தேடுதல்

இவ்வுலகின் பயனற்ற செல்வம் இவ்வுலகின் பயனற்ற செல்வம்  

விவிலியத்தேடல்: திருப்பாடல் 49-2, செல்வதைவிட மனித உயிர் மேலானது!

இவ்வுலகின் செல்வங்களைவிட, கடவுள் நமக்கு அளித்த இந்த உயிரும், இதனைவிட கடவுள் என்ற உண்மைச் செல்வமும் அதிமுக்கியமானது என்பதை உணர்வோம்.
விவிலியத்தேடல்:திருப்பாடல் 49-2, செல்வதைவிட மனித உயிர் மேலானது!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஒருமுறை சீக்கிய மதகுரு கிராமம் ஒன்றிற்கு வருகை தந்தார். இதையறிந்த அந்த ஊர்மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து மேளதாளம் முழங்க அவ்வூரின் எல்லையிலிருந்து அவரை ஊருக்குள் அழைத்துச் சென்றனர். அவர் அந்த ஏழை மக்களோடு அளவளாவி உரையாடிக்கொண்டிருந்தார். இந்தச் செய்தி அவ்வூரிலிருந்த செல்வந்தருக்குத் தெரிய வந்தது. உடனே அவர் தனது வேலையாளை அனுப்பி அவரைத் தனது வீட்டுக்கு அழைத்துவரக் கட்டளையிட்டார். அவரும் சென்று குருநானக்கை அழைக்க அவர் மறுப்பேதும் சொல்லாமல் அச்செல்வந்தரின் வீட்டிற்கு வந்தார். குருநானக்கை வாசலில் நின்று வரவேற்ற அவர், “என்ன சாமி, இப்படி பண்ணிடீங்க... இந்த ஊரிலேயே நான் ஒருவன் மட்டும்தான் பெரிய பணக்காரன். நீங்கள் என் வீட்டுக்கு முதலில் வராமல் சேரியில் வாழும் அந்த ஏழை மக்களிடம் போயிருக்கீங்க.. அவனுங்க எல்லாம் என் பண்ணையில வேலை செய்றவங்க...சாமி" என்றார். குருநானக் அதற்குப் பதிலேதும் கூறவில்லை. “சரி சரி உள்ளே வாங்க” என்று அழைத்துச் சென்று அவருக்கு விதவிதமான உணவுவகைகள், பழங்கள், மற்றும் இனிப்புகளை வழங்கி அவரை உண்ணும்படி கேட்டுக்கொண்டார் அச்செல்வந்தர். "பரவாயில்லையப்பா... நான் இவைகளையெல்லாம் விரும்பி சாப்பிடுவதில்லை. எனக்குக் கொஞ்சம் சோறும் குழம்பும் இருந்தால் போதும்” என்று கூறி எளிமையாக உணவு உண்டார். அதன்பிறகு, அப்பணக்காரர் குருநானக்கை அழைத்துச் சென்று தனது அரண்மனையைச் சுற்றிக்காட்டினார். “சாமி இது மிகவும் அதிகமான பொருள்செலவில் கட்டப்பட்ட பெரிய மாளிகை. இதிலுள்ளவை அனைத்தும் விலையுயர்ந்த பளிங்குக்கற்களால் ஆனவை.  இங்குள்ள கதவுகள், சன்னல்கள், அலமாரிகள் எல்லாமே சந்தனமரத்தாலும் தேக்குமரத்தாலும் செய்யப்பட்டவை” என்று தனது இல்லம் குறித்து புகழ்பாடினார். அதன்பிறகு குருநானக்கை மேல்மாடிக்கு அழைத்துச்சென்று, “சாமி இங்கிருந்து கண்ணுக்கெட்டிய தூரம்வரை உள்ள நிலங்கள் எல்லாமே என்னுடையவை. இன்னும் 1000 ஆண்டுகளுக்குத் தேவையான அளவிற்கு நான் என்னுடைய பிள்ளைகளுக்குச் சொத்து சேர்த்து வைத்திருக்கின்றேன்” என்று பிதற்றிக்கொண்டே போனார் அப்பணக்காரர். எல்லாவற்றையும் மிகவும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த குருநானக், "சரிப்பா நேரமாகிவிட்டது நான் கிளம்புகிறேன்... எனக்கு நீ ஓர் உதவி செய்யவேண்டும்” என்று கேட்டார். அதற்கு அந்தச் செல்வந்தர், “சொல்லுங்கள் சாமி... உங்களுக்குப் போய் செய்யாமல் இருப்பேனா? கேளுங்கள்... சாமி, என்ன வேண்டும் உங்களுக்கு..? என்றார். அப்போது குருநானக், தனது பையிலிருந்து ஓர் ஊசியை எடுத்து அவரிடம் கொடுத்து, "சொர்க்கத்தில் நீ என்னை சந்திக்கும்போது இதனை என்னிடம் கொடு" என்றார். உடனே அப்பணக்காரருக்கு கோபம் தலைக்கேற, “சாமி என்னைய என்ன முட்டாளுன்னு நினைச்சீங்களா?” என்று கேட்டார். அதற்கு குருநானக், “நான் என்ன தவறுதலாகக் கேட்டுவிட்டேன். சொர்க்கத்தில் என்னை சந்திக்கும்போது இந்த ஊசியைத்தானே என்னிடம் கொடுக்கச் சொன்னேன்" என்றார் பொறுமையாக. “பின்ன என்ன சாமி, எந்தவொரு மனிதனும் இவ்வுலகத்தை விட்டுப்போகும்போது தன்னுடன் எதையும் கொண்டுபோக முடியாதுன்னு எனக்குத் தெரியும். அப்படியிருக்க, இந்த ஊசியை கொண்டுவான்னு சொல்றீங்களே... அது எப்படி சாமி முடியும்" என்றார். “சரியாய் சொன்னாய் மகனே... இந்த உலகத்தை விட்டுப்போகும்போது, யாராலும் ஓர் ஊசியைக் கூட இங்கிருந்து கொண்டுபோக முடியாதுன்னு தெரிஞ்ச உனக்கு, எதுக்குப்பா இவ்வளவு செல்வம்? அதுவும் இது எந்தவிதத்திலும் பயன் தராதுன்னு அறிந்தும்கூட, ஏனப்பா இன்னும் செல்வம் சேர்த்துக்கிட்டே இருக்க நினைக்கிற? அதனால, தேவைக்கு அதிகமாக உன்னிடம் இருப்பதையெல்லாம் உன்னுடைய பண்ணையில் வேலைசெய்யும் இவ்வூரின் ஏழை எளிய மக்களுக்குப் பகிர்ந்துகொடுத்துவிடு” என்று அறிவுரை வழங்கினார். இதனைக் கேட்டதும் அப்படியே திகைத்து நின்றார் அப்பணக்காரர்.

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘ஞானமும் விவேகமும் கொள்வோம்!’ என்ற தலைப்பில் 49-வது திருப்பாடலில் முதல் நான்கு இறைவசனங்களை நமது தியானச் சிந்தைகளுக்கு எடுத்துக்கொண்டோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 5 முதல் 8 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். இப்போது அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். “துன்பக்காலத்தில் நான் அஞ்சுவானேன்? என்னை வளைத்துக்கொண்டு கொடுமைப்படுத்தும் வஞ்சகர்க்கு நான் அஞ்சுவானேன்? தம் செல்வத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றவரோ தம் செல்வப்பெருக்கைக் குறித்துப் பெருமையாகப் பேசுகின்றனர். உண்மையில், தம்மைதாமே மீட்டுக்கொள்ள எவராலும் இயலாது; தம் உயிரை மீட்க எதையும் கடவுளுக்குத் தர இயலாது. மனித உயிரின் ஈட்டுத் தொகை மிகப் பெரிது; எவராலும் அதனைச் செலுத்த இயலாது” (வச 5-8). நாம் மேலே கேட்ட கதை தாவீது கூறும் வார்த்தைகளுக்கு அப்படியே கனக்கச்சிதமாகப் பொருந்தி நிற்கிறது. காரணம், இன்றைய உலகம் செல்வத்தின்மீதுதான் அதிதீவிர நம்பிக்கைகொண்டுள்ளது. பணம் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம் என்று நினைக்கிறது. பணம் இருந்தால் போதும் எனக்குக் கடவுளே தேவையில்லை என்று ஆணவத்துடன் கூறும் அளவிற்கு இவ்வுலகின் பெரும்பணக்காரர்கள் எல்லாம் புத்திப்பேதலித்து திரிகின்றனர். செல்வத்தின்மீது கொண்ட பேராசையால் பெற்ற தாய் தந்தையரையும், உடன்பிறந்தோரையும், உறவுகளையும் கொலைசெய்யும் அளவிற்குத் துணிகின்றனர் பலர். இதுபற்றிய செய்திகள் அவ்வப்போது செய்தித்தாள்களில் இடம்பெறுவதைக் காண்கின்றோம். இன்று உலகின் பெரும்பாலான மக்கள் வறுமையையும், பசி பட்டினியையும் சந்திப்பதற்குக் காரணம், சில நூறுபேர்களின் மிதமிஞ்சிய பொருளாசையே என்பதை நாம் மறுக்க முடியுமா? நம் இந்திய தேசத்தில் அதானியும் அம்பானியும் தான் இந்தியப் பொருளாதாரத்தையே தங்கள் கைக்குள் வைத்திருக்கின்றனர் என்றும், ஆளும் அரசு அவர்களுக்குத்தான் சாதகமாக செயல்படுகிறது என்றும் எத்தனையோ சமூகச் செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருநாளும் எடுத்துக்காட்டி வருகின்றனர்.

இன்று நாம் தியானித்துக்கொண்டிருக்கும் இறைவார்த்தைகளில், முதலாவதாக, "துன்பக்காலத்தில் நான் அஞ்சுவானேன்? என்னை வளைத்துக்கொண்டு கொடுமைப்படுத்தும் வஞ்சகர்க்கு நான் அஞ்சுவானேன்?” என்கின்றார் தாவீது. இங்கே 'வஞ்சகர்' என்று யாரைக் குறிப்பிடுகின்றார் தாவீது? பொருளாசைக் கொண்டோரையும், அதற்காக எந்தவிதமான கொடுஞ்செயல்களையும் செய்யத் துணிவோரையும்தான் வஞ்சகர் என்று தாவீது குறிப்பிடுகின்றார் என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம். பொதுவாக, செல்வத்தின்மீது மிதமிஞ்சிய பற்றுகொண்டவர்கள் மற்றும் வெறிகொண்டவர்கள்தாம் எல்லா வழிகளிலும் சூது, வஞ்சகம், ஏமாற்றுவேலை, கொலை முயற்சிகள் போன்றவற்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரங்கேற்றத் துடிப்பர் என்பது நாம் அறிந்த உண்மை. இதனை நாம், நமது நடைமுறை வாழ்க்கையிலும் அன்றாடம் கண்டு வருகின்றோம்.

இரண்டாவதாக, "தம் செல்வத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றவரோ தம் செல்வப்பெருக்கைக் குறித்துப் பெருமையாகப் பேசுகின்றனர்" என்கின்றார் தாவீது. ‘என்னை யாராலும் அசைக்க முடியாது, என்னிடம் யாரும் கிட்ட நெருங்க முடியாது, யாரை எப்படி சரிக்கட்டுவது என்று எனக்குத் தெரியும், நாய்க்கு எலும்புத் துண்டைத் தூக்கிப்போட்டால் போதும், வாலை ஆட்டிக்கொண்டு அது பேசாம போய்டும்’ என்று கூறும் மனிதர்களே செல்வத்தின்மீது தீராத வெறிகொண்டவர்கள் என்பது திண்ணம். ஒரு கிராமத்தில் இப்படித்தான் கிறித்தவர் ஒருவர் செல்வத்தின்மீது தீராதப் பற்றுக்கொண்டிருந்தார். அவர் கோவில் பக்கமே வந்தது கிடையாது. காலையில் கண்விழித்ததும் முதலில் வயலுக்குத்தான் செல்வார். “ஏன் நீங்கள் கோவிலுக்கு வருவதில்லை” என்று பங்குத்தந்தை கேட்டால், “சாமியா எனக்கு சோறு போடுது” என்று தெனாவட்டாகக் கேட்பார். ஆனால் இப்படிக் கேட்ட அந்த நபர் இப்போது உயிருடன் இல்லை. ஒருநாள் அருகில் இருக்கக்கூடிய நகர் ஒன்றிற்கு விவசாயப் பொருள்களை வாங்குவதற்காகப் பேருந்தில் சென்றுகொண்டிருந்தார். போகும் வழியில் தான் பயணம் செய்துகொண்டிருந்த அந்தப் பேருந்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோனார். ஆம், இவ்வளவுதான் மனிதரின் வாழ்வு! இதனால்தான், 'மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று... கடவுள் நினைப்பதுண்டு... பாவம் மனிதனென்று...' என்று கவிஞர் கண்ணதாசன் எழுதினார். மேலும் "கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்... ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்... படைத்தவன் மேல் பழியுமில்லை பசித்தவன் மேல் பாவம் இல்லை... கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார்... பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை...” என்றும், “இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார்... மடி நிறைய பொருள் இருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும்… எது வந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்..." என்று பொருளாசை மற்றும் பகிர்வு குறித்து மறைந்த கவிஞர் வாலி அழகாக எழுதியிருக்கின்றார்.

இறுதியாக, "உண்மையில், தம்மைதாமே மீட்டுக்கொள்ள எவராலும் இயலாது; தம் உயிரை மீட்க எதையும் கடவளுக்குத் தர இயலாது. மனித உயிரின் ஈட்டுத் தொகை மிகப் பெரிது; எவராலும் அதனைச் செலுத்த இயலாது” என்கின்றார் தாவீது. இப்படி செல்வத்தின்மீது மிதமிஞ்சிய பற்றுக்கொண்டோர் தங்களையும் மீட்டுக்கொள்ள முடியாது, தம் உயிரை மீட்டுத்தரும்படி கடவுளுக்கு எதையும் கொடுக்கவும் முடியாது என்கின்றார். "ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?" (காண்க லூக் 9:25) என்று செல்வம் குறித்து இயேசு கூறிய படிப்பினைகளை நாம் இங்கே நினைவு கூர்வோம். கடவுள் என்ற மிகப்பெரும் விலைமதிக்க முடியாத செல்வத்தைப் பற்றிக்கொள்ளத் தவறுபவர்கள் அனைவரும் இத்தகையோரே என்பதையும் நாம் இக்கணம் புரிந்துகொள்வோம். மேலும் மனிதருடைய உயிர் மிகவும் அற்பமானது அல்ல மாறாக, அது மிகவும் உயர்ந்தது, விலைமதிக்க முடியாதது என்பதையும் அதற்கு ஈடாக எதையும் கொடுக்கவும் முடியாது என்பதையும் தெளிவுபடக் கூறுகின்றார் தாவீது.

ஆகவே, நாம் பற்றிக்கொள்ள விரும்பும் இவ்வுலகின் செல்வங்களைவிட, கடவுள் நமக்கு அளித்துள்ள இந்த உயிரும், இதனைவிட கடவுள் என்ற உண்மை செல்வமும் அதிமுக்கியமானது என்பதை உணர்வோம். இத்தகைய உயர்வான என்றும் நிலைத்திருக்கும் செல்வத்தைப் பற்றிக்கொள்ள இறையருள் வேண்டி இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 January 2024, 13:09