தேடுதல்

இயேசு நம்மை அன்புகூர்ந்து அரவணைக்கிறார் இயேசு நம்மை அன்புகூர்ந்து அரவணைக்கிறார் 

விடை தேடும் வினாக்கள் – அன்பு செலுத்துவோருக்கே அன்பு என்றால்....

எல்லா மதங்களுமே அன்பை முதன்மைப்படுத்துகின்றன. ஆனால் கிறிஸ்தவம் மட்டுமே, அன்பு என்பது எதிரியை மன்னிப்பதையும், அன்புச் செய்வதையும் கடமையாக கற்பிக்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? என்பது இயேசுவின் கேள்வி.

இதனைத் தொடர்ந்து அவர் கேட்கும் கேள்விகள். வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா? நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா? என்பதாக இருக்கின்றன.

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது நீங்கள் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதல்ல!, பிறருடைய செயல்களைப் போல உங்கள் செயல்கள் இருந்தால் போதாது என்கிறார் இயேசு! அதை விட அதிகமாக, அதை விட மேலானதாக இருக்க வேண்டும் என்கிறார்! அதாவது, கிறிஸ்தவர்களுக்கென்று ஒரு தனித்தன்மை உண்டு என உரைக்கிறார். பாத்திரம் அறிந்து பிச்சையிடு என உலகம் உரைப்பதைக் கேட்டிருக்கிறோம். இயேசுவோ, பாத்திரத்தை அறிவது உன் வேலையல்ல, அனைவருக்கும் உன் அன்பைக் காட்டு என்கிறார். உன்னிடம் அன்பை எதிர்பார்ப்பவர்களுக்கு முகம் கோணாமல் பாரபட்சமின்றி கொடு என்கிறார். ‘அவர் கேட்கும் நிலையில் இருக்கிறார், நீயோ கொடுக்கும் நிலையில் இருக்கிறாய். உன்னை இந்த நிலையில் வைத்திருக்கும் கடவுளை நீ அன்பு செய்ய விரும்பினால், கேட்கும் நிலையில் இருப்பவருக்குக் கொடு’ என்கிறார் இயேசு! அன்பு என்பது கொடுக்கல் வாங்கலாய் இருந்தால் உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது என்பது இங்கு உட்பொருள். ‘உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்?’ என்பது ஒரு புரட்சிகரமான கேள்வியாக இருக்கிறது.

கிறிஸ்தவத்தின் ஆணிவேரே அன்புதான்! அன்பிலிருந்துதான் அனைத்துப் புண்ணியங்களும் ஊற்றெடுக்கின்றன. ஆண்டவருடைய ஒட்டுமொத்த போதனையும் ஒரே வார்த்தையில் அடக்க வேண்டும் என்றால், அது அன்பு என்பதற்குள் அடங்கி விடும். இன்னும் கொஞ்சம் விளக்கமாக கூறவேண்டுமானல், ‘இறையன்பு’ ‘பிறரன்பு’ என்று விரிவுப்படுத்தலாம்! அன்பு இல்லையேல் கிறிஸ்தவம் இல்லை: கிறிஸ்தவம் இல்லையேல் அன்பு இல்லை என்பதுதான் உண்மை. கிறிஸ்தவம் மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா மதங்களுமே அன்பை முதன்மைப்படுத்துகின்றன. ஆனால் கிறிஸ்தவம் மட்டுமே, அன்பு என்பது எதிரியை மன்னிப்பதையும், அன்புச் செய்வதையும் கடமையாக கற்பிக்கிறது

இறைவனின் இறைப் பண்புகளுள் ஒன்று அவர் அனைவருக்கும் பொதுவானவர், அனைவரையும் சமத்துவமாக நடத்துபவர் என்பது. எனவேதான், அவர் “நல்லோர்மேலும், தீயோர்மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார், நேர்மையுள்ளோர்மேலும், நேர்மையற்றோர்மேலும் மழை பொழியச் செய்கிறார்” என்று இயேசுவே மொழிந்துள்ளார்.

அன்பு என்றால், 'உனக்கு நான், எனக்கு நீ' அல்லது, ‘நமக்கு நாம்’ என்று உருவாகக்கூடிய குறுகிய வட்டங்களை உடைத்து, அன்பிற்கு விடுதலை தரும்வண்ணம் இயேசு பேசுகிறார்.

இந்த அன்பு, நீ-நான்-நாம் என்ற குறுகிய வட்டத்தை விட்டு வெளியேறி, அடுத்தவர், அதற்கடுத்தவர் என்று, மேலும், மேலும் பரந்து, விரிந்து செல்லவேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம். தன்னை மையப்படுத்தாமல், அடுத்தவரை மையப்படுத்தி எழும் உன்னத உணர்வே, உண்மையான அன்பு. இதைத்தான் இயேசுவின் கேள்வியான, உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? என்பது உணர்த்துகிறது.

இதனோடு தொடர்புபடுத்தி, இயேசு இன்றைய சமுதாயத்திற்கு கொடுத்த மாபெரும் பொன்விதியாகிய, ‘பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்: இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே (மத் 7;12) என்பதை சிந்தித்துப் பாருங்கள். அடுத்தவரை அன்புச் செய்வதில் தான், வாழ்க்கையே அர்த்தப்படுகிறது என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவரும் உணர்ந்து வாழ வேண்டும் என்பதை இயேசு சொல்லித் தருகின்றார்.

பிறரன்பு இறையன்பிற்கும், இறையன்பு பிறரன்பிற்கும் ஈடாகும் என்பதுதான்  கிறிஸ்தவம் சொல்லித் தரும் பாடம். இதனால்தான் இயேசுவும், தாம் கொடுத்த கட்டளையில், ‘நான் உங்களிடம் அன்புச் செலுத்தியது போல, நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்புச் செலுத்துங்கள்: நீங்கள் ஒருவர் மற்றவருக்கு செலுத்தும் அன்பிலிருந்து, நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்’ (யோவான் 13;34-35) என்று வலியுறுத்துகிறார்.

கடவுள் நம்மை அன்புச் செய்வதால் நாமும் ஒருவர் மற்றவரை அன்புச் செய்ய வேண்டியது கட்டாயமாகிறது, அதுவே கடமையுமாகிறது. அதுமட்டுமல்ல, இங்குதான் அன்பு நிறைவடைகிறது. இதைத்தான் புனித யோவான் தன் முதல் திருமடலில், ‘கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது’ (1யோவா 4;20) என தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறார்.  

அதேவேளை, தம் சகோதர் சகோதர்களிடம் அன்பு காட்டாதவர்களும் அவர்கள் செய்த தீமைக்குத் தீமையையே செய்கிறவர்களும் கடவுளின் குழந்தைகளாக, கிறிஸ்தவர்களாக இருக்க முடியுமா?. முடியாது என்பதுதான் பதில். நாம் விண்ணகத் தந்தையின் மக்களாக இருக்கவேண்டுமானால், தீமை செய்தவர்களுக்கு நன்மையையும் பகைவர்களிடம் அன்பையும் வழங்க வேண்டும்.

வில்லியம் ஷெக்ஸ்பியர் அன்பு பற்றி கூறும்போது, ‘மாற்றத்தைக் கண்டு மாறுவது உண்மை அன்பாகாது’, என்பார்.  உற்ற  நண்பராக  இருந்த ஒருவர், சந்தர்ப்பச் சூழலால் எதிரியாக மாறலாம்.  இதனால்,  அவர் மீது காட்டிய அன்பு மாறக்கூடாது. அவருக்கு  உதவ வேண்டிய நிலை ஏற்பட்டால், உடனடியாக உதவ வேண்டும். அவருக்குக் கை கொடுக்க வேண்டும், என்பது இங்கு விளக்கப்படுகிறது. ஆனால், இந்த உலகமோ "பழிக்கு பழி" என்ற தத்துவத்தின் அடிப்படையிலும் "அடித்தால் திருப்பி அடி" என்ற தத்துவத்தின் அடிப்படையிலும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசு புதிய போதனையை அல்லது தத்துவத்தை முன் வைக்கின்றார். அதுதான், தீமைக்கு நன்மை, பகைவருக்கும் அன்பு என்பதாகும்.

ஒருகன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும், அங்கியை எடுத்துக்கொள்பவருக்கு மேலாடையையும், ஒரு கல் தொலை நடக்கக் கட்டாயப்படுத்துவோரிடம் இரு கல் தொலைவும், கேட்போருக்குக் கொடுக்கவும், பகைவரிடம் அன்பும், துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டவும் சொல்லும் இயேசு, தீமைக்கு ஒருபோதும் தீமைத் தீர்வாகாது, நன்மையும் அன்பும் மட்டுமே தீர்வாகும் என்ற உண்மையை எடுத்துக் கூறுகின்றார். உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள், உங்களை துன்புறுத்துவோருக்காக செபியுங்கள் என்று கூறியதை சிலுவையின் உச்சியில் செயல்படுத்திக்காட்டி ஓர் எடுத்துக்காட்டாய் நின்றவரும் அவர்தானே. தவக்காலத்தில் இருக்கும் நாம், சிலுவையில் என்ன பார்க்கிறோம்? இயேசு வெளிப்படுத்திய உடன்படிக்கை அன்பு அங்கு மிளிர்வதைக் காண்கிறோம். இயேசு தான்  தந்தையிடமிருந்து கொணர்ந்த அன்பை இவ்வுலக மானிடரோடு பகிர்ந்தார். ஒடுக்கப்பட்டோர், ஓரங்கட்டப்பட்டோர், விளிம்பிற்குத் தள்ளப்பட்டோர், ஏழைகள் ஆகியோரோடு அன்பின் வழியாக   தன்னை ஒன்றிப்பாக்கினார். ஆம், பாவிகளோடு பந்தியமர்ந்தார். நோயுற்றோருக்கே மருத்துவர் தேவை என அதை நியாயப்படுத்தினார். இதில்தான் நாம் கிறிஸ்தவத்தின் சாராம்சம் செயல்படுவதைக் காண்கிறோம். திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும்  அடிப்படையாக இருக்கும் கட்டளைகள் என்ன என இயேசு கூறியதைக் கொஞ்சம் நினைவிற்குக் கொண்டுவரப் பார்ப்போம். ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’, என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன” என்கிறார் இயேசு. இறையன்பும் பிறரன்பும் அனைத்திற்கும் அடிப்படையாக நிற்கின்றன, என்பதை அறிய வருகின்றோம். ‘இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!’(இ.ச. 6:4-5) என்று இணைச்சட்ட நூலில் கூறப்பட்டுள்ளதையும், ‘உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக!’ (லேவி 19:18) என்று லேவியர் நூலில் சொல்லப்பட்டிருப்பதையும் கிறிஸ்து இணைத்துக் கூறியுள்ளார். இறையன்பும் பிறரன்பும்தான் சட்டம் மற்றும் இறைவாக்குகள் அனைத்தின் அச்சாணி.

கண்ணில் காணும் சகோதரனை அன்பு செய்யாதவன் கடவுளை அன்பு செய்ய முடியாது என்னும் வசனம் வழி அது இன்னும் கூர்மைப்படுத்தப்படுகின்றது. அதாவது, இறையன்பு என்பது பிறரன்பின் வழியாகத்தான் செயலாற்ற முடியும் என்கிறார்! மேலும் ஒரு படிச் சென்று, 'தீமை செய்வோரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்' (மத்தேயு 5:39) என்கிறார் இயேசு.

பழிக்குப் பழி வாங்குபவர்களுக்கு கிறிஸ்தவத்தில் இடமில்லை. மன்னிப்பை அணிபவர்களுக்கே இடம் என்கிறார் அவர். மன்னிப்பு மட்டுமல்ல, உங்களை ஏமாற்றுபவர்களுக்கு இன்னும் அதிகமாய்க் கொடுத்து அவர்களையும் அன்பில் நனையுங்கள் என்கிறார். இதைத்தான், சம காலத்தில் வாழ்ந்த திருவள்ளுவரும், ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என அழகாகக் கூறுகிறார்.

இங்கு நமக்கு ஒரு கேள்வி எழுகின்றது. நமக்கு எதிராக அநீதியான முறையில் செயல்பட்டு நம்மை வன்முறையாகத் தாக்குவோரை நாம் என்ன செய்வது? இயேசுவின் போதனைப்படி, வன்முறையை வன்முறையால் எதிர்ப்பது சரியா, அல்லது வன்முறைக்கு முன் நாம் பணிந்து செல்ல வேண்டுமா? என்பது இங்கு கேள்விக்குறியாகிறது. அநீதிகளைக் கண்டு பணிந்துபோக இறைவன் நம்மை ஒருபோதும் கேட்பதில்லை.  நாம் எதிர்க்க வேண்டும், ஆனால் வன்முறையால் அல்ல என்பதுதான் இயேசுவின் போதனை. மறுகன்னத்தைக் காட்டச் சொன்னவர், தலைமைக் குருவின் காவலருள் ஒருவர், கன்னத்தில் அறைந்தபோது  அவரிடம், “நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்?” என்று கேட்பதைப் பார்க்கிறோம். மறுகன்னத்தையும் காட்டி உன் உயர்ந்த உள்ளத்தை மன்னிப்பில் வெளிப்படுத்து என்றவர், வன்முறைக்கு பணிந்துவிடாதே என்பதை இங்கு காட்டுகிறார். அநீதியை நாம் வன்முறையால் எதிர்ப்பது சரியல்ல என்று இயேசு கூறுவதையும் நாம் உணர்கிறோம்.

இவ்வுலகில் நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைத் தரலாம். ‘ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்’ (உரோ 5:8) என்கிறார் தூய பவுல். இதுதான் கிறிஸ்து நம்மீது கொண்ட அன்பாகும். அவரின் அன்பைப் பெற்று அனுபவித்த நாம் அதனை நமக்குள்ளேயே வைத்துக்கொள்ள முடியாது. அன்பு என்பது இருவழிப் பாதை. அது பெறுவதோடு நின்றுவிடுவதில்லை, கொடுப்பதோடுதான் நிறைவு பெறுகின்றது. மற்றவர்களை அன்பு செய்யவும், மதிக்கவும் ஒருவருக்கொருவர் சேவை செய்வதற்குமான புனித கடமையை ஆற்ற ஒவ்வொரு கிறிஸ்தவரும் அழைப்புப் பெற்றுள்ளார்.

கலிங்கப் போரின் விளைவுகளைக் கண்ட அசோகர், அதிலிருந்து அன்பின் பாடத்தைக் கற்றுக் கொண்டு, அப்போது அன்பைப் போதித்த புத்த மதத்தை தழுவி, அதனை பரப்ப முனைந்தார். அதற்கு பின் இவ்வுலகில் மனுவுருவெடுத்த இயேசுவின் அன்பு பாடத்தைக் கேட்ட புனித டேமியன்கள், அன்னை தெரேசாக்கள், தொழு நோயாளர்களிடையே வாழ்ந்து  

அவர்களுக்கு அன்பு பணியாற்றினர். தங்கள் மீது அன்பு காட்டியவர்களுக்கு அல்ல, மாறாக, யாரென்றே தெரியாதவர்களுக்கு, மதம் என்ற பாகுபாடுகளைத் தாண்டி, மனித குலத்தின் மீதான அன்பால் தூண்டப்பட்டு, இறையன்பின் பலம் கொண்டு பணியாற்றியவர்கள் எத்தனையோ இலட்சம் பேர். அவர்களில் ஒருவராக நாமும் மாறுவோம்.

உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? என்ற இயேசுவின் கேள்வி, விடைகளை நோக்கி நம்மை நடக்க வைக்கட்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 February 2024, 13:05