தேடுதல்

இந்தியக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் (கோப்புப் படம்) இந்தியக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் (கோப்புப் படம்)  (AFP or licensors)

இந்தியாவில் புதிய கத்தோலிக்க இணைப்பு செயலி அறிமுகம்!

இந்தப் புதிய செயலி, புலம்பெயர்ந்த கத்தோலிக்க தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு அவசரகாலத்தில் தலத் திருஅவையுடன் தொடர்புகொள்ள பெரிதும் உதவியாக இருக்கும் : Stephen Alathara

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை அதன் உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்துவமான அடையாள எண்ணை வழங்க முடிவு செய்துள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Catholic Connect App எனப்படும் இந்த இணைப்பு செயலி இலத்தீன் வழிபாட்டு முறை கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்குத் தனித்துவமான அடையாள எண்ணை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஜனவரி 23, இச்செவ்வாயன்று, கோவாவில் நடைபெற்ற மறைமாவட்ட நிர்வாகிகளின் கருத்தரங்கில் தெரிவித்தார் இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் துணை பொதுச் செயலாளர் அருள்பணியாளர் Stephen Alathara

இந்தத் தனித்துவமான அடையாள எண், உறுப்பினர்கள் தலத் திருஅவையின் சேவைகளை அணுகுவதற்கும், வெவ்வேறு பங்குத்தளங்கள் மற்றும் இந்தியக் கத்தோலிக்கப் பேரவையின் 132 மறைமாவட்டங்களுடனான தொடர்பை வளர்ப்பதற்கும் என இரட்டை நோக்கத்திற்கு உதவும் என்றும் கூறினார் அருள்பணியாளர் Alathara.

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் ஜனவரி 30-ம் தேதி செவ்வாயன்று, இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Filipe Neri Ferrão அவர்கள் இந்தப்  புதிய  செயலியை அறிமுகப்படுத்துகிறார் என்றும் தெரிவித்தார் அருள்பணியாளர் Alathara

மேலும் இந்தப் புதிய செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமில்லை, விரும்பினால் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று  கூறிய அருள்பணியாளர் Alathara அவர்கள், இது புலம்பெயர்ந்த கத்தோலிக்கத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு அவசரகாலத்தில் தலத் திருஅவையுடன் தொடர்புகொள்வதற்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் கூறினார்.

புலம்பெயர்ந்த சகோதரர் சகோதரிகளுக்குப் பயனளிக்கும் இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறியுள்ள இந்தியக் கத்தோலிக்க ஆயர்பேரவையின் புலம்பெயர்ந்தோருக்கான பணிக்குழுவின் செயலர் அருள்பணியாளர் Jaison Vadassery அவர்கள், இந்த முயற்சி அவசரமான ஒரு தேவை என்றும், இது இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வாழும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவும் என்றும் குறிப்பிட்டார் (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 January 2024, 16:01