தேடுதல்

யூதர்களின் கல்லறைத் தோட்டம் யூதர்களின் கல்லறைத் தோட்டம் 

விவிலியத் தேடல்: திருப்பாடல் 49-3, நிலபுலன்கள் பயன்தராது!

கல்லறையுடன் நமது வாழ்வு முடிய வேண்டுமா? அல்லது என்றுமுள்ள இறைவனின் நிலைவாழ்வில் நீடித்த மகிழ்ச்சியுடன் வாழவேண்டுமா? என்பதை நாம்தான் முடிவுசெய்ய வேண்டும்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 49-3, நிலபுலன்கள் பயன்தராது!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘செல்வதைவிட மனித உயிர் மேலானது!’ என்ற தலைப்பில் 49-வது திருப்பாடலில் 5 முதல் 8 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 9 முதல் 11 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது இறையொளியில் அவ்வார்த்தைகளை வாசிப்போம். "ஒருவரால் என்றென்றும் வாழ்ந்திடமுடியுமா? படுகுழியைக் காணாமல் இருந்திட முடியுமா? ஏனெனில், அறிவிலிகளும் மதிகேடரும் மாண்டழிவதுபோல, ஞானமுள்ளோரும் உயிர் துறப்பதை நாம் காண்கின்றோம் அன்றோ! அவர்கள் எல்லாருமே தத்தம்  செல்வத்தைப் பிறருக்கு விட்டுச்செல்கின்றனர். கல்லறைகளே அவர்களுக்கு நிலையான வீடுகள்! அவையே எல்லாத் தலைமுறைக்கும் அவர்கள் குடியிருப்பு! அவர்களுக்குத் தங்கள் பெயரில் நிலபுலன்கள் இருந்தும் பயனில்லை" (வச 9-11).

மரணத்தின் பல நிலைகள்

மரணம் மிக வித்தியாசமானது. ஒவ்வொரு மனிதனும் மரணிக்கும் விதங்களும் மிக மிக வித்தியாசமானது. கூட்டாக மரணம் அடைவது ஒரு வகை மரணம். பூகம்பம், சூறாவளி, கடும் மழை, வெள்ளம், போர், கொடிய விபத்துகள் போன்றவைகளில் மொத்தமாக மனிதர்கள் மரணமடைவது இன்னொரு வகை மரணம். போர் வன்முறை, கலவரம், கும்பல் கொலை, அடித்துக் கொலை, சாதியக் கொலை, ஆணவக் கொலை, விலங்குகள் தாக்கி மரணம், கொடிய நோய்களால் வரும் மரணம் பிறிதொரு வகையான மரணம். இறுதியாக, உயர்ந்த நோக்கத்திற்காக, இலட்சித்திற்காக, சமத்துவ சமுதாய முன்னேற்றத்திற்காகத் தங்கள் இன்னுயிரைக் கையளிப்பதும் ஒருவகை மரணம்தான். ஆக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல வடிவங்களிலே மனிதர்கள் மரணத்தை அடைந்தே தீருவர் என்பது திண்ணம். மரணத்திலிருந்து யாருமே தப்ப முடியாது. அப்படியென்றால், நம் ஒவ்வொருவரின் மரணமும் அர்த்தமுள்ள மரணமாக இருக்க வேண்டும். பூவுக்கும், புல்லுக்கும், புழுதிக்கும் இனையானதுதான் மானிடரின் வாழ்வு என்பதை மனிதர் உணரத் தவறிவிடுகின்றனர். இம்மண்ணில் வாழும் இந்தக் குறுகிய வாழ்வில் நமக்கும் பிறருக்கும் நன்மைதரும் அர்த்தமுள்ள வாழ்வை வாழ்வதற்கு நாம் இவ்வுலகிற்கு இறைவனால் அனுப்பப்படுகிறோம். இதனைத்தான் ‘இறவாமை’ என்கின்றோம். நாம் இவ்வுலகில் வாழும் தியாகமிக்க வாழ்வுதான் இந்த இறவாமையை நமக்குக் கொடுக்கும். இதனைத்தான் 'வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை' என்கின்றனர்.

சாவு அனைவரையும் தழுவிக்கொள்ளும்

நாம் தியானிக்கும் இன்றைய இறைவார்த்தைகளில், இந்த உலகத்தில் யாருமே நிரந்தரமாக வாழ்ந்திட முடியாது என்றும், எல்லோரையுமே மரணம் ஒருநாள் நிச்சயம் தழுவிக்கொள்ளும் என்றும் கூறுகின்றார் தாவீது அரசர். இதனைத்தான் சுருக்கமாக, “யாருமே கல்லறை என்னும் படுகுழிக்குச் செல்லாமல் இருந்திட முடியாது” என்கின்றார். மேலும் “அறிவிலிகளும் மதிகேடரும் மாண்டழிவதுபோல, ஞானமுள்ளோரும் உயிர் துறப்பதை நாம் காண்கின்றோம்” என்கின்றார். அதாவது, நல்லவர் தீயவர் ஆகிய இருவரும் மரணத்தைச் சந்தித்தே ஆகவேண்டும். இதில் யாரும் விதிவிலக்கல்ல என்பதை எடுத்துரைக்கும் தாவீது அரசர், இரண்டு முக்கியமான சிந்தனைகளை நமக்கு வழங்குகின்றார். இந்த உலகம் நிலையற்றது கடவுள்தான் என்றென்றும் நிலையானவர் என்று வாழ்பவர்கள் ஞானமுள்ளோராக மரணத்தைத் தழுவுகின்றனர். கடவுளை மறந்து இவ்வுலக இன்பங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்கள் பாவத்தின் பிடியில் சிக்குண்டு இறக்கின்றனர். அப்படியென்றால், ஞானமுள்ளோர் நிலைவாழ்விற்கும், இவ்வுலகப் போக்கின்படி வாழும் அறிவிலிகளும் மதிகேடரும் என்றுமுள்ள நரக வாழ்விற்கும் தங்களைக் கையளிக்கின்றனர் என்று நாம் உறுதியாக நம்பலாம் அன்றோ?. இதன் காரணமாகவே, “கல்லறைகளே அவர்களுக்கு நிலையான வீடுகள்! அவையே எல்லாத் தலைமுறைக்கும் அவர்கள் குடியிருப்பு!” என்று கூறும் தாவீது அரசர், "அவர்களுக்குத் தங்கள் பெயரில் நிலபுலன்கள் இருந்தும் பயனில்லை" என்றும் உரைக்கின்றார். "எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ,  அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.  உன்னுடையதை எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகின்றாய்? எதை நீ கொண்டு வந்தாய்,  அதை இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய்,  அது வீணாவதற்கு?  எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.  இதுவே உலக நியதியும், எனது படைப்பின் சாராம்சமுமாகும்” என்று கிருஷ்ணர் கூறுவதாக வாழ்வின் நிலையாமைக் குறித்து கீதை மொழிகிறது.  

ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டான். அவளுக்கு இளம் வயது, ஒரே ஒரு குழந்தை இருந்தது. அவள் தனது கணவனுடன் சிதையில் குதித்து உடன்கட்டை ஏற விரும்பினாள். ஆனால் இந்தச் சின்ன குழந்தை அதை தடுத்து நிறுத்தி விட்டது. அவள் அந்தக் குழந்தைக்காக வாழ்ந்தாக வேண்டும். ஆனால் பின்னர் இந்தச் சின்ன குழந்தையும் இறந்துவிட்டது. இப்போது பாதிப்பு அதிகமாகி விட்டது. அவள் கிட்டத்தட்ட பைத்தியமாகி விட்டாள். “என்னுடைய குழந்தையை திரும்பவும் உயிர்ப்பித்து தரக் கூடிய மருத்துவர் யாரேனும் இங்கு உண்டா” நான் அவனுக்காகவே வாழ்ந்தேன். ஆனால் இப்போது எனக்கு எனது முழு வாழ்வும் இருளாகி விட்டது” என்று கேட்டு அலைந்து திரிந்தாள். அப்போது புத்தர் அந்த நகரத்தின் வழியே வந்தார். அதனால் மக்கள் அவளிடம், “எங்களுக்கு எந்த மருத்துவரையும் தெரியாது. ஆனால் புத்தர் இங்கே வருகிறார். இது ஒரு சிறந்த தருணம். நீ உனது குழந்தையைத் தூக்கிக் கொண்டு புத்தரிடம் செல். நீ இந்தக் குழந்தைக்காவே உயிர் வாழ்ந்தாய் என்பதைக் கூறி இப்போது இது இறந்துவிட்டது என் மேல் கருணை காட்டுங்கள். இவனை உயிர்பித்து தாருங்கள் நீங்கள் ஞானமடைந்தவர் என்று கேள்.” என்றனர். ஆகவே அவள் புத்தரிடம் சென்றாள். இறந்த குழந்தையின் உடலை புத்தரின் காலடியில் கிடத்தி, “இவனை உயிர்பித்துத் தாருங்கள். உங்களுக்கு வாழ்வின் அனைத்து மர்மங்களும் தெரியும். நீங்கள் பிரபஞ்சத்தின் உச்சியை தொட்டு விட்டீர்கள். இந்த ஏழை பெண்ணுக்காக ஒரு சிறிய அற்புதத்தை நீங்கள் செய்யக் கூடாதா?” என்று வேண்டினாள். புத்தர், “நான் செய்கிறேன், ஆனால் ஒரு நிபந்தனை!” என்றார். அதற்கு அவள், “அது எதுவானாலும் நான் செய்கிறேன்” என்றாள். புத்தர், “அப்படியென்றால் சரி.! நிபந்தனை இதுதான். இந்த நகரத்தைச் சுற்றி வந்து யார் வீட்டில் இதுவரை சாவு எதுவும் நிகழவில்லையோ அந்த வீட்டிலிருந்து கொஞ்சம் கடுகு விதைகள் வாங்கி வா.” என்றார். அந்தக் கிராமத்தில் அதிகம் கடுகு பயிர் அறுவடை செய்து வந்தனர்.

அவள் ஒரு வீட்டிற்கு சென்று கேட்டாள். அவர்கள், “கொஞ்சம் கடுகென்ன? புத்தரால் உனது குழந்தைக்கு உயிர் தர முடியுமென்றால் ஒரு மாட்டு வண்டி நிறைய கடுகு வேண்டுமானாலும் தருகிறோம். ஆனால் எங்களது குடும்பத்தில் ஒருவர் அல்ல, அனேகர் இறந்து போயிருக்கின்றனர். காலங்காலமாக நாங்கள் இங்கிருக்கிறோம். தாத்தாவின் தாத்தா பாட்டி, தாத்தாவின் அப்பா அம்மா, என எல்லோரும் இறந்து விட்டனர். பலர் இந்தக் குடும்பத்தில் சாவதை நாங்கள் பார்த்திருக்கிறோம்” என்றனர். அடுத்து அவள் அருகிலிருக்கும் இன்னொரு சிறிய கிராமத்திற்குச் சென்று அங்கிருந்த ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கேட்டாள். அந்தக் கிராமத்திலிருந்த எல்லோருமே அவளுக்குக் கடுகு தரத் தயாராக இருந்தனர். ஆனால் புத்தர் கூறிய அந்த நிபந்தனைதான் அதனைத் தடுத்து நிறுத்தியது. மாலையில் அவள் புத்தரின் நடவடிக்கை பற்றி உணர்ந்தாள். பிறக்கும் யாவரும் இறந்தே தீருவர் என்ற உண்மை அப்போது அவளுக்குப் புரிந்தது. குழந்தையை திரும்ப உயிர்பித்து என்ன பயன் அவனும் ஒருநாள் இறந்தே தீருவான். அதற்குப் பதிலாக எது இறப்பதும் பிறப்பதும் இல்லையோ அந்த அழிவற்றதை நானே தேட வேண்டியதுதான்" என்பதை உணர்ந்தாள். மாலையில் அவள் வெறும் கையுடன் திரும்பி வந்தாள். புத்தர், “எங்கே கடுகு?” என்று கேட்டார். அவள் சிரித்தாள். காலையில் அவள் அழுதவண்ணம் வந்தாள், இப்போது சிரித்தாள். “நீங்கள் தந்திரம் செய்து விட்டீர்கள், பிறக்கும் யாரும் இறக்கத்தான் வேண்டும். இந்தக் கிராமத்தில் மட்டுமல்ல, இந்த உலகத்திலேயே யாரும் இறக்காத குடும்பமே கிடையாது. அதனால் நான் எனது மகனை உயிர்பித்துத் தர கேட்கப் போவதில்லை, அதனால் என்ன பயன்? சில தினங்களுக்குப் பிறகோ, அல்லது சில மாதங்களுக்குப் பிறகோ, அல்லது, சில ஆண்டுகளுக்குப் பிறகோ அவன் திரும்பவும் இறந்துவிடுவான். ஆகவே, குழந்தையை மறந்து விடுங்கள். எனக்கு அருள் கொடுங்கள். பிறப்பும் இறப்பும் நிகழாத அழிவற்ற, அந்த உலகத்திற்கு நான் செல்ல எனக்குத் தியானமென்னும் வழி காட்டுங்கள்,  என்றாள் அப்பெண். அப்போது புத்தர், “நீ மிகவும் புத்திசாலியான பெண். வாழ்வின் நிலையாமையை நீ உடனே புரிந்து கொண்டு விட்டாய்” என்றார். புத்தர் அந்தப் பெண்ணிற்கு அருள் கொடுத்தார். அவள் புத்தரின் ஞானமடைந்த சீடர்களில் ஒருவராக விளங்கினாள்.

நிலைவாழ்வுக்கு நம் உயிரைக் காத்துக் கொள்வோம்

ஆகவே, வாழ்வின் நிலையாமைக் குறித்து அறிந்துணர்ந்துகொண்டவர்கள் தங்களை நிலைவாழ்வுக்கு காப்பாற்றிக்கொள்கின்றனர், மற்றவர்கள் அதை இழந்துவிடுகின்றனர் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகின்றது. இதைத்தான் நமதாண்டவர் இயேசுவும், "தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?" (காண்க மத் 16:25-26) என்கின்றார். அழியப்போகின்ற இந்த உலகின் இன்பங்களுக்காக அழியாத நமது ஆன்மாவை இழந்துவிடக் கூடாது என்பதுதான் இயேசுவின் படிப்பினையாக விளங்குகின்றது. எனவே, கல்லறையுடன் நமது வாழ்வு முடிய வேண்டுமா? அல்லது என்றுமுள்ள இறைவனின்  நிலைவாழ்வில் நீடித்த மகிழ்ச்சியுடன் வாழவேண்டுமா என்பதை நாம்தான் முடிவுசெய்ய வேண்டும். இதில் சரியானதைத் தெளிந்து தேர்வுசெய்ய இந்நாளில் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 January 2024, 12:38