தேடுதல்

திருநீற்றுப் புதன் திருப்பலியில் இறைமக்கள் (கோப்புப் படம்) திருநீற்றுப் புதன் திருப்பலியில் இறைமக்கள் (கோப்புப் படம்) 

பிலிப்பீன்சில் கோவில் இடிந்து ஒருவர் பலி, 53 பேர் காயம்!

1994-இல் கட்டியெழுப்பப்பட்ட இக்கோவிலில் ஏறத்தாழ 400 பேர் திருநீற்றுப் புதன் திருப்பலியில் கலந்துகொண்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிலிப்பீன்சின் புலாக்கன் மாநிலத்தில் பிப்ரவரி 14, இத்திருநீற்றுப் புதன் வழிபாட்டின் போது கத்தோலிக்க ஆலயம் ஒன்றின் இரண்டாவது மாடியின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார் என்றும், 53 பேர் காயமடைந்தனர் என்றும் யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிலிப்பீன்சின் தலைநகர் மணிலாவிலிருந்து வடகிழக்கே 47 கிலோமீட்டர் தொலைவில் உள்ள San Jose del Monte நகரில் உள்ள புனித பேதுரு கோவிலில் நிகழ்ந்துகொண்டிருந்த வழிபாட்டின் இடையே இந்த விபத்து நிகழ்ந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்ததாக அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 80 வயது நிரம்பிய மூதாட்டி Luneta Morales, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தார் என்றும், சிலர் காயங்களுக்கு மருந்திட்டுக்கொண்டு சென்றுவிட்டனர் என்றும், மேலும் சிலர் மருத்துவமனையில் இன்னும் கண்காணிப்பில் உள்ளனர் என்றும் நகர மேயர் Arthur Robes அவர்கள் கூறியுள்ளார் என்றும் அச்செய்தி உரைக்கின்றது.

இச்சம்பவத்திற்குப் பிறகு, நகர கட்டிட அதிகாரிகளும் கோவிலின் சேத மதிப்பீட்டை மேற்கொண்ட வேளை,  தற்போதைக்கு அங்குத் திருப்பலிக் கொண்டாட வேண்டாம் என்று மேயர் Robes அவர்கள் உத்தரவிட்டுள்ளார் என்றும், காயமடைந்தவர்களுக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக நகரப் பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை அலுவலகத் தலைவர் Gina Ayson  அவர்களும் தெரிவித்துள்ளார் என்றும் அச்செய்திக் குறிப்புக் கூறுகின்றது.

இச்சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த Malolos  மறைமாவட்ட ஆயர் Dennis Villarojo அவர்கள், நகர அதிகாரிகள் தற்போது இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும், ஒவ்வொரு ஆண்டும் தவக்காலக் கொண்டாட்டங்களுக்கு ஏராளமான விசுவாசிகள் வருவதால், அனைத்துப் பங்குத்தளங்களிலும் உள்ள பங்குத்தந்தையர்கள் தங்களின் பொறுப்பிலுள்ள கோவில்களைச் சரிபார்க்குமாறு அவர்களை அறிவுறுத்தியுள்ளதாகவும் அச்செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 February 2024, 14:38