தேடுதல்

பெலிஸ்தியரை முறியடிக்கும் இஸ்ரயேலர் பெலிஸ்தியரை முறியடிக்கும் இஸ்ரயேலர்  

தடம் தந்த தகைமை : பெலிஸ்தியரின் தோல்வி!

அன்று ஆண்டவர் இஸ்ரயேலை விடுவித்தார். போர் பெத்தாவேனையும் தாண்டி நடந்தது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பென்யமின் பகுதியிலுள்ள கிபயாவில் இருந்த சவுலின் சாமக் காவலர் பெலிஸ்தியர் கூட்டம் இங்கும் அங்கும் சிதறிக் கரைந்து விட்டதைக் கண்டார்கள். சவுல் தம் ஆள்களை நோக்கி, “கணக்கெடுத்து நம்மைவிட்டுச் சென்றவர் யார் என்று பாருங்கள்” என்றார். அவர்கள் கணக்கெடுத்துப் பார்க்க, யோனத்தானும் அவர்தம் படைக்கலன்களைத் தாங்குவோனும் இல்லை என்று கண்டனர். பிறகு, சவுல் அகியாவை நோக்கி, “கடவுளின் பேழையைக் கொண்டு வா” என்றார். ஏனெனில், அக்காலத்தில் பேழை இஸ்ரயேல் மக்களோடு இருந்தது. குருவிடம் சவுல் பேசிக்கொண்டிருந்தபோது பெலிஸ்தியரின் பாளையத்தில் ஏற்பட்ட குழப்பம் தொடர்ந்து மிகுதியாயிற்று. சவுல் குருவிடம், “உன் கையை விலக்கிக் கொள்” என்றார். அதன்பின் சவுலும் அவரோடிருந்த ஆள்கள் அனைவரும் ஒன்று திரண்டு போருக்குச் சென்றனர்.

இதோ, பெலிஸ்தியர் ஒருவன் ஒருவனுக்கு எதிராக வாளெடுக்க அவர்களிடையே மாபெரும் அச்சம் ஏற்பட்டது. ஏற்கெனவே பெலிஸ்தியரோடு சேர்ந்து கொண்டு அவர்களோடு பாளையத்தில் திரிந்துவந்த எபிரேயரும், சவுலோடும் யோனாத்தானோடும் இருந்த இஸ்ரயேலுடன் இணைந்து கொண்டனர். எப்ராயிம் மலைநாட்டில் ஒளிந்து கொண்டிருந்த இஸ்ரயேலர் அனைவரும் பெலிஸ்தியர் தப்பியோடுவதைக் கேள்வியுற்று, அவர்களும் அவர்களைத் துரத்தித் தாக்கினார்கள். அன்று ஆண்டவர் இஸ்ரயேலை விடுவித்தார். போர் பெத்தாவேனையும் தாண்டி நடந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 February 2024, 13:44