தேடுதல்

லெபனோன் கோவில் லெபனோன் கோவில்   (AFP or licensors)

புனித நாட்டில் நிகழும் போர் குறித்து லெபனோன் தலத்திருஅவை கவலை!

தெற்கு லெபனோனில் அதிகரித்து வரும் குண்டுவெடிப்பு மற்றும் எரிகணை தாக்குதல்கள் ஆயிரக்கணக்கான மக்களை தலைநகரான பெய்ரூத்துக்கு வெளியேற நிர்பந்தித்துள்ளன : அருள்பணியாளர் Michel Abboud

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வருவது குறித்து லெபனோன் தலத்திருஅவை கவலை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் அந்நாட்டிற்கான காரித்தாஸ் அமைப்பின் தலைவர் அருள்பணியாளர் Michel Abboud.

தெற்கு லெபனோனில் அதிகரித்து வரும் குண்டுவெடிப்பு மற்றும் எரிகணை தாக்குதல்கள் ஆயிரக்கணக்கான மக்களை தலைநகரான பெய்ரூத்துக்கு வெளியேற நிர்பந்தித்துள்ள வேளை, இதுகுறித்து வத்திக்கானுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் இவ்வாறு தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் Abboud.

இந்த நிலைமை ஏற்கனவே முன்நிகழ்ந்திராத சமூக-பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்நாட்டிற்கு மேலும் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அந்நேர்காணலில் எச்சரித்துள்ள அருள்பணியாளர் Abboud அவர்கள், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயல்கிறார்கள் என்றும், அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் அனைத்துவிதமான உதவிகளும் தேவைப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.

மக்கள் அனைவரும் தங்கள் வீடுகள், வேலைகள், உறவினர்களை விட்டு வெளியேறி, ஒன்றுமில்லாத நிலையில் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பியுள்ளனர் என்று உரைத்துள்ள அருள்பணியாளர் Abboud அவர்கள், அனைத்து ஆயர்கள் மற்றும் பிற மத அதிகாரிகளின் ஆதரவுடன் அவர்களுக்கு உதவ நாங்கள் வரவேற்பு மையங்களை உருவாக்கியுள்ளோம் என்றும், மேலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளையும் நாங்கள் செய்துகொடுத்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

லெபனோன் தலத்திருஅவை பொருள் உதவிகள் மட்டுமல்ல, வெடிகுண்டு வீச்சுக்களின் கொடூரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்க ஆன்மிக ஆதரவையும் வழங்குகிறது என்று விவரித்துள்ள அருள்பணியாளர் Abboud அவர்கள், இறைவேண்டல் மற்றும் திருப்பலிக்கான வாய்ப்புகளையும் அம்மக்களுக்காக நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என்றும் அந்நேர்காணலில் விளக்கியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 January 2024, 15:25