தேடுதல்

மகதலா மரியா இயேசுவை சந்தித்தது மகதலா மரியா இயேசுவை சந்தித்தது 

விடைதேடும் வினாக்கள் – யாரைத் தேடுகிறீர்கள்?

எந்த ஓர் இலக்கையும் அடைவதற்கு முதலில் நாம் நமக்குள் தேடவேண்டும். நம்மை இழந்து தேடவேண்டும். ஆனால், வெளியே நம்மையே நாம் தேடிக் கொண்டிருக்கிறோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

யாரைத் தேடுகிறீர்கள் என்ற இந்த வார்த்தை, அதாவது இந்த எண்ணம் தூய யோவான் நற்செய்தி முழுவதும் ஒரு நூலிழையாகச் சென்று கொண்டிருக்கிறது. அந்த நூலிழையின் துவக்கம் வெகு தெளிவாக ஆரம்பத்தில் தெரியாதிருந்தும், ஒருமுறை அதனை மோப்பம் கண்டுபிடித்து விட்டோமானால், அதுவே நம்மை நற்செய்தி முழுவதும் கரம் பிடித்து அழைத்துச் செல்வதை உணரலாம். ஆம். இந்த தேடல் இயேசு பேசிய முதல் வார்த்தையிலிருந்து துவங்குகிறது. "என்ன தேடுகிறீர்கள்?" (யோவா 1:38) என திருமுழுக்கு யோவானின் சீடர்களிடம் இயேசு கேட்ட அந்த முதல் வார்த்தையிலிருந்து, தான் இறந்து உயிர்த்தபின் மகதலா மரியாவை நோக்கி, யாரைத் தேடுகிறாய் (John 20:11–15) எனக் கேட்பதையும் தாண்டி, நம்முன் வரை வந்து நிற்கிறது இந்த கேள்வி. இதற்கிடையில், தன்னைப்பிடிக்க வந்தோரை நோக்கி, யாரைத் தெடுகிறீர்கள் என்ற கேள்வியையும் இயேசு கேட்கிறார்.

என்னத் தேடுகிறீர்கள் என முதல் சீடர்களிடம் கேட்கும்போது, இங்கு அவர்களின் இதயத்தில் இருக்கும் ஆசையை, தேடலை வெளிக்கொணர இயேசு முயல்வதைக் காண்கிறோம். இரண்டாவது முறை, யாரைத் தேடுகிறீர்கள் என படைவீரர்களிடம் கேட்கும்போது, அவர் தன்னையே கையளிக்கத் தயாராக இருப்பதை அந்த கேள்வி வெளிப்படுத்துகின்றது. நானே உலகின் ஒளி என அறிவித்தவரை, விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் பிடிக்க வந்த காவலர்களை நோக்கி, யாரைத் தேடுகிறீர்கள் என துணிச்சலாகக் கேட்கிறார் இயேசு. தமக்கு நிகழப் போகிற அனைத்தையும் இயேசு அறிந்து அவர்கள்முன் சென்று, “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்கிறார். நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார் (யோவா 10:11) என்ற அவரின் வார்த்தைகளே இங்கு நினைவுக்கு வருகின்றன. 

அடுத்து நாம் காண்பது, உயிர்த்த இயேசுவுடன் மகதலா மரியாவின் சந்திப்பின்போதான கேள்வி. யாரைத் தேடுகிறாய் என கேட்கிறார் இயேசு. அதற்கு பின், மரியா என்றழைத்ததும் இயேசுவைக் கண்டுகொண்ட மகதலா மரியா, ரபூனி என அவரை அழைக்கிறார்.  என்ன தேடுகிறீர்கள் என திருமுழுக்கு யோவானின் சீடர்களிடம் இயேசு கேட்டபோது என்ன பதில் கிட்டியதோ, அதே பதில்தான் மகதலா மரியாவிடமும் கிட்டுகிறது. கேள்விக்கான பதில், அவரை அடையாளம் கண்டுகொண்ட, போதகரே என்ற அழைப்பில் வருகிறது.

ஆனால், இரவில் வந்த காவலர்கள் அளித்த பதிலோ, நாசரேத்தூர் இயேசு என்று மட்டும் இருக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த இந்த நபர் என்பதாக மட்டும் இருக்கிறது. தன்னையே கையளிக்க முன்வருகிறவரை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முன்வருகிறோமோ அதைப் பொறுத்தே கேள்விக்கான நம் பதில்களும் பிணைந்திருக்கின்றன என்பதை இங்கு காண்கிறோம்.

என்ன தேடுகிறீர்கள் என்ற கேள்விக்கு உள்ளானவர்கள், அதன் விடையைக் கண்ட பின்னர் மெசியாவைக் கண்டோம் என அறிக்கையிடுகிறார்கள். இங்கும் மகதலா மரியா சீடர்களிடம் சென்று, “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்கிறார். உயிரற்ற உடலைக் காண கல்லறைக்குச் சென்றவர், உயிருள்ள கடவுளைக் கண்டுகொள்கிறார், புது உயிர் பெறுகிறார். ஆம், நம்பிக்கையிழந்தவர் நம்பிக்கையின் ஒளியாக மாறி, இயேசுவின் சீடர்களிடம் அந்த நம்பிக்கை ஒளியை எடுத்துச் செல்கிறார். இவ்வேளையில் நம் எண்ண ஓட்டத்திலிருந்து சிறிது விலகி, அன்றையச் சூழல்களின் ஓர் ஒப்பீட்டைப் பார்ப்போம்.

மகதலா மரியா வந்து சொன்ன அன்று மாலையே இயேசு தோன்றியபோது,  அங்கு  புனித தோமா இல்லை. அவர் திரும்பி வந்தபோது இயேசு தோன்றிய உண்மை அவருக்கு உரைக்கப்படுகின்றது. அவரோ நம்பவில்லை. இயேசு எட்டு நாட்களுக்குப்பின் மீண்டும் தோன்றியபோது, உயிர்த்த இயேசுவைக் கண்டுகொண்டதும், தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்கிறார்(யோவா 20.18).

இந்த நிகழ்வை நாம் இடையில் ஏன் கொண்டுவந்தோம் என்றால், இயேசுவைக் கண்டுகொண்டதில் கிட்டும் படிப்படியான முன்னேற்றத்தைக் குறிப்பிடவே.

இயேசுவைக் கண்டுகொண்ட முதல் சீடர்கள் ராபி என அழைக்க, தேடிவந்த காவலர்களோ நாசரேத்தூர் இயேசு என உரைக்க, மகதலா மரியாவோ ரபூனி என்கிறார். ஆனால் தோமாவோ, நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்  என அறிக்கையிடுகிறார்.

யாரைத் தேடுகிறீர்கள் என இயேசு கேட்டு தன்னைக் கையளிக்க முன்வருவதை, கைதுபடலத்தின்போது நாம் கண்டாலும், ‘வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்’ என்று யோவான் நற்செய்தி முதல் பிரிவில் கூறும்போதே இயேசுவின் கையளிப்புத் துவங்கிவிட்டதைக் காண்கிறோம்.

என்னத் தேடுகிறீர்கள் என்ற கேள்வியும், யாரைத் தேடுகிறீர்கள் என்பதும், யாரைத் தேடுகிறாய் என்ற தனி ஒருவருக்கான கேள்வியும் நம் விடைக்காக காத்திருக்கின்றன. இறைவன் தன்னையே தாழ்த்தி இந்த கேள்விகளை முன்வைக்கிறார். படைத்தவன் தான் படைத்தவைகளை நோக்கி தன்னை ஏற்றுக்கொள்ள கேட்கும் கேள்வி இது. ‘அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை’ (யோவா 1:11) என்பதுதான் மீண்டும் உண்மையாகிறதா?, அல்லது, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும் (மத் 28.5) என்ற வானதூதரின் வார்த்தைகள் நம்மிடம் உண்மையாகிறதா?, சிந்திப்போம்.

தேடல் என்றால் என்ன என்பதை கொஞ்சம் புரிந்துகொள்வோம். இறையியல் கோட்பாடுகளில் தேடலை ஒருவிதமாகவும், பொதுவான சமூகக் கோட்பாடுகளில்  வேறுவிதமாகவும் புரிந்து வைத்திருக்கிறோம். நம் தேடுதல் என்ன, நம் தேடுதல் யாரை நோக்கி நம்மை நகர்த்திச் செல்கின்றது, நம் தேடுதல் எத்தகைய வழிகளில் நம்மை இழுத்துச் செல்கின்றது என்பதைப் பொறுத்தே அதை நம்மாலும் பிறராலும் புரிந்துகொள்ள முடியும். எங்கிருந்து  துவங்குகிறோம் என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஒரு சமூகம் வைத்திருக்கிற வரையறைகளுடன்,  சமூகத்தின் மனப்போக்குகளில் நம் ஆன்மீக தேடல் இடம்பெற்றால் நம் இலக்கு தூரமாகி விடும். எந்த ஓர் இலக்கையும் அடைவதற்கு முதலில் நாம் நமக்குள் தேடவேண்டும். நம்மை இழந்து தேடவேண்டும். நமக்குள் தேடுவதை விட்டுவிட்டு, வெளியே நம்மையே நாம் தேடிக்கொண்டிருக்கிறோம். பிரபலமான ஒரு நடிகனில், பணம் கொழித்த ஓர் அரசியல்வாதியில், கட்சித் தலைவனில் நம்  ஏக்கங்களை பதித்து எங்கெங்கோ நம்மையே தேடிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், நாம் தேடவேண்டிய இறைவன் நமக்கருகிலேயே இருந்துகொண்டு நம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார். இது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு. நம்மை இறைவன் தேடும்போது நம் ஆசைகளுக்குள் நாம் ஒளிந்து கொள்கிறோம், நாம் அவரைத் தேடும்போது பாதை மாறிப் போகிறோம். தேடுதலின் நிறைவிடமும், தேடுதலின் துவக்க புள்ளியுமாக இருக்கும் அவரை புரிந்துகொண்டோமா என நமக்குள்ளேயே கேட்போம். தேடுதலும் தேடப்படுதலும் ஒன்றையொன்று  சந்திக்கிற ஒற்றைப் புள்ளி அவர்தான். கடவுள் நம்மைத் தேடிக்கொண்டிருக்கும்போது நாம் யாரை, எதைத் தேடிக்கொண்டிருக்கிறோம்?. திருப்பாடலில் தாவீது எழுதுகிறார், “ஆண்டவர் விண்ணகத்தினின்று மானிடரை உற்றுநோக்குகின்றார்; மதிநுட்பமுள்ளோர், கடவுளை நாடுவோர் எவராவது உண்டோ எனப் பார்க்கின்றார்” (திபா 14:2) என்று.  இதைத்தான் திருத்தூதர் பவுலும், “கடவுளைத் தேடுபவர் எவராவது உண்டோ? ” (உரோ 3:11) என தன் மடலில் மீண்டும் கேட்கிறார். கடவுளை நாம் தேடாவிட்டலும் நம்மை ஆவலுடன் தேடிக்கொண்டிருப்பது யார் என்பதையாவது தெரிந்துகொள்ள முன்வர வேண்டாமா?.

கைவிடப்பட்ட சிறார்களை பராமரித்துவரும் இல்லம் ஒன்றில் ஒரு ஏழு வயது சிறுவன் வாசலில் சென்று, யாருக்காகவோ காத்திருப்பதுபோல் தினமும் நிற்பான். மற்ற பிள்ளைகளின் உறவினர்கள் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டுச் செல்வதுண்டு. இவனுக்கு யாரும் இல்லை என்பதால் எவரும் வருவதில்லை. அந்த விடுதி காப்பாளர் ஒரு நாள் அந்த சிறுவனை அணுகி, தம்பி நீ யாருக்காகக் காத்திருக்கிறாய்? என்று கேட்டார். அதற்கு அவன் சொன்னான், என்னை யார் தேடிக்கொண்டிருக்கிறார்களோ அவர்களை நான் தேடிக்கொண்டிருக்கிறேன், என்று. என்ன ஒரு வியப்பான பதில். காணாமல் போன தன் ஆடுகளைத் தேடிக் காண்டுபிடித்து மந்தையில் கொணர தந்தையாம் இறைவனால் அனுப்பப்பட்ட இயேசு சமாரியப் பெண்ணிடம் கூறியதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். “காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார்”(யோவா 4:23)என்கிறார் இயேசு. கடவுள் விரும்புவது, தேடுவது இதைத்தான். இறைவனுக்கும் நமக்கும் இடையேயான உறவில், தேடுவது கடினமானதாகவும், கண்டுகொள்வது எளிதானதாகவும் இருக்கின்றது. கண்டடைவதற்காகத்தான் நாம் தேடுகிறோம். இங்கு நம்மையே நாம் கேட்போம். யாரைக் கண்டுகொள்ள நாம் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறோம். இயேசுவே கூறுகின்றார், “கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்”(மத் 7:7-8) என்று. தேடச் சொல்லும் அவர்தான் கண்டடைவீர்கள் என்ற உறுதியையும் வழங்குகிறார். “ஒரே ஆளிலிருந்து அவர் மக்களினம் அனைத்தையும் படைத்து அவர்களை மண்ணுலகின் மீது குடியிருக்கச் செய்தார்; அவர்களுக்குக் குறிப்பிட்ட காலங்களையும் குடியிருக்கும் எல்லைகளையும் வரையறுத்துக் கொடுத்தார். கடவுள் தம்மை அவர்கள் தேடவேண்டும் என்பதற்காக இப்படிச் செய்தார்; தட்டித் தடவியாவது தம்மைக் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தார். ஏனெனில், அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார்” (தி.பணி 17:26-27), என அரயோப்பாகு மன்றத்தின் நடுவில் தூய பவுல் எழுந்து நின்று கூறிய வார்த்தைகளும் இதைத்தான் தெரிவிக்கின்றன.

மீண்டும் அதே கேள்வியை முன்வைக்கின்றோம். யாரை நாம் தேடுகிறோம்?  எதனை நாம் தேடுகிறோம்? எதற்காக நாம் தேடுகிறோம்?. நாம் இயேசுவைத் தேடுகிறோம் என பதில் கூறினால் கூட, எப்படிப்பட்ட இயேசுவைத் தேடுகிறோம்? என்பது,  எதற்காகத் தேடுகிறோம்? என்பதில் ஒளிந்து நிற்கிறது.

இயேசுவின் வாழ்வில் இரண்டு முக்கிய மலைகளை நாம் பார்க்கிறோம். அதில் எந்த மலையில் ஏறிச்சென்று இயேசுவைக் கண்டுகொள்ள விரும்புகிறோம்?. ஒன்று, இயேசு உருமாறிய தாபோர் மலை, மற்றொன்று, அவர் உருச்சிதைந்த கல்வாரி மலை. தாபோரில் மாட்சிமை பெற்றார் என்றால்,  கல்வாரியில் இழிமரணத்திற்கு ஆளானார். தாபோரில் அவரின் இரு பக்கங்களிலும் மோசேயும், எலியாவும் நின்றிருந்ததைப் பார்க்கிறோம். கல்வாரியிலோ அவர் இருபக்கங்களிலும் தொங்கி உரையாடிக்கொண்டிருந்தவர்கள் இரண்டு கள்வர்கள். 'இவரே என் அன்பார்ந்த மகன்' என்ற தந்தையின் அரவணைக்கும் வார்த்தைகள் ஒலித்தது தாபோர் மலையில். 'என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்' என்ற இயேசுவின் அவல ஒலி கேட்டதோ கல்வாரி மலையில். 'இங்கேயே இருப்பது எத்துணை நன்று' என்ற பேதுருவின் பெருமகிழ்ச்சி தாபோர் மலையில். சீடர்கள் இயேசுவை ஆதரவற்றவராக மாற்றியது கல்வாரி மலையில். 'அவரது ஆடை கதிரவனைப் போல ஒளிர்ந்தது' தாபோர் மலையில். அவரின் ஆடைகள் களையப்பட்டதோ கல்வாரி மலையில். மகிமைக்கும், கல்வாரி மலையின் இழிசாவுக்கும் இடையில் நமக்கான கேள்வி நிற்கிறது. எந்த இயேசுவைத் தேடி மலைமேல் ஏறப்போகிறோம்? இந்த இரண்டு மலைகளும் நம் வாழ்வில் அவ்வப்போது வந்து செல்லும் ஒன்றுதான். எதைப் பற்றிக்கொள்ளப் போகிறோம் என்பதில்தான், நாம் யாரை, எதற்காகத் தேடுகிறோம் என்ற பதில் அடங்கியுள்ளது. இந்த மலைகளுள் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு கடந்து செல்லும்போது நம் மனநிலை என்ன என்பது குறித்தும் சிந்திப்போம். “இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே” என மோசேக்கு இறைத்தந்தை தன்னை வெளிப்படுத்தியிருக்க, இங்கோ தன்னைத் தேடிய காவலர்களை நோக்கி அதேமுறையில் இயேசு, “நான்தான்” (யோவான் 18-5) எனக் கூறி தன்னை வெளிப்படுத்தியதை புரிந்துகொள்கிறோமா? அதுவும் தன்னை கையளிப்பதற்காக என்பதையாவது புரிந்துகொள்கிறொமா?

நாம் நம் வாழ்வில் இயேசுவைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம் என்றால் அவர் வழிகளில் நடக்க, அவருக்காக துறக்க, நம் வழிகளை மாற்றத் தயாரா?.  நாம் தேடும் கடவுளை நாம் கண்டுகொண்டோமானால் அவர் தங்க நம் இதயத்தை திறந்துவிட நாம் தயாரா?. நம் தேடலோடு இணைந்து நம்மையே நாம் கேட்கவேண்டிய கேள்விகள் பல உள்ளன. ஏனெனில், நாம் தேடும் இயேசுவின் எதிர்பார்ப்புகள் அப்படியே நம்மை புரட்டிப் போட்டுவிடும். ஆதலால்தான் இன்றைய கிறிஸ்தவர்கள் தங்களுக்கியைந்த ஒரு கிறிஸ்துவை தங்களுக்குள்ளேயே வடிவமைத்துக்கொண்டு, தங்களுக்கான நியாயங்களையும் தீர்ப்புகளையும் வரையறுத்துக்கொண்டு, தங்கள் செயல்களையெல்லாம் இறைவன் பெயரால் நியாயப்படுத்திக் கொண்டு கிறிஸ்துவை அன்புசெய்வதாக தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாம் தேடுவது யாரை?

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 January 2024, 12:55