தேடுதல்

சிக்க வைக்கும் செல்வபற்று! சிக்க வைக்கும் செல்வபற்று! 

விவிலியத் தேடல் : திருப்பாடல் 49-5, சிக்க வைக்கும் செல்வபற்று!

நிலையற்ற இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் அல்ல என்பதையும், இறைவன் மட்டுமே என்றும் நிரந்தரம் என்பதையும் உணர்ந்து வாழ்வோம்.

 

விவிலியத் தேடல்:திருப்பாடல் 49-5, கண்ணியில் சிக்க வைக்கும் செல்வபற்று!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

ஒருநாள் கடவுள் பூமிக்கு வந்தார்...! அங்கே பத்துபேர் நின்றுகொண்டிருந்தனர், அவர்களிடம் சென்ற கடவுள், "உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள், உடனே தருகிறேன்..!” என்றார். அபோது அந்தப் பத்துபேரும் ஒவ்வொருவராகத் தங்களுக்குத் தேவையானதை அவரிடம் கேட்கத் தொடங்கினர். முதல் மனிதர், “எனக்கு கணக்கிலடங்கா செல்வமும், பெரிய வியாபாரமும் வேண்டும்..!” என்று கேட்டார்.  இரண்டாம் மனிதர், “நான் உலகில் சிறந்தோங்கி பெரிய பதவியை அடைய வேண்டும்..!” என்றார். மூன்றாம் மனிதர், “உலகப்புகழ் பெற்ற நடிகர் போல் மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!” என்று விண்ணப்பம் செய்தார். நான்காவது நபரான பெண் ஒருவர், “உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும்..!” என வேண்டுகோள் விடுத்தார். ஐந்தாவது ஆள், “நான் என்ன கேட்டாலும் அது உடனே, என் கண்முன் வரக் கூடிய அளவிற்கு எனக்கொரு மந்திரக்கோள் கொடுங்கள்” என்று கேட்டார். இவ்வாறே மீதமிருந்தவர்களும் தங்களுக்குத் தேவையானதைக் கேட்கத் தொடங்கினர். கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் உடனே கொடுத்து விட்டார்..! ஆனால், பத்தாவது மனிதர் ஒன்றும் கேட்காமல் அமைதியாக இருந்தார். “ஏம்பா.. உனக்கு ஒன்றும் வேண்டாமா, நீ மட்டும் ஏன் அமைதியாக இருக்கிறாய்” என்று கடவுள் அவரைப் பார்த்துக் கேட்டார்.  அதற்கு அவர், “உலகத்தில்  ஒரு மனிதர்  உச்சகட்டமாய் எந்த அளவுக்கு இறையச்சத்தோடும், மன நிறைவோடும் வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும் கடவுளே..!” என்று கேட்டார். அப்போது அந்த ஒன்பது பேரும் அவனைத் திரும்பிப் பார்த்து கேலியாக சிரித்தனர். கடவுள் அந்த ஒன்பது பேரிடமும், “நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..!  நீங்கள் போகலாம்..!” என்று கூறிவிட்டு, அந்தப் பத்தாவது மனிதரைப் பார்த்து, "நீ மட்டும் இரு..!  நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்.  சிறிது நேரம் கழித்து வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..! இப்போது, அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..! காரணம், கடவுள் அந்தப்  பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்; அவனுக்கு என்ன தரப் போகிறார் என்பதைத் தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..! துடிதுடித்தது..! அவர்கள் விரும்பியது எதுவோ அது கையில் கிடைத்த பின்னும் கூட, இன்னும் எதுவுமே கிடைக்காத அந்தப் பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..! நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..! தாங்கள் விரும்பியது கையில் இருந்துகூட அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே, அந்த இடத்திலேயே, அவர்கள் நிம்மதி குலைந்தது..! மனநிறைவு இல்லாமல் போனது..! ஆனால், அந்தப் பத்தாவது மனிதர், எவ்விதப் பதட்டமுமின்றி மன அமைதியுடன் கடவுளின் வருகைக்காகக் காத்து நின்றார். கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே அவருடைய முழு மனமும் நிறைவடைந்திருந்தது. இந்த நிகழ்வில், நான் ‘பத்தாவது’ மனிதராக இருக்கிறேனே? இல்லை ‘பத்தாது’ என்கின்ற மனிதனாக இருக்கின்றேனா.? என்றதொரு கேள்வியை எழுப்பிச் சிந்திப்போம். நமது எண்ணங்கள்தாம் நமது வாழ்வைத் தீர்மானிக்கின்றன. இனிமையான எண்ணங்களுடன் இவ்வுலகில் மகிழ்ந்து வாழ்வதற்குப் பேராசையை ஒழிப்பதே சிறந்த வழி என்பதை உணரும்போது நாம் கடவுளுக்கு மிகவும் நெருக்கமாகின்றோம்.

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘மாய்ந்துபோகும்  மனித உடல்!’ என்ற தலைப்பில் 49-வது திருப்பாடலில் 12 முதல் 15 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 16 முதல் 20 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவுக்குக் கொணர்வோம். இப்போது இறையொளியில் அவ்வார்த்தைகளை வாசிப்போம். “சிலர் செல்வர் ஆனாலோ, அவர்களின் குடும்பச் செல்வம் பெருகினாலோ, அவர்களைக் கண்டு நிலைகுலையாதே! ஏனெனில் சாகும்போது அவர்கள் எதையும் எடுத்துப் போவதில்லை; அவர்களது செல்வமும் அவர்கள்பின் செல்வதில்லை. உயிரோடிருக்கையில் அவர்கள் தம்மை ஆசிபெற்றோர் என்று கருதினாலும், ‛நீங்கள் நன்மையையே நாடினீர்கள்’ என மக்கள் அவர்களைப் புகழ்ந்தாலும், அவர்கள் தம் மூதாதையர் கூட்டத்தோடு சேர்ந்து கொள்வர்; ஒருபோதும் பகலொளியைக் காணப் போவதில்லை. மனிதர் தம் மேன்மையிலேயே நிலைத்திருக்க முடியாது; அவர்கள் விலங்குகளைப் போலவே மாண்டழிவர்” (வச 16-20)

நாம் தியானித்துக்கொண்டிருக்கும் இந்த இறைவார்த்தைகளில் தாவீது அரசர் மூன்று முத்தான காரியங்களை நம் சிந்தனைக்கு விருந்தாக்குகின்றார். முதலாவதாக, “சிலர் செல்வர் ஆனாலோ, அவர்களின் குடும்பச் செல்வம் பெருகினாலோ, அவர்களைக் கண்டு நிலைகுலையாதே! ஏனெனில் சாகும்போது அவர்கள் எதையும் எடுத்துப் போவதில்லை" என்கின்றார் தாவீது. இந்த வார்த்தைகளில் இன்று நாம் காணும் உலகியல் நடைமுறைகளை மிகவும் அழகாக எடுத்துரைக்கின்றார் தாவீது. நாம் வாழும் சூழலில் ஒருவர் அநீதியான முறையிலோ அல்லது அதிகம் செல்வம் சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்திலோ எந்நேரமும் தனது தகுதிக்கு மீறி உழைத்துக்கொண்டே இருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். அவர்களைப் பார்த்ததும் நமக்கு என்னமாதிரியான எண்ணங்கள் தோன்றும்? ‘எப்பப் பார்த்தாலும் பணம், காசு, சொத்துன்னு ஏன் இப்படி பேயா அலையுறான். என்னத்த இங்கேயிருந்து வாரிக்கொண்டு போகப்போறான்? ஆறடி நிலத்துல போய்தானே அடங்கப்போறான்’ என்றெல்லாம் மனம்புழுங்கி பேசுவோமல்லவா? அதனைத்தான் தாவீதும் இங்கே இப்படிக் கூறுகின்றார்.

இதனைத்தான், “உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது. எனவே, உணவும் உடையும் நமக்கு இருந்தால் அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம். செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர்கள் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக் கொள்கிறார்கள்; அறிவீனமான, தீமை விளைவிக்கக்கூடிய பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை மனிதரைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை. பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக் கொள்கிறார்கள்” (காண்க. 1 திமொ 6:7-10) என்று கூறி மனித வாழ்வின் நிலையாமையையும், செல்வம் சேர்ப்பதைப் பொறுத்தளவில் நாம் எந்தளவுக்குக் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கின்றார் புனித பவுலடியார். மேலும், "உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு, இங்கு கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு. கொண்டாடும்போது ஒரு நூறு பேரு, உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு" என்று எடுத்தியம்பும் கவியரசு கண்ணதாசனின் கவிதை வரிகளையும் இங்கே நாம் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

இரண்டாவதாக, "உயிரோடிருக்கையில் அவர்கள் தம்மை ஆசிபெற்றோர் என்று கருதினாலும், ‛நீங்கள் நன்மையையே நாடினீர்கள்’ என மக்கள் அவர்களைப் புகழ்ந்தாலும், அவர்கள் தம் மூதாதையர் கூட்டத்தோடு சேர்ந்து கொள்வர்; ஒருபோதும் பகலொளியைக் காணப் போவதில்லை" என்கின்றார் தாவீது. இன்றைய உலகில் இதுவும் நிகழ்வதைக் காண்கின்றோம். அதாவது, பலர் நன்மையான காரியங்கள் செய்யும்போது தங்களை உயர்வாக அல்லது மேலானவர்களாகக் கருத்திக்கொள்கின்றனர். அதுமட்டுமன்றி, தங்களைத் தெய்வங்களுக்கு இணையாகவும் காட்டிக்கொள்கின்றனர். சிறிய காரியங்களைச் செய்துவிட்டு தங்களைக் குறித்து பெரிதாகத் தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர். கண்ட இடங்களிலும் பதாகைகள் வைத்து தங்களைக் குறித்துப் பெரிதாக விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். மேலும் வெளியுலகத்திற்குத் தெரியும் வகையில் அவர்கள் செய்யும் நற்காரியங்களுக்காக அவர்கள் ஆசீர் பெற்றவர்களாகக் கருதப்பட்டாலும், அவர்கள் நன்மையான காரியங்களையே நாடினார்கள் என்று மக்கள் அவர்களைப் பாராட்டிப் புகழ்ந்தாலும் அவர்கள் தங்களின் மூதாதையர் கூட்டத்தோடு சேர்ந்துகொள்வர் என்று தாவீது கூறுகின்றார். இவ்வுலகின்மீது பற்றுக்கொண்ட மதியீனர்களைத்தான் ‘மூதாதையர் கூட்டம்’ என்றும் "அவர்கள் ஒருபோதும் பகலொளியைக் காணப் போவதில்லை" என்றும் குறிப்பிடுகின்றார் தாவீது. அதாவது, எது நிலைவாழ்வுக்குரியது, எது நிலையற்ற வாழ்வுக்குரியது என்று பகுத்துணர்ந்துகொள்ளாத மதியீனர்கள்தாம் தாங்கள் இவ்வுலகில் செய்யும் தவறுகள் மற்றும் கொடிய பாவங்களின் காரணமாக, நரக வாழ்விற்குச் செல்வர். அங்கே பகல் என்பதே இருக்காது. எல்லாமே இருளாகத்தான் இருக்கும். அதனால்தான், கடந்த வார நமது விவிலியத்தேடலில் "பலியாடுகளைப் போலவே அவர்களும் சாவுக்கெனக் குறிக்கப்பட்டுள்ளனர்; சாவே அவர்களின் மேய்ப்பன்; அவர்கள் நேரடியாகக் கல்லறைக்குள் செல்வர்; அப்பொழுது அவர்களது உருவம் மாய்ந்து போகும்; பாதாளமே அவர்களது குடியிருப்பு" என்று தாவீது கூறியதைக் குறித்துச் சிந்தித்தோம். இறுதியாக, "மனிதர் தம் மேன்மையிலேயே நிலைத்திருக்க முடியாது; அவர்கள் விலங்குகளைப் போலவே மாண்டழிவர்" என்று கூறி இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது. மேலும் இந்த வார்த்தைகளை ஏற்கனவே இத்திருப்பாடலின் 12-வது வசனத்தில் கூறிவிட்டார். ஆனாலும், அதே வார்த்தைகளை மீண்டும் கூறி முடிக்கின்றார் என்றால், அது எந்தளவுக்கு முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

உலகில் ஏழுவிதமான அதிசயங்கள் இருப்பதாகச் சொல்கின்றனர். மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் கண்டிப்பாக வந்தே தீரும் என்று உணர்ந்த மனிதர்கள், இதுகுறித்து கவலைப்படாமல் தங்கள் கடமைகளைச் செய்யாமல் சோம்பித்திரிந்து காலத்தைப் போக்குவது முதல் அதிசயம்! ஒருநாளில் இந்த உலகம் அழிந்துபோகும் என்பதை உணராத மனிதர்கள் உலக இன்பங்கள்மீது தீராத மோகம் கொண்டிருப்பது இரண்டாவது அதிசயம்! எந்தவொரு செயலும் இறைவன் விதித்தபடிதான் நடக்கும் என்பதை அறிந்த மனிதர்கள் கைநழுவிச் சென்றதைக் குறித்துக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பது மூன்றாவது அதிசயம்! மறுமை வாழ்வுக்கானத் தீர்வு இவ்வுலகிலேயே இருப்பதாக உணரும் மனிதர்கள், அதனைப் பற்றி அக்கறையின்றி வாழ்ந்துகொண்டிருப்பது நான்காவது அதிசயம்! தங்களின் பாவங்களுக்காக மறுவுலகில் கிடைக்கப்போகும் நரக நெருப்பின் வேதனையை அறிந்த மனிதர்கள் அதுகுறித்து சிந்திக்காமல் தொடர்ந்து பாவங்களையும் தவறுகளையும் செய்வது ஐந்தாவது அதிசயம்! இறைவன் ஒருவரே, அவரே என்றும் நிரந்தரமானவர் என்பதை அறிந்துள்ள மனிதர்கள் அவரைத் தவிர வேறு யாருக்கோ அதிமுக்கியத்துவம் கொடுப்பது ஆறாவது அதிசயம். நரகம் சொர்க்கம் பற்றி அறிந்த மனிதர்கள் உலகச் செல்வங்களைச் சேர்த்து வைப்பதிலேயே தங்களின் முழுவாழ்க்கையையும் கழிப்பது ஏழாவது அதிசயம்! ஆகவே, நிலையற்ற இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதையும், இறைவன் மட்டுமே என்றும் நிரந்தரம் என்பதையும் உணர்ந்து வாழ்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 January 2024, 12:34