தேடுதல்

இத்தாலிக்கு இராணுவ விமானத்தில் கொணரப்பட்ட பாலஸ்தீனிய குழந்தைகளை வரவேற்ற இத்தாலிய வெளியுறவு அமைச்சரும் அருள்பணி பால்தாசும் இத்தாலிக்கு இராணுவ விமானத்தில் கொணரப்பட்ட பாலஸ்தீனிய குழந்தைகளை வரவேற்ற இத்தாலிய வெளியுறவு அமைச்சரும் அருள்பணி பால்தாசும்  (ANSA)

காசாவில் காயம்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்கென இத்தாலி வருகை

காசா குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இத்தாலிய அரசு அதிகாரிகள் மற்றும் மக்களின் பேரார்வத்தைக் குறித்து தன் மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளியிட்ட அருள்பணி பால்தாஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இஸ்ராயேல் பாலஸ்தீனியப் போரால் காயமுற்ற குழந்தைகளையும், அப்போர் இடம்பெறும் பகுதிகளின் நோயுற்ற குழந்தைகளையும் இத்தாலிக்குக் கொணர்ந்து சிகிச்சை அளிப்பதன் முதல் தவணையாக 11 குழந்தைகள் உரோம் நகருக்குக் கொணரப்பட்டுள்ளன.

புனித பூமிக்கு பொறுப்பாக இருக்கும் பிரான்சிஸ்கன் துறவி இப்ராஹிம் பால்தாஸ் அவர்களின் முயற்சியின் பேரில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின்படி, இக்குழந்தைகளுக்கு இத்தாலியின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்படும்.

இஸ்ராயேல், பாலஸ்தீனம், எகிப்து, இத்தாலி ஆகியவைகளின் அரசுகளுடன் அருள்பணி பால்தாஸ் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி, இக்குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவி வருகிறார்.

காசா பகுதியின் குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்க முன்வந்திருக்கும் முதல் ஐரோப்பிய நாடான இத்தாலியின் அனைத்து குழந்தை மருத்துவமனைகளும் இதில் ஈடுபட உள்ளன.

போரால் காயம்பட்ட ஏறக்குறைய 50 சிறாரை கப்பல் வழியாக இத்தாலிக்கு கொண்டுவரும் திட்டமும் ஓரிரு நாட்களில் துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இத்தாலிய அரசு அதிகாரிகள் மற்றும் மக்களின் பேரார்வத்தைக் குறித்து தன் மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளியிட்ட அருள்பணி பால்தாஸ் அவர்கள், குழந்தைகளைச் சிகிச்சைக்கு என வெளியே அனுப்ப இஸ்ராயேல் மற்றும் பாலஸ்தீன அதிகாரிகள் இசைவு அளித்தது அமைதியை நோக்கிய முதல்படி என கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 January 2024, 15:22