தேடுதல்

வாழ்வை வழங்கும் இயேசு வாழ்வை வழங்கும் இயேசு  (©paracchini - stock.adobe.com)

தடம் தந்த தகைமை - வாழ்வு தரும் தண்ணீர்

ஒருவரைப் புரிந்துகொள்ளும்வரை அவர் நமக்குப் புதிர்தான். சிறந்த குணம் கொண்டவர்கள் பெற மட்டுமல்ல; கொடுப்பதற்கான தேவையையும் உணர்ந்திருப்பார்கள்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

இயேசு சமாரியப் பெண்ணைப் பார்த்து, “கடவுளுடைய கொடை எது என்பதையும் ‘குடிக்கத் தண்ணீர் கொடும்’ எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்கிறார்.

சமாரியப் பெண்ணோ, “ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்?” என கேட்கிறார்.

கடவுளின் கொடை கரையில்லாதது. அது கடையரையும் சேர்ந்து கரையேற்ற வல்லது. ஆனால் கடவுளின் நேரடி மக்கள் நாங்கள், அவரை நாங்கள் எங்கள் கைக்குள் வைத்துள்ளோம் என்று கர்ச்சித்து வந்த யூத சமூகத்திற்கு இயேசுவின் பார்வையும் அணுகுமுறைகளும் புதிதாகவும் புதிராகவும் இருந்தன. கடவுள் யூதர் என்ற ஓர் இனத்திற்கானவர் மட்டுமல்லர்; ஒட்டுமொத்த உலகிற்கும் சொந்தக்காரர் என்ற சிந்தனையைத்தான் சமாரியப் பெண்ணிடம் சிந்தினார் இயேசு. இயேசுவோடு நடந்த உரையாடலின் இறுதிவரை சமாரியப்பெண் தன் சமூகக் கட்டுக்குள் கட்டுண்டுக் கிடப்பதைக் காணலாம். ஆழமான கிணறு, தண்ணீர் மொள்ள ஏதுமில்லா நிலை, யாக்கோபிலும் பெரியவரோ என்ற கேள்வி, கிணற்றின் முந்தைய பயன்பாடு எல்லாமே இயேசுவிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவோ அல்லது அவ்விடத்திலிருந்து இயேசுவை அகன்று போகச் செய்யவோ வேண்டும் என்பதற்கான முயற்சிகள்.

ஒருவரைப் புரிந்துகொள்ளும்வரை அவர் நமக்குப் புதிர்தான். புரிந்தபின் சிறு பிரிவுகூட பெருந்துயரமாகத் தோன்றும். சிறந்த குணம் கொண்டவர்கள் பெற மட்டுமல்ல; கொடுப்பதற்கான தேவையையும் உணர்ந்திருப்பார்கள்.

இறைவா! பிறரின் தேவைகளைப் புரிந்து பரிவோடு பகிரும் பண்பைத் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 February 2024, 12:37