தேடுதல்

கர்தினால் லூர்துசாமியும் அன்னை தெரேசாவும் கர்தினால் லூர்துசாமியும் அன்னை தெரேசாவும் 

கர்தினால் லூர்துசாமி அவர்களின் நூற்றாண்டுக் கொண்டாட்டம்

இந்தியாவின் நான்காவது கர்தினாலான தமிழ்நாட்டின் கர்தினால் லூர்துசாமி அவர்கள், தமிழகத்தின் முதல் கர்தினால் மட்டுமல்ல, திருப்பீடத்தில் இவ்வளவு பெரிய பதவியிலமர்ந்த முதல் ஆசியர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, தமிழகத்தின் முதல் கர்தினாலும், ஒரே கர்தினாலுமாகிய சைமன் லூர்துசாமி அவர்கள் பிறந்து இம்மாதம் முதல் வாரத்தில் நூறாண்டுகள் நிறைவுறுகின்றன. 1924ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி(4ஆம் தேதி) தமிழகத்தின் கல்லேரி என்னும் ஊரில் பிறந்த நம் கர்தினால் லூர்துசாமி அவர்கள், 1962ஆம் ஆண்டில் ஆயரானார். அப்போது அவரின் வயது 38 தான். திருஅவையில் ஒருவர் 38 வயதிலேயே ஆயர் ஆவது என்பது அக்காலத்திலும் இக்காலத்திலும் வியப்பான செய்திதான். அதுமட்டுமல்ல, ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி ஆயராக திருப்பொழிவுபெற்ற அவர், அதே ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி உரோமில் துவங்கிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திலும் கலந்துகொள்கிறார். அதன்பின் அவரின் பயணம் பெங்களூருவின் இணை ஆயர், பேராயர் என 1971ஆம் ஆண்டுவரைத் தொடர்கிறது. 1971ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் உரோம் நகருக்கு அழைக்கப்பட்டு திருப்பீட தலைமையகப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார். 1985ஆம் ஆண்டுவரை நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் செயலராகப் பணியாற்றிய பேராயர் லூர்துசாமி அவர்கள், 1985ஆம் ஆண்டு மே மாதம் திருத்தந்நை இரண்டாம் ஜான் பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். திருப்பீடத்தின் கீழைவழிபாட்டுமுறை திருப்பேராயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார் கர்தினால் லூர்துசாமி. இந்தியாவின் மும்பை பேராயர் கர்தினால் வலேரியான் கிரேசியாஸ், எர்ணாகுளம் பேராயர் கர்தினால் ஜோசப் பரெக்காட்டில், (மும்பையில் பிறந்து கராச்சியின் பேராயராக பணியாற்றிய கர்தினால் ஜோசப் மரி ஆண்டனி கொர்தெய்ரோ அவர்கள் இங்கு சேர்க்கப்படவில்லை) கல்கத்தா பேராயர் கர்தினால் இலாரன்ஸ் பிக்காச்சி  ஆகியோருக்குப்பின் இந்தியாவின் நான்காவது கர்தினாலான தமிழ்நாட்டின் கர்தினால் லூர்துசாமி அவர்கள், தமிழகத்தின் முதல் கர்தினால் மட்டுமல்ல, திருப்பீடத்தில் இவ்வளவு பெரிய பதவியிலமர்ந்த முதல் ஆசியர்.

நம் கர்தினால் லூர்துசாமி அவர்களுக்கு தமிழ், இலத்தீன், ஆங்கிலம், கன்னடம், இத்தாலியம், பிரஞ்சு, ஜெர்மன், ஸ்பானியம், போர்த்துகீசியம், டச்சு, ஸ்வீடிஷ் உட்பட பல மொழிகள் தெரியும்.

வானகத்திலுள்ள எம் தந்தாய் என்ற செபம் இயேசுவால் கற்பிக்கப்பட்ட இடத்திலுள்ள கோவிலில் (எருசலேம் நகர்), தமிழ் மொழியில் இச்செபம் அடங்கிய கற்பலகை கர்தினால் லூர்துசாமியின் முயற்சியால் 1983ஆம் ஆண்டு வைக்கப்பட்டது என்பதை நாம் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

1997ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் நாள் அன்னை தெரேசாவின் (1910-1997) அடக்கச் சடங்கில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் சிறப்புத் தூதுவராக கலந்துகொண்ட கர்தினால் லூர்துசாமி அவர்கள், 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதி தன் 90ஆம் வயதில் இறைபதம் சேர்ந்தார். இவரின் உடல் இந்தியாவுக்குக் கொணரப்பட்டு, ஜூன் மாதம் 9ஆம் தேதி புதுச்சேரி தூய அமலோற்பவ அன்னை பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

நம் பாசமிகு கர்தினால் அவர்களின் 100வது பிறந்த நாளையொட்டி அவரோடு நெருங்கிப் பழகிய, இருவரை தொடர்புகொண்டு, கர்தினால் குறித்துக் கேட்டோம். முதலில் நமக்கு கர்தினால் குறித்து பகிர்பவர், சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்தின் மேன்மைமிகு பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள். உரோம் நகரில், மேய்ப்புப்பணி இறையியல், மற்றும் திருஅவை சட்டங்கள் ஆகிய இருதுறைகளிலும் முனைவர் பட்டம் பெறுவதற்காக பயின்ற காலத்திலும் சரி, ஆப்ரிக்கா, ஆசியா மற்றும் பால்டிக் நாடுகளில் திருப்பீடத் தூதரகங்களில் பெரும்பொறுப்புக்களை ஏற்று பணியாற்றியபோதும் சரி, கயானா, காம்பியா, லிபேரியா, சியரா லியோன் ஆகிய நாடுகளின் திருப்பீடத்தூதராக பணியாற்றியபோதும் சரி, ஜோர்டன் நாட்டில் திருத்தந்தையின் அப்போஸ்தலிக்க திருத்தூதுப் பணிகளின் பிரதிநிதியாகவும் பணியாற்றியபோதும் சரி, கர்தினால் லூர்துசாமி அவர்களை அடிக்கடி சந்தித்து உரையாடும் வாய்ப்புப் பெற்றிருந்தார் பேராயர். கர்தினால் லூர்துசாமி அவர்கள் இறைபதம் சேர்ந்தபோது பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள் சென்னை மயிலை பேராயராக பொறுப்பேற்றிருந்தார். கர்தினால் லூர்துசாமி குறித்து இப்போது பேராயர் கூறுவதைக் கேட்போம்.

மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள் கர்தினால் லூர்துசாமி குறித்து

அடுத்து நாம் அணுகியது அடையாறு பெசன்ட் நகர் திருத்தலப் பங்குதந்தை அருள்முனைவர் வின்சென்ட் சின்னதுரை அவர்களை. அன்னை தெராசாவின் மனிதாபிமானப் பணிகளில் அதிக ஆர்வம் உடைய இவர்,  அரசின் இராஷ்டிரிய கௌரவ் விருது உடபட பல விருதுகளைப் பெற்றுள்ளவர். அன்னை தெரேசா பற்றிய ‘பூமியின் தேவதை’, நற்செய்தியின் புதுக்கவிதை வடிவான காப்பியம் ‘புதிய சாசனம்’ உட்பட ஒன்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழ்நாட்டு அரசின் சிறுபான்மை ஆணையத்தின் தலைவராகவும் இவர் சிறப்புச் சேவையாற்றியுள்ளார். கத்தோலிக்க வார இதழ் நம் வாழ்வின் ஆசிரியராகவும், சாந்தோம் கலத்தொடர்பு நிலையத்தின் இயக்குனராகவும், கத்தோலிக்க சமூகத்தொடர்பாளர்களின் உலகக் கூட்டமைப்பான Signis என்பதன் தமிழகத் தலைவராகவும் பணியாற்றியுள்ள இவர், ஒவ்வொருமுறை உரோம் நகர் வரும்போதும், கர்தினால் அவர்கள் இந்தியா செல்லும்போதும் அவரை சந்தித்து உரையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். அருள்பணி சின்னதுரை அவர்கள் கூறுவதை இப்போது செவிமடுப்போம்.

அருள்முனைவர் வின்சென்ட் சின்னதுரை அவர்கள் கர்தினால் லூர்துசாமி குறித்து

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 February 2024, 15:57