தேடுதல்

புனித திருமுழுக்கு யோவான் புனித திருமுழுக்கு யோவான் 

விடை தேடும் வினாக்கள் – என்ன தேடுகிறீர்கள்?

நம்மில் பலர், என்ன தேடுகிறோம் என்பது புரியாமலேயே, வாழ்வின் பெரும்பகுதியை கழித்துவருகிறோம், அல்லது, தவறானவற்றைத் தேடி களைத்துப் போகிறோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

புனித யோவான் நற்செய்தியில் இயேசு கூறும் முதல் வார்த்தையே இதுதான். இது போல் லூக்கா நற்செய்தி நூலிலும் நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என்ற கேள்வியைத்தான் இயேசுவின் முதல் வார்த்தையாக நோக்குகிறோம்.

என்ன தேடுகிறீர்கள் என்ற இயேசுவின் கேள்வி, எத்தகைய ஒரு சூழலில் இடம்பெறுகிறது என்பதை எண்ணிப் பார்ப்போம்.

தம் இரு சீடர்களுடன் ஒரு மாலை நேரம் நின்றுகொண்டிருக்கின்ற திருமுழுக்கு யோவான் அவ்வழியே கடந்து சென்ற இயேசுவைப் பார்த்து, தம் சீடர்களிடம் காட்டி, "இதோ, கடவுளின் ஆட்டுக்குட்டி!" என்கிறார். அந்த சீடர்கள் பின் தம்மைப் பின்தொடர்வதைக் கண்டு, "என்ன தேடுகிறீர்கள்?" என்று கேட்கின்றார் இயேசு.

இங்கு, திருமுழுக்கு யோவானின் பெருந்தன்மையை, அவரின் உயர்ந்த பண்பை நாம் காண்கிறோம்.  இதுவரை மக்கள் மத்தியில் அவர் பெற்றிருந்த செல்வாக்கு, இறைவாக்கினர் என்று மக்கள் மதித்த பாங்கு, அதிகாரவர்க்கத்தினருக்கு அவர் விடுத்த சவால், இவையனைத்தையும் ஒரு நொடியில் இழப்பதற்கு திருமுழுக்கு யோவான் தயாராகிறார். தன்னை மெசியா என்று மக்கள் நினைத்திருக்க, அந்த பெருமையை தனது சுயநலத்திற்காக அவர் என்றுமே பயன்படுத்த முயலவில்லை. அது தவறானது, தான் மெசியா அல்ல என்பதைத் தெளிவாக உரைக்கும் விதமாகத்தான், "இதோ, கடவுளின் ஆட்டுக்குட்டி!" என இயேசுவைச் சுட்டிக்காட்டுகிறார். தன்னுடைய சீடர்கள் தன்னையும் தாண்டி, இயேசுவில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற அவரது எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்த சுட்டிக்காட்டல். தன் சீடர்களின் தேடல் நிறைவுக்கு வரப்போகிறது என்பதை திருமுழுக்கு யோவான் வெளிப்படுத்துவது இதில் தெளிவாகின்றது. தன் சீடர்கள் தேடிக் கொண்டிருந்தது தன்னையல்ல, மாறாக, இயேசுவைத்தான் என்பதை அவர் தன்னுடைய சீடர்களுக்குக் கற்றுத் தருகிறார். இயேசுவை இந்த உலகத்திற்கு முழுமையாக அடையாளம் காட்டும் பணியைச் செய்கின்றார் திருமுழுக்கு யோவான். தங்கள் தலைவரின் சாட்சியத்தைக் கேட்டு இயேசுவைப் பின்பற்றும் சீடர்களை நோக்கி, என்ன தேடுகிறீர்கள் என இயேசு கேட்கும் கேள்வி குறித்து இப்போது காண்போம்.

மிக ஆழமான, பொருள் நிறைந்த ஒரு கேள்வி இது. வாழ்வு முழுவதும் நம்மை அடிக்கடி சுற்றிவரும் கேள்வி எனலாம். மனிதவாழ்வில், தேடுதல் ஒரு முக்கிய இடம்பிடித்துள்ளது. நம்மில் பலர், என்ன தேடுகிறோம் என்பது புரியாமலேயே, வாழ்வின் பெரும்பகுதியை கழித்துவருகிறோம், அல்லது, தவறானவற்றைத் தேடி களைத்துப் போகிறோம்.

இறைவன், ‘அங்கிங்கெனாதபடி எங்கும்’ நிறைந்து, நம்மைச் சூழ்ந்திருந்தாலும், அவரைப் புரிந்துகொள்ளாமல் தேடிக்கொண்டிருந்ததை இப்போது எண்ணிப் பார்ப்போம். முக்கியமாக, நம் துன்ப நேரங்களில், இறைவன் காணாமற் போய்விட்டதாக எண்ணி, நாம் எத்தனைமுறை இறைவன் திருமுன்னிலிருந்து காணாமல் போயிருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.

"என்ன தேடுகிறீர்கள்?" என்று இயேசு கேட்டது, நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. ஏதோ ஒரு தேவையை நிறைவேற்றுவதற்காக தன்னைச் தேடிவருபவர்களே அதிகம் என்பதை சொல்லாமல் சொல்லும்வண்ணம், இயேசு இந்தக் கேள்வியைக் கேட்பதுபோல் தெரிகிறது.

"என்ன தேடுகிறீகள்?" என்ற இந்தக் கேள்வி, "வாழ்க்கையில் நீங்கள் தேடுவதென்ன?" என்ற பொருளைக் கொண்டுள்ளது. நீங்கள் கடவுளைத் தான் நாடுகிறீர்களா? அதுதான் உங்கள் தேடலா? உங்கள் இதயத்தின் ஆழத்திலிருக்கும் எதிர்பார்ப்புகளுக்கு என்னைக் குறித்த ஏதேனும் ஒன்று, பதிலாக அமைந்துள்ளதா? என்று இயேசு யோவானின் சீடர்களிடம் கேட்பதுபோல் உள்ளது. ஒரு சாதாரண சூழலில் யாரையாவதுப் பார்த்து இந்த கேள்வியைக் கேட்டால், எதைத் தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதாகத்தான் அர்த்தம் இருக்கும். ஆனால் இங்கோ இது ஒரு புதிய தேடலை பற்றியதாக, அதாவது, ஆன்மீகத் தேடலைக் குறிப்பதாக உள்ளது.

மனிதன் தன் வாழ்வில் எப்போதும் எதையாவது தேடிக்கொண்டேயிருக்கிறான், அதில் அவன் திருப்தியடைவதில்லை என்பதற்கு எவரும் விதிவிலக்கல்ல. எல்லாரிடமும் தேடல் என்பது குடிகொண்டிருக்கிறது. ஒன்றைக் குறித்த தேடலில் நாம் திறந்த மனதுடன் இருந்தால்தான் உண்மையை கண்டுகொள்ள முடியும். முன்சார்பு எண்ணங்களுடன் நாம் தேடும்போது உண்மை அங்கு எட்டாக்கனியாகி விடுகிறது. பெரும்பாலான தேடல்களில் நமக்கு சார்பான ஒரு முடிவைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம், அப்படி அது அமையவில்லையெனில் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்.

இங்கோ, ஒரு கேள்வியிலேயே தாங்கள் தேடியதைக் கண்டுகொள்கிறார்கள் இயேசுவின் முதல் சீடர்கள். தாங்கள் தேடிக் கிடைத்ததைப் பதிலாகவும் தருகிறார்கள். என்ன தேடுகிறீர்கள் என்ற கேள்விக்கு சீடர்களின் பதில் வித்தியாசமாக இருந்தாலும், அவர்கள் இயேசுவை அழைக்கும் முறையிலேயே விடை கிடைத்துவிடுகிறது. எபிரேய மொழியில் "போதகர்" என்று பொருள்படுகின்ற "ரபி" என்னும் வார்த்தையைக் கொண்டு இந்த சீடர்கள் இயேசுவை அழைக்கிறார்கள். இது, இயேசுவை தங்களுடைய புதிய போதகராக இவர்கள் ஏற்றுக்கொண்டதற்கு வெளிப்படையான ஒப்புதலாக உள்ளது. அதாவது அவரை போதகராக, தாங்கள் பின்பற்றவேண்டிய தலைவராக கண்டுகொள்கிறார்கள். அதனால்தான் அவரோடு வாழும் அனுபவத்தைப் பெற, "நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்று அவர்கள் இயேசுவைக் கேட்கிறார்கள். எவ்வாறு, இயேசுவின் கேள்விக்கு சீடர்கள் நேரடியாக பதிலளிக்கவில்லையோ அதேபோல், இயேசுவும் அவர்களின் கேள்விக்கு, நேரிடையாக பதில் கூறாமல், "வந்து பாருங்கள்" என்று ஓர் அழைப்பை விடுக்கிறார். சீடர்களின் கேள்விகளுக்கு இயேசு அளித்த பதில் இறையியல் சாயல் கொண்டதாக உள்ளது. சீடர்களும் நேராக வந்து, தங்கள் கேள்விக்கான பதிலை  கண்டு கொள்கிறார்கள். அது இயேசுவின் கேள்விக்கான பதிலாகவும் இருக்கிறது. விசுவாசத்தின் கண்களைக் கொண்டு தன்னை பார்ப்பதற்காக இயேசு தருகின்ற அழைப்பு இது. வந்து பாருங்கள் என்று இயேசு அவர்களிடம் சொன்னதும், அவர்கள் அவரைப் பின்தொடர்ந்து செல்கின்றார்கள். ஆகவே, இயேசுவின் சீடராக இருப்பதற்கான முதன்மையான தகுதியே அவரைப் பின்தொடர்ந்து செல்வதுதான். இயேசுவின் சீடர் என்பவர் இயேசுவைப் பின்தொடர்வதோடு மட்டுமல்லாமல், அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். தன்னுடைய சீடர்கள் தன்னை முற்றிலுமாக அறிந்திருக்கவேண்டும் என்பதற்குத்தான் இயேசு வந்து பாருங்கள் என்று சொல்கின்றார்.

"வந்து பாருங்கள்" என்று இயேசு சொல்கின்ற வார்த்தையில் நிறைய அர்த்தங்கள் இருக்கின்றன. இன்றைக்கு ஒரு மனிதரிடம் நேரடியாகத் தொடர்பு கொள்ளாமல், பேசாமல் "இவர் இப்படித்தான்" என்ற ஒரு தவறான முடிவுக்கு நாம் வந்துவிடுகின்றோம்.

யோவான் நற்செய்தியில் பிலிப்பு நத்தனியேலிடம் இயேசுவைக் குறித்து சொல்கின்றபோது தொடக்கத்தில் அவர், "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமோ?" என்றுதான் சொல்கின்றார். பின்னர்தான் அவர் இயேசுவைச் சந்தித்து, அவர் யாரென அறிந்துகொள்கின்றார். முதல் சந்திப்பிலேயே, “ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” (யோவா 1: 45-46) என்று அறிக்கையிடுகிறார். இயேசுவின் சீடர் என்பவர் அவரைக் குறித்து முழுமையாக அறிந்துகொள்ளவேண்டுமானால், மற்றவர்களின் அனுபவமல்ல, அவர்களுடைய சொந்த அனுபவம்தான் அவர்களுக்கு உதவும் என்பதையும்  நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இயேசுவோடு தங்கி அவரை மெசியா எனக் கண்டுகொண்ட சீடர் அந்திரேயா செய்த செயல் மிகவும் பாராட்டுக்குரியதாக இருக்கிறது. ஏனெனில், அவர்தான் திருஅவையின் முதல் திருத்தந்தையை, திருத்தூதர்களின் தலைவரை ஆண்டவர் இயேசுவிடம் கூட்டி வருகின்றார்.

எப்படி விண்மீன் இடையர்களையும், மூன்று ஞானிகளையும் ஆண்டவர் இயேசுவிடம் அழைத்து வந்ததோ, அந்திரேயா எப்படி பேதுருவை இயேசுவிடம் அழைத்து வந்தாரோ, அதுபோல் நாமும் மற்றவர்களை இயேசுவிடம் அழைத்து வரவேண்டும். அப்போதுதான் சீடத்துவ வாழ்வானது முழுமை பெறும். மேலும், தூய அந்திரேயாவைப் போல நாமும் கிறிஸ்துவில் நாம் கொண்டுள்ள விசுவாசத்தை பிறரோடு பகிர்ந்து கொள்ளவேண்டும்.

தூய யோவான் அவருடைய நற்செய்தியில் மூன்று முறை அந்திரேயாவைப்பற்றிப் பேசுகிறார். ஒவ்வொருமுறையும் அந்திரேயா யாரையாவது இயேசுவிடம் அழைத்து வருகிறார்.

தம் சகோதரர் பேதுருவை அவர் இயேசுவிடம் அழைத்துவருகிறார். முடிவாக இயேசு பேதுரு என்னும் பாறையின்மீது தமது திருஅவையைக் கட்டி எழுப்புகிறார்.

சில காலம் தாழ்த்தி அந்திரேயா ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் வைத்திருக்கும் ஒரு சிறுவனை இயேசுவிடம் கூட்டி வருகிறார் (யோவா 6:8). இயேசு அந்த அப்பங்களைப் பலுகச் செய்து பல ஆயிரம் பேருக்கு உணவளிக்கிறார்.

இறுதியாக அந்திரேயா சில கிரேக்க மக்களை இயேசுவிடம் கூட்டி வருகிறார் (யோவா 12:20–22).

"இதோ, கடவுளின் ஆட்டுக்குட்டி" என்று திருமுழுக்கு யோவான் அறிக்கையிட்டதைக் கேட்ட சீடர்கள், இயேசுவை தங்கள் போதகர் என்று அறிக்கையிட்டது மட்டுமல்ல, அவர் இடத்திற்குச் சென்று அவருடன் தங்கியதால், ‘மெசியாவைக் கண்டுகொள்கின்றனர்’ (யோவான் 1:41). அந்திரேயா, தான் பெற்ற இன்பத்தை, தன் சகோதரரும் பெறவேண்டும் என்று, சீமோன் பேதுருவை இயேசுவிடம் அழைத்துவருகிறார். பேதுருவும் இயேசுவும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனதால், காலத்தால் அழியாத ஒரு வரலாறு உருவானது. இயேசுவும், பேதுருவும் இணைந்து படைத்த அந்த வரலாறு, இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறது. அந்த வரலாறு உருவாக காரணமாக இருந்தவர், அந்திரேயா.

இங்கு இயேசுவின் அறிமுகம், வழியோரம் நடைபெறுகிறது. கோவில்களிலும், புனிதத்தலங்களிலும் இறைவன் அறிமுகமாவதைவிட, சாதாரண, வாழ்வுச் சூழல்களில் அவர் அறிமுகம் ஆன நிகழ்வுகளே, மனித வரலாற்றிலும், விவிலியத்திலும் அதிகம் உள்ளன. இதை உணர்வது, நம்மை இன்னும் கூடுதலான விழிப்புணர்வுடன் வாழ உதவும்.

வழியோரம் அறிமுகமான இயேசுவை வழியோரமாகவே விட்டுவிட்டு அந்தச் சீடர்கள் தங்கள் வழியில் செல்லவில்லை. அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தனர். அதுமட்டுமல்ல, அவரை மெசியா எனக் கண்டுகொண்டனர். இறைவனைத் தேடுவதும், இறைவனுடன் தங்குவதும் சீடர்களுக்கு மிகவும் தேவையான விடயங்கள். நாம் எப்போது இறைவனை அதிகம் அதிகமாகத் தேடுகிறோம்?. பொதுவாகத் துன்பங்களும் தேவைகளும் வரும்போதுதான் மனிதர்கள் கடவுளை அதிகமாகத் தேடுவதுண்டு.

ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள் (ஏசாயா 55:6), என்கிறார் இறைவாக்கினர் எசாயா. நாமோ, தேவைகளைச் சந்திக்கவும், நமது ஆசைகளை நிறைவேற்றவும்தானா இறைவனை தேடிக்கொண்டிருக்கிறோம்? தேடுங்கள், கண்டடைவீர்கள் என்றார் இயேசு. ஆனால் அவரைத் தேட வேண்டிய இடத்தில் தேடவேண்டும். அப்போது தான் கண்டடைய முடியும். இல்லையெனில், வேறு யாரையோ கண்டடைவீர்கள், என்னையல்ல! என்கிறார் இயேசு! நாம் யாரைத் தேடுகிறோம்? எங்கே தேடுகிறோம்? எதற்காகத் தேடுகிறோம்? என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்போம்.

கடவுளைக் காண்பதற்குத் தேவையான உண்மையான, உள்ளார்ந்த கண்ணோட்டம் இல்லையெனில், அவர் குடியிருக்கும் இல்லத்திலும் அவரைக் காண இயலாமல் போகலாம். வெளிப்புறக் கொண்டாட்டங்களுக்கும், வெறுமையான வெளியடையாளங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்போது,  அவரைக் காணமுடியாமல் தடுமாறும் நிலை உருவாகலாம்.

இயேசுவோடு தங்கிய முதல் சீடர்கள் கண்டுகொண்டதையும், எம்மாவு செல்லும் வழியில் "எங்களோடு தங்கும்"(லூக்24:29) என்ற அழைப்பு அச்சீடர்களில் ஏற்படுத்திய மாற்றத்தையும், "சக்கேயு, இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்" (லூக் 19:5) என்ற இயேசுவின் வார்த்தை சக்கேயுவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும்  சிந்தித்துப் பார்ப்போம். இயேசுவோடு இணைந்திருப்பதால் கிட்டும் மாற்றங்களை இங்கு காண்கிறோம்.

உண்மையான உறவுகளில், நாம் 'எதை' தேடுகிறோம் என்பதைவிட, 'யாரை' தேடுகிறோம் என்பது முக்கியம். ஆகவே, என்ன தேடுகிறீர்கள் என்ற கேள்வியிலிருந்து, இயேசுவின், யாரை தேடுகிறீர்கள் என்ற கேள்வி நோக்கி அடுத்த வாரம் செல்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 January 2024, 12:42