தேடுதல்

கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ   (AFP or licensors)

ஒவ்வொரு போரும் அதிர்ச்சிதரும் மனித சோகத்தை உள்ளடக்கியுள்ளது!

இத்தகைய வன்முறைச் செயல்கள் சில காலமாக நடந்து வருகின்றன, இவற்றால் எந்தப் பயனும் இல்லை. இது இன்னும் பதட்டமான சூழ்நிலையைத் தூண்டுவதைத் தவிர வேறு எந்த விளைவையும் ஏற்படுத்தாது : கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஒவ்வொரு போரும், ஓர் அதிர்ச்சியூட்டும் மனித சோகத்தை உள்ளடக்கியது என்றும், அனைத்து நாட்டுத் தலைவர்களும் பிளவுகள், பழிவாங்குதல், வன்முறை, மோதல்கள் மற்றும் போர்களின் சங்கிலியை உடைத்தெறிய வேண்டும் என்றும் அழைப்புவிடுத்துள்ளார் கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ

ஜனவரி 16, இச்செவ்வாயன்று, ஈராக் குர்திஸ்தானில் உள்ள எர்பில் மீது ஈரானின் இராக்கெட் தாக்குதல் நடப்பட்ட நிலையில் இவ்வாறு கூறியுள்ள கர்தினால் சாக்கோ  அவர்கள், இது ஈராக் மீதான அசட்டைத்தனமான மற்றும் பொறுப்பற்ற தாக்குதல் என்றும் ஏற்கனவே, பிளவுபட்ட நாட்டில் நிச்சயமற்ற தன்மையுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் இம்மக்களுக்கு மேலுமொரு பலமான அடி விழுந்துள்ளது என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

இத்தகைய வன்முறைச் செயல்கள் சில காலமாக நடந்து வருகின்றன என்று குறிப்பிட்டுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள்,  இவற்றால் எந்த அர்த்தமும் இல்லை என்றும், இது இன்னும் பதட்டமான சூழ்நிலையைத் தூண்டுவதைத் தவிர வேறு எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இத்தகைய செயல்கள் எதார்த்தத்தை மாற்றாது, அதை மேலும் சிக்கலாக்கும் என்றும்,  அதேவேளையில், இது உரையாடல் மற்றும் தூதரக உறவுக்கான பாதையை பெருகிய முறையில் பலவீனமாக்கி வருகிறது என்றும், தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் கர்தினால் சாக்கோ.

அண்டை நாடுகளுக்கிடையேயான நல்லுறவு இத்தகைய செயல்களால் அல்ல, மாறாக, உரையாடல் மற்றும் ஒத்துழைப்பால் கட்டமைக்கப்படுகிறது என்றும், மத்திய கிழக்கில் பதற்றம் மற்றும் பிற போர் சூழ்நிலைகளை அதிகரிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்ததையும் எடுத்துக்காட்டியுள்ளார் கர்தினால் சாக்கோ.

அமெரிக்கா மக்களாட்சியைப் பற்றி பேசுகிறது, ஆனால் எங்கே இருக்கிறது இந்த மக்களாட்சி? என்று கேள்வி எழுப்பியுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள்,  ஒவ்வொரு நாடும் அதன் சொந்த நலன்களில்தான் அக்கரைக் கொண்டுள்ளதே தவிர, நிச்சயமாக மனித உரிமைகள் மீது அல்ல என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 January 2024, 15:27