தேடுதல்

அருள்பணி இப்ராஹிம் பால்தாஸ் அருள்பணி இப்ராஹிம் பால்தாஸ் 

இஸ்ராயேல்-ஹமாஸ் மோதல்களில் 10,000 குழந்தைகள் பலி

போதிய தண்ணீரின்றி, மின்சாரம் இன்றி, மருந்துக்கள் இன்றி காசா பகுதி மக்கள் வாடும்போது, உலகின் மனச்சான்று எங்கே சென்றது என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இஸ்ராயேல் மற்றும் ஹமாஸ் குழுவுக்கும் இடையே மோதல்கள் துவங்கியதிலிருந்து இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளதாக கவலையை வெளியிட்டுள்ளார், யெருசலேமின் புனித பகுதிகளுக்கானப் பொறுப்பாளர் அருள்பணி Ibrahim Faltas.

கடந்த 100 நாட்களான போரில் ஏறக்குறைய முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், அறுபதாயிரம் பேர் காயமடைந்துள்ளனர் எனக்கூறும் அருள்பணி Faltas அவர்கள், ஈரினங்கள், இரு நாடுகள் என்ற அடிப்படையில் தீவிர சிந்தனைகள் இடம்பெற்று, இதற்கு விரைவில் ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

காசா பகுதியில் இடம்பெறும் போரின் பாதிப்புகள் குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு பேட்டியளித்த பிரான்சிஸ்கன் துறவி, அருள்பணி பால்தாஸ் அவர்கள், அண்மை போரால் 10 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதுடன், 40 ஆயிரம் குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.

West Bank பகுதியிலும் போரால் பெருமளவு சேதங்கள் இடம்பெற்று வருவதைக் குறிப்பிட்ட அவர், இதுவரை அப்பகுதியில் 400 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 10 ஆயிரம் பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாகவும் கவலையை வெளியிட்டார்.

மேலும், பல ஆயிரக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டும், பல இடங்கள் அழிவுக்குள்ளாக்கப்பட்டும் இருப்பது குறித்தும் எடுத்துரைத்த அருள்பணி பால்தாஸ் அவர்கள், புனித பூமியில் இடம்பெறும் மோதல்கள் மூன்றாம் உலகப்போருக்கு இட்டுச் செல்லும் ஆபத்து இருப்பது குறித்த கவலையையும் தெரிவித்தார்.  

இம்மோதல்கள் மற்றும் உயிரிழப்புக்கள் குறித்து உலகத் தலைவர்கள் மௌனமாக இருப்பது குறித்த ஆச்சரியத்தை வெளியிட்ட அருள்பணி பால்தாஸ் அவர்கள், போர் நிறுத்தத்திற்கு உலக நாடுகள் அழைப்பு விடாதது ஏன் என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

போதிய தண்ணீரின்றி, மின்சாரம் இன்றி, மருந்துக்கள் இன்றி காசா பகுதி மக்கள் வாடும்போது, உலகின் மனச்சான்று எங்கே சென்றது என்ற கேள்வியையும் முன்வைத்தார் யெருசலேமின் புனித பகுதிகளுக்குப் பொறுப்பான பிரான்சிஸ்கன் துறவி, அருள்பணி ­­பால்தாஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 January 2024, 15:10