தேடுதல்

இந்திய கத்தோலிக்கப் பள்ளி மாணவியர் இந்திய கத்தோலிக்கப் பள்ளி மாணவியர்   (ANSA)

மத அடையாளம் அகற்றப்பட மிரட்டப்படும் கிறிஸ்தவர்கள்!

அஸ்ஸாமில் பழங்குடியினர் பகுதிகளில், அதிலும் எளிதில் அணுகமுடியாத பகுதிகளில் கிறிஸ்தவர்கள் சென்று கல்வி வழங்கி, மக்கள் மேம்பாட்டுப் பணிகளை ஆற்றிவருகின்றனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவப் பள்ளிகளும் தங்கள் கட்டிடத்திற்குள் உள்ள அனைத்து மத அடையாளங்களையும் நீக்க வேண்டும் என்ற மாநில அரசின் ஆணயைத் தொடர்ந்து, கிறிஸ்தவப் பள்ளி ஒன்று தீவிரவாதக் குழு ஒன்றால் மிரட்டப்பட்டுள்ளதால் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மத அடையாளங்கள் கிறிஸ்தவ பள்ளி கட்டிடங்களிலிருந்து அகற்றப்படவேண்டும் என அரசு ஆணை பிறப்பித்த இரண்டு வாரங்களுக்குப்பின் அஸ்ஸாம் மாநிலத்தின் Jorhat என்னுமிடத்தில் உள்ள கத்தோலிக்க கார்மல் பள்ளியில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில் ஒருவாரத்திற்குள் மத அடையாளங்கள் அகற்றப்பட வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மிரட்டலை விடுக்கும் இந்தச் சுவரொட்டியால் ஒருவித அச்ச உணர்வு பள்ளி வளாகம் முழுவதும் பரவியுள்ளதாகத் தெரிவித்தார் அப்பள்ளியின் முதல்வர், அருள்சகோதரி ரோஸ் பாத்திமா.

கடந்த 60 ஆண்டுகளாக இப்பள்ளியை நடத்திவரும் அப்போஸ்தலிக்க கார்மல் அருள்சகோதரிகள், ஓர் அமைதியான சூழலை உருவாக்குவதையே தங்கள் நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாக உரைத்தார் அருள்சகோதரி பாத்திமா.

அஸ்ஸாமில் பழங்குடியினர் வாழும் பகுதிகளில், அதிலும் எளிதில் அணுகமுடியாத பகுதிகளில் கிறிஸ்தவர்கள் சென்று கல்வி வழங்குவதன் வழியாக மக்கள் மேம்பாட்டுப் பணிகளை ஆற்றிவருகின்றனர்.

3 கோடியே 10 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட அஸ்ஸாமில் 3.74 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்களாக உள்ளனர்.

வடகிழக்குப் பகுதியில் உள்ள ஏழு மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 February 2024, 13:57