான்கோலேவுக்குப் திருப்பயணம்!

கோவா மற்றும் டாமன் பேராயர் கர்தினால் ஃபெலிப் நேரி ஃபெர்ராவ், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், பொதுநிலை விசுவாசிகள் மற்றும் சில பிற மதத்தினருடன் சேர்ந்து இந்தத் திருப்பயணத்தில் தனிப்பட்ட முறையில் பங்கேற்றனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நாம் அனைவரும் இந்த உலகில் திருப்பயணிகள், நாம் பிறக்கும்போது எதனையும் கொண்டு வருவதில்லை, இறந்த பிறகு எதையும் இங்கிருந்து எடுத்துச் செல்வதில்லை என்றும், நமக்கு வாழ்வு அருளிய கடவுளுக்கு முதலிடம் கொடுத்து, பிறர் நலனுக்காக தன்னலமின்றி வாழ்வதுதான் முக்கியம் என்றும் கர்தினால் ஃபெலிப் நேரி ஃபெர்ராவ் கூறியதாக எடுத்துக்காட்டியுள்ளது ஆசிய செய்தி நிறுவனம்.  

தவக்காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான பிப்ரவரி 18-ஆம் தேதியன்று, இந்தியாவின் கோவா மற்றும் டாமன் உயர்மறைமாவட்டங்களைச் சேர்ந்த கத்தோலிக்க விசுவாசிகள், சான்கோலேயின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலுக்கு ஆண்டுத் திருப்பயணம் மேற்கொண்ட வேளை, கர்தினால் ஃபெலிப் நேரி அவர்கள் இவ்வாறு கூறியதாக தெரிவித்துள்ளது அச்செய்தி நிறுவனம்.

கோவா மற்றும் டாமன் பேராயர் கர்தினால் ஃபெலிப் நேரி ஃபெர்ராவ், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், விசுவாசிகள் மற்றும் சில பிற மதத்தினருடன் சேர்ந்து இந்தத் திருப்பயணத்தில் தனிப்பட்ட முறையில் பங்கேற்றதாகவும் அச்செய்தி நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இத்திருப்பயணத்தின் இலக்கு அதாவது சென்று சேருமிடம் சான்கோலே என்றும், புனித  ஜோசப் வாஸ், கடவுளுக்கும், அவர்தம் மக்களுக்கும் இறைபணி ஆற்றுவதற்காக, 1677-ஆம் ஆண்டில், இங்கிருந்துதான் தனது பயணத்தைத் தொடங்கினார் என்றும், அதன் பின்னர் கர்நாடகா, தமிழ்நாடு எனப் பயணித்து இறுதியில் இலங்கையை அடைந்தார் என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 "தவத்தின் பாதையில் ஒன்றாக நடப்போம், மற்றும் நம்பிக்கையின் முன்னறிவிப்பாளர்களாக இருப்போம்" என்ற கருப்பொருளுடன் இவ்வாண்டிற்கானத் இத்திருப்பயணம் தொடங்கியது எனத் தெரிவிக்கும் அச்செய்திக் குறிப்பு, கடவுளின் அன்பையும், இந்த அன்பிற்கான நமது பதிலிறுப்பையும் பிரதிபலிக்கும் வகையில், தவம் மற்றும் தியாகத்துடன் இத்தவக்காலத்தைத் தொடங்க விசுவாசிகளுக்கு இந்தத் திருப்பயணம் பெரும் உதவியாக அமைந்தது என்றும் உரைக்கின்றது.

'நம்பிக்கை திருப்பயணம்' என்று அழைக்கப்படும் இந்தத் திருப்பயணம், அவ்வுயர்மறைமாவட்டங்களின் வெவ்வேறு பங்குத்தளங்களிலிருந்து பலரும் கலந்துகொண்டனர் என்றும், இதில் பங்குபெற்ற விசுவாசிகள் அனைவரும் அதிகாலை 2 மணிக்குப் புறப்பட்டு, மாலை 5 மணிக்கு சான்கோலேவை அடைந்தனர் என்றும், அதன்பின்னர் திருநற்கருணை ஆராதனை வழிபாடும் திருப்பலியும் நடைபெற்றதாக அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 February 2024, 14:11