தேடுதல்

அருள்சகோதரிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அருள்சகோதரிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (AFP or licensors)

பல்சுவை - அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் உலக நாள்

திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள், 1997ம் ஆண்டில் அர்ப்பணிக்கப்பட்ட துறவியருக்கான உலக நாளை உருவாக்கினார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இல்லறம் தவிர்த்து, இறையோடு மகிழ்ந்து, தனிமையில் நிலைத்து, தபத்தில் சிறந்து, துறவை தூய்மையாக போற்றியவர்கள் துறவிகள். துறவு என்பது ஆசையைத் தவிர்த்து அன்பை விதைத்து அன்போடு பயணிப்பதே. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2 ஆம் நாள் அதாவது இயேசு பிறந்து 40ஆம் நாள் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட நாளன்று அர்ப்பணிக்கப்பட்ட துறவிகளின் உலக நாளை திருஅவை சிறப்பிக்கின்றது. அதன்படி வரும் பிப்ரவரி 2 வெள்ளிக்கிழமை 28ஆவது ஆண்டு அர்ப்பணிக்கப்பட்ட துறவியருக்கான உலக நாள் சிறப்பிக்கப்பட உள்ளது. 

துறவியருக்கான உலக நாள் கொண்டாடப்படக் காரணம்

திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள், 1997ம் ஆண்டில் இந்த துறவியருக்கான உலக நாளை உருவாக்கினார். இயேசு பிறந்த நாற்பதாம் நாள், ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட விழாவைக் கொண்டாடும் நாளில் இந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.  ஏழ்மை, கற்பு, கீழ்ப்படிதல், என்னும் வார்த்தைப்பாடுகளை ஏற்று தங்களையே இறைவனுக்கு அர்ப்பணித்த, ஆண்பெண் துறவிகளின் வாழ்க்கை அழகையும், அதன் தாக்கத்தையும் உலக மக்களுக்கு அடையாளப்படுத்துவதற்காகவே இந்நாளானது கொண்டாடப்படுகின்றது. இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டது, அன்னை மரியாவிற்கான தூய்மைச்சடங்கு என்று சிறப்பிக்கப்படும் இந்த நாளில் மெழுகுதிரிகள் ஆசீர்வதிக்கப்படுகின்றன. மெழுகுதிரிகள் தியாகத்தின் அடையாளம். தன்னையே உருக்கு உலகிற்கு ஒளி கொடுக்கும் திரிகள், குடும்பத்திற்காக சமூக முன்னேற்றத்திற்காக என்று தன்னையே அர்ப்பணித்து வாழும் மனிதர்களுக்கு அடையாளமாக கூறப்படுகின்றன. மேலும் தியாகத்தின் இலக்கணமாய் தன்னையும், தன் வாழ்வையும், இறைத்திருவுளத்திற்காக அர்ப்பணித்து, உலகின் ஒளியாகத் திகழும் இயேசுவையும் அடையாளப்படுத்துகின்றன. இயேசுவைப் பின்பற்றி அவர்பணி செய்ய தங்களையே அர்ப்பணித்திருக்கும் துறவிகளும், உலகின் ஒளியான இயேசுவின் ஒளியைப் பிரதிபலிக்கக்கூடியவர்களாக வாழவும், இந்த மெழுகுதிரியானது அர்ச்சிக்கப்பட்டு வழங்கப்படுகின்றது.     

அர்ப்பணிக்கப்பட்ட துறவிகளின் மறைப்பணி வாழ்க்கையானது, திருஅவையின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்றும், இந்த சிறப்பானது, துறவற அழைத்தலைப் பெற்றவர்கள் மட்டுமன்றி முழு கிறிஸ்தவ சமூகத்திற்குமானது என்றும் திருத்தந்தை புனித 2ஆம் ஜான் பால் இந்நாளைக் குறித்து எடுத்துரைக்கின்றார். மேலும், “ கிறிஸ்தவ அழைப்பின் உள்ளார்ந்த தன்மையை வெளிப்படுத்துவதாலும், முழு திருஅவையும் ஒன்றிணைவதற்கு மணமகனாம் இயேசுவுடன் இணைந்து அவரது பணிக்காக செயல்படுவதாலும், திருஅவையின் இதயமாக அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் இருக்கின்றனர் என்றும் எடுத்துரைக்கின்றார். துறவிகள் அழைத்தல் என்னும் கடவுளின் அற்புதமான பரிசிற்காக நன்றி தெரிவிக்கும் இந்த நாளில், கடவுளை மிகவும் உறுதியாக ஆராதித்தல், அழைத்தல் என்னும் உயரிய கொடைக்காக நன்றி தெரிவித்தல் என்பதனை அதிகமதிகமாக வலியுறுத்துகின்றார் புனித இரண்டாம் ஜான் பால்.

உலக மக்கள் அனைவரும் அர்ப்பணிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை பற்றிய அறிவையும் அவர்கள் வாழ்வின் மதிப்பையும் நன்று அறிந்து ஊக்குவிக்கவேண்டும். அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள், இறைவன் தங்களுக்குச் செய்த அற்புதங்களை எல்லாம் நினைத்துக் கொண்டாடி மகிழ வேண்டும். தூய ஆவியால் பரவிய தெய்வீக அழகின் கதிர்களை தங்களின் வாழ்க்கை முறைகளில் ஒளிரும் நம்பிக்கையால் கண்டறியவும், மேலும் பல அற்புதங்களைப் பெறவும் துறவிகள் அழைக்கப்படுகின்றார்கள். இதன் வழியாக திருஅவையிலும், உலகிலும் அவர்களின் ஈடுசெய்ய முடியாத பணியின் தெளிவான உணர்வானது வெளிப்படுகின்றது.

திருப்பீட துறவியர் பேராயத் தலைவர், கர்தினால் Braz de Aviz அவர்கள், துறவிகள் தங்களையே மற்றவருக்கு வழங்காதபோது, அவர்கள் தங்கள் வாழ்வில் தளர்ச்சியை அனுபவிக்கின்றனர். தாங்கள் பெற்றுள்ள அழைத்தல் எனும் கொடைக்காக துறவியர் நன்றி செலுத்துகின்றனர் என்று இந்த நாள் குறித்த தனது கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார். மேலும், இவ்வுலகின் கடினமான சூழல்கள் மத்தியில் துறவியரின் வாழ்வு சாட்சியம் பகரக்கூடியதாய் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சிமியோன் காட்டும் எடுத்துக்காட்டான வாழ்க்கை

தன் வாழ்நாள் முழுவதும், சிமியோன், இறைவனின் வருகைக்காக பொறுமையுடன் காத்திருந்தார் தன் நீண்ட வாழ்வில் துயரங்களும், சோர்வும் உண்டானாலும், அவரது உள்ளத்தில் நம்பிக்கையின் ஒளி அணையாமல் எரிந்து கொண்டிருந்தது. தன்னைச்சுற்றி நடந்த நிகழ்வுகளால் துயருற்று, மனத்தளர்ச்சி அடையாமல், பொறுமையுடன், விழித்திருந்ததால், , "நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன" என்று சிமியோன் இறைவனிடம் கூறமுடிந்தது. சிமியோனைப் போலவே, நம் வாழ்வின் இருளை ஒளிர்விக்க இறைவனின் ஒளிக்காக காத்திருக்கிறோம். சிமியோனைப் போன்று நாமும் இயேசுவை கரத்தில் ஏந்தி அவரை நமது வாழ்வின் மையமாகக் கொள்ளும்போது, ​​நமது பார்வை மாறுபடும். நம்முடைய எல்லா முயற்சிகள் மற்றும் சிரமங்கள் மத்தியில் நாம் அவருடைய ஒளியால் சூழப்பட்டு, அவருடைய ஆவியால் ஆறுதலடைகிறோம், அவருடைய வார்த்தையால் ஊக்குவிக்கப்பட்டு, அவருடைய அன்பில் நிலைத்திருப்பதை உணர்கிறோம்.

பாலைநிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்; பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன் (எசா 43:19) என்ற இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகள் வழியாகக் கடவுள் நமது வாழ்வின் பாலைவனங்களுக்கு மத்தியில் புதிய பாதைகளைத் திறக்கிறார். அருள்பொழிவு செய்யப்பட்டவர்களாக, அர்ப்பணிக்கப்பட்ட துறவியராக வாக்குறுதியின் அடையாளமாக இருக்கவும், கடவுளின் புனித மக்களின் வரலாற்றில் அதை நிறைவேற்ற உதவவும் அழைக்கப்படுகின்றார்கள். ஆண்டவர் தன்னை இரக்கத்தின் கடவுளாக வெளிப்படுத்துவதுடன், அவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்று உறுதியளிக்கின்றார். அவர் எப்போதும் நம் அருகில் இருக்கின்றார். துயரங்களின்போது அடைக்கலமாகவும் வலிமையாகவும் நம்முடன் இருக்கின்றார். ஆகவே, அர்ப்பண வாழ்விற்கு அழைக்கப்பட்ட அனைவரும் கடவுளின் இந்த வாக்குறுதியை துயருறும் அவருடைய மக்களுக்கு வெளிப்படுத்த அழைக்கப்படுகின்றார்கள்.

நம் உடன்வாழும் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்கவும், இதயத்தின் காயங்களை குணப்படுத்தும் இயேசுவை அவர்களுக்குக் கொண்டு வரவும் துறவிகள் அழைக்கப்படுகின்றார்கள். இறைஅழைத்தலை இந்த நோக்கத்தில் வாழும்போது, வாழ்வதற்கு முற்படும்போது, அதிகமான சோதனைகளையும் சவால்களையும் எதிர்கொள்ளவேண்டிய சூழல் ஏற்படுகின்றது. கட்டளை செபம் சொல்லுதல், பாவமன்னிப்பு அருளடையாளம் பெறுதல், குழு செபம் மற்றும் தனி செபத்திற்கு அதிக நேரம் செலுத்துதல், செபநேரம் தவிர பிற நேரங்களில் இறைவனோடு இணைந்திருத்தல் போன்றவற்றின் வழியாக ஆன்மிக பலவீனத்திலிருந்து வெளிவரலாம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். மேலும் உலக காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் துறவிகள் தங்களது அழைத்தலின் மேன்மையை இழந்து விடுகின்றார்கள் என்றும், உலக இன்பங்களினால் ஆள்கொள்ளப்பட்டு அதற்கு அடிமையாவிடும் அபாயத்திற்கு உள்ளாகின்றார்கள் எனவே ஆழமான ஆன்மிக அனுபவம் பெற்று வாழவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிமியோன், அன்னா ஆகிய இருவரும் முதிர்ந்த வயதுள்ளவர்கள் என்றாலும், அவர்கள் இவ்வுலகில் தொடர்ந்து சந்தித்த துயரங்கள் அவர்களது பொறுமையை பறிப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை. துறவற வாழ்வை மேற்கொண்டுள்ள இருபால் துறவியரும் தூய ஆவியாரின் தூண்டுதல்களுக்கு செவிமடுத்து, புதிய வழிகளைத் தேடி கண்டுபிடித்து, துணிவுடன் முன்னேறிச் செல்வதற்கு பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும்.

மகிழ்வான துறவி

துறவி ஒருவர் தனிமையான இடத்தில் இயற்கைச்சூழலில் இறைவனைப்புகழ்ந்து பாடல்கள் பாடிக்கொண்டு மிகவும் மகிழ்வாக இருந்தார். அரசன் ஒருவன் காட்டில் வேட்டையாடிவிட்டு களைப்பில் துறவி இருந்த இடத்தை அடைந்தான். அரசனைக் கண்டதும் தெண்டனிட்டு வணங்கி போற்றுவார் என்று அரசன் எண்ணி இருந்தான். ஆனால் துறவியோ தனது செயலான மகிழ்வுடன் இறைவனைப் புகழ்வதைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த அரசன், துறவியிடம் நான் என்று தெரிகின்றதா என்று கேட்டான். துறவியோ எந்த பதிலும் சொல்லாமல் நான் யார் என்று உனக்குத் தெரிகின்றதா என்று திருப்பிக் கேட்டாராம். அரசன் தெரியாது என்று பதில்மொழி கூற, துறவியோ இந்த உலகத்தின் ராஜா நான் என்றாராம். அரசன் திகைத்துப் போய், நான் தான் இந்த உலகின் ராஜா. எத்தனை நாடுகளை நான் வென்று இருக்கின்றேன் என உனக்குத் தெரியுமா? கண்ணில்படும் தூரத்தில் உள்ள நாடுகள் எல்லாம் எனக்குச் சொந்தம் என்று கூறினான். உடனே துறவி, இத்தனை இருந்தும் உன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடிகின்றதா? இத்தனை நாடுகளையும் உனக்கென நீ வைத்துக் கொண்டாலும், உன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை. நான் இறைவனைப் புகழ்ந்து என் வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்று கூறினார். உடனே தன் நிலையை உணர்ந்த அரசன் உங்களைப் போல மகிழ்வுடன் வாழ நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்க துறவி மறுமொழியாக, பேராசையை விட்டு விடு, போதும் என்ற மனதுடன் வாழ், அனைத்தும் இறைசெயல் என்ற மனநிலை கொள் என்று அறிவுறுத்தினார். அரசனும் அதன்படி தன் வாழ்வை வாழ முயற்சித்தான்.

ஆக பேராசையை விடுத்து, போதும் என்ற மன நிலையோடும், நம் வாழ்வில் நடக்கும் அனைத்தும் இறைச்செயல் என்ற எண்ணத்தோடும், வாழும் போது, நாம் வாழ்கின்ற வாழ்க்கை, நிறைவானதாக, மகிழ்வானதாக இருக்கும். நாமும் நம்மைச் சுற்றி இருப்பவர்களும் மன நிறைவுடன் வாழ்வோம். ஒரு நல்ல துறவியின் வாழ்க்கையானது அவர்களின் வார்த்தைகளை விட அர்த்தமுள்ளதாக ஒலிக்கவேண்டும். துறவிகள் திருஅவையில் மிக முக்கியமானவர்கள், மதிப்புமிக்கவர்கள் என்று சுட்டிக்காட்டுகின்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இறைவனின் ஆறுதல் அளிக்கும் பிரசன்னத்தின் வாய்க்கால்களாகவும், நற்செய்தியின் மகிழ்ச்சியான சாட்சிகளாகவும், வன்முறையின் புயல்களுக்கு மத்தியில் அமைதியின் இறைவாக்கினர்களாகவும், அன்பின் சீடர்களாகவும், ஏழைகள் மற்றும் துன்பங்களின் காயங்களைக் கவனிக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றார்.

துறவிகள் தங்களது அன்றாட வாழ்வில் நம்பகத்தன்மையை வளர்த்துக்கொள்ளவும், அவர்கள் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்ட சிறிய விடயங்களில் கவனமாக இருக்கவும் கடவுள் விரும்புகின்றார். நம்மை ஓர் இரக்கம் நிறைந்த பார்வையுடன் பார்க்கும் கடவுள், உலகத்தையும் அதேபோல் பார்க்க புதிய கண்களை, புதிய பார்வையைத் தருகிறார். இந்தப் பார்வையானது வெளித்தோற்றத்தில் நின்றுவிடாது, நமது பலவீனங்கள் மற்றும் தோல்விகளின் பிளவுகளுக்குள் நுழைந்து அங்கேயும் கடவுளின் பிரசன்னத்தைக் கண்டறிய உதவுகின்றது. நம் கண்களைத் திறந்து நமது வாழ்க்கையையும் நமது சமூகங்களையும் புதுப்பிக்க ஆவியானவர் நம்மை அழைக்கிறார் என்பதை உணர்த்துகின்றது.

எல்லாவற்றின் மையமும் கிறிஸ்துவே, அவரே நம் வாழ்வின் ஆண்டவர் என்பதை ஏற்றுக்கொள்ள முயல்வோம். துறவற வாழ்வு என்பது, இறைவனின் அன்புக் கொடை. துறவற வாழ்வை, உலகின் வழிகளில் நோக்கும் சோதனைகளை கைவிடவேண்டும் உலகின் பார்வையில் துறவற வாழ்வை நாம் நோக்கி அதன் வழி செல்லும்போது, அது முன்னோக்கிச் செல்லாமல், தேங்கிப்போன ஒரு நிலையை அடைந்து விடும்.  

அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் இல்லாத உலகத்தையோ, திருஅவையையோ நினைத்துப் பார்க்க முடியாது. ஏனெனில் நீதியும் அமைதியும் நிறைந்த சமூகத்தின் வளர்ச்சிக்கும், இளையோரோடும் ஏழைகளோடும் இறைவாக்கைப் பகிர்ந்து கொள்வதிலும் துறவிகள் புளிக்காரமாய் உள்ளனர் என்று வலியுறுத்துகின்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் ஆகிய வார்த்தைப்பாடுகளின் வழியாக, தங்களை முழுமையாக, கடவுளுக்கு மட்டுமே அர்ப்பணித்துள்ள துறவிகளால் நற்செய்தி சிறப்பாக வாழப்படுகின்றது. கடவுளுக்குத் தன்னையே காணிக்கையாக்குவது ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் பொருந்தும். இயேசுவோடு, இயேசுவைப் போல, நாம் அனைவரும் நம் வாழ்வை, நம் குடும்பத்திலும், பணியிலும், திருஅவைக்கான சேவையிலும், கருணைப் பணிகளிலும் தாராளமாக வழங்குவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்துவாழ்வோம். அர்ப்பணிக்கப்பட்ட இருபால் துறவிகள் அனைவருக்கும் இனிய உலக துறவியர் நாள் நல்வாழ்த்துக்கள்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 January 2024, 13:43