தேடுதல்

ஜோர்தானில் உதவிபெற்று பயிலும் பாலஸ்தீன குழந்தைகள் ஜோர்தானில் உதவிபெற்று பயிலும் பாலஸ்தீன குழந்தைகள்  (ANSA)

அகதிகள் மிகுதியால் ஜோர்தானுக்குள் காசா இருப்பதாக தோற்றம்

பாலஸ்தீன மக்களுடனான ஒருமைப்பாட்டில் ஜோர்தான் மக்கள் தங்கள் கொண்டாட்டங்களையும் பயணங்களையும் நிறுத்திவிட்டு பாலஸ்தீன மக்களுக்காகச் செலவழிக்கின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

எந்த நாட்டையும் விட அதிக அளவு பாலஸ்தீன அகதிகளை வரவேற்றுள்ள ஜோர்டான் நாட்டில், காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு தன்னால் இயன்ற அனைத்தையும் பாலஸ்தீனர்களுக்கு ஆற்றிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1948ஆம் ஆண்டு முதல் பாலஸ்தீனியர்களுக்கு அடைக்கலம் கொடுத்துவரும் ஜோர்டானில், பாலஸ்தீனத்தில் இருப்பதைவிட அதிக அளவு பாலஸ்தீனியர்கள் வாழ்கிறார்கள் என்ற ஜோர்டான் காரித்தாசின் இயக்குனர் Wael Suleiman அவர்கள், தற்போது அகதிகள் மிகுதியால் ஜோர்தானுக்குள் காசா இருப்பது போன்ற ஒரு தோற்றம் கிட்டுவதாகவும், அனைத்து வழிகளிலும் இவர்களுக்கு உதவுவதையே கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு தன் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் எடுத்துரைத்தார்.

பாலஸ்தீன மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை ஒவ்வொரு ஜோர்தான் மக்களும் உணர்வதால் அண்மைக் காலங்களில் அந்நாட்டு மக்கள் தங்கள் கொண்டாட்டங்களையும் பயணங்களையும் நிறுத்திவிட்டு அந்த தொகையை பாலஸ்தீன மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக செலவழிப்பதைக் காணமுடிகிறது என்றார் சுலைமான்.

2011ல் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட சிரியாவிலும், 2014ன் போரால் பாதிக்கப்பட்ட ஈராக்கிலும் காரித்தாஸ் நிறுவனம் சேவையாற்றிவருவதாக உரைத்த சுலைமான் அவர்கள், 1967ஆம் ஆண்டின் 6 நாள் போரிலிருந்து காரித்தாஸ் ஜோர்டான், பாலஸ்தீன அகதிகளிடையே சேவையாற்றி வருகின்றது என்றார்.

ஏனைய மனிதாபிமான அமைப்புக்களுடன் இணைந்து ஜோர்டானிலிருந்து பணியாற்றிவரும் காரித்தாஸ் ஜோர்டான் அமைப்பு, அந்நாட்டிற்குள் 26 மையங்களில் 400 பணியாளர்களைக் கொண்டு சேவையாற்றி வருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 February 2024, 15:40