தேடுதல்

திருக்குடும்ப பெருவிழா திருக்குடும்ப பெருவிழா  

திருக்குடும்ப விழா : திருக்குடும்பத்தை முன்மாதிரியாகக் கொள்வோம்!

கணவனின் சூழல் அறிந்து மனைவி விட்டுக்கொடுப்பதும், மனைவியின் சூழல் அறிந்து கணவன் விட்டுக்கொடுப்பதும் குடும்ப உறவை மேலும் மேலும் வலுப்படுத்தவே செய்யும்.
திருக்குடும்ப பெருவிழா : திருக்குடும்பத்தை முன்மாதிரியாகக் கொள்வோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. தொநூ 15: 1-6; 21: 1-3    II. எபி  11: 8,11-12,17-19    III.  லூக் 2: 22-40)

திருமணமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்த ஒரு தம்பதியினருக்குப் பொன்விழா கொண்டாடப்பட்டது. விழா சிறப்பாக நடந்துகொண்டிருந்தது. அந்நேரத்தில் மனைவி சற்றுநேரம் வெளியே சென்றிருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அந்தக் கணவரிடம், "நீங்கள் கடந்த 50 ஆண்டுகளில் ஒருநாள் கூட சண்டையே போடாமல் ஒற்றுமையாக இருந்திருக்கிறீர்கள். அதன் இரகசியம் என்னெவென்று எங்களுக்கும் சொல்லித் தாருங்கள் நாங்களும் அதனை அப்படியே பின்பற்றுகிறோம்” என்று கேட்டனர். அப்போது அவர் சொன்னார், “நானும் எனது மனைவியும் திருமணமான புதிதில் குதிரை சவாரி செய்ய ஆசைப்பட்டோம். ஆளுக்கொரு குதிரையில் சவாரி செய்து கொண்டிருந்தோம். அப்போது அந்தக் குதிரை எனது மனைவியை கீழே தள்ளியது. கோபத்துடன் எழுந்த எனது மனைவி, ‘இதுதான் உனக்கு முதல்முறை’ என்று அந்தக் குதிரையைத் திட்டிவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தாள். சிறிது தூரம் சென்றதும் அந்தக் குதிரை இரண்டாவது முறையாக அவளைக் கீழே தள்ளியது. அவள் மீண்டும் எழுந்து அந்தக் குதிரையை முறைத்து பார்த்து விட்டு, 'இது உனக்கு இரண்டாவது முறை’ என்று கூறினாள். சற்று தூரம் சென்றவுடன் மூன்றாவது முறையாக அந்தக் குதிரை அவளைக் கீழே தள்ளியது. மிகுந்த கோபம் கொண்டவளாய், ‘உனக்கு இது மூன்றாம் முறை’ என்று கூறிவிட்டுத் தனது கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து அக்குதிரையைச் சுட்டு விட்டாள்.  உடனே நான் பதறிபடி ஓடி  வந்து, "என்னம்மா இப்படி செய்திட்ட..! இப்ப நாம் குதிரைக்காரனுக்கு என்ன பதில் சொல்வது? இப்படி முட்டாள்தனமா பண்ணிட்டியே! நமக்குப் பெரும் தீங்கு நேரிடப் போகிறது" என்று கத்தினேன். அப்போது கோபமாக என்  மனைவி என்னை பார்த்து, ‘உங்களுக்கு இதுதான் முதல் முறை’ என்று கூறினாள். அன்று மூடிய என் வாயை இன்றுவரை நான் திறக்கவே இல்லை என்று கூறினார்.

ஒருமுறை திருமண திருப்பலியின் போது பங்குத்தந்தை, “கணவன், மனைவி இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எந்தவொரு செயலை செய்யும் போதும் நீ பாதி, நான் பாதி என்று சேர்ந்து ஒற்றுமையாக செய்தீர்கள் என்றால் உங்கள் குடும்பத்தில் சண்டைகளுக்கு இடம் இருக்காது” எனப் போதித்தார். திருமணம் முடிந்த மறுநாள் மனைவியின் முதல் சாப்பாட்டை சாப்பிவதற்குக் கணவன் மிகவும் மகிழ்ச்சியாக வந்தான். அப்போது மனைவி டி.வி பார்த்துக் கொண்டிருந்தார். சாப்பிடுவதற்கு என்ன இருக்கின்றது எனப் பாத்திரத்தை திறந்து பார்த்தபோது அவனுக்கு ஒரே அதிர்ச்சி! காரணம், அங்கே இட்லி இருந்தது, ஆனால் சட்டினி இல்லை; பூரி இருந்தது ஆனால் குருமா இல்லை; பொங்கல் இருந்தது ஆனால் சாம்பார் இல்லை; பிரட் இருந்தது ஆனால் ஜாம் இல்லை. உடனே மனைவியைக் கூப்பிட்டு, “என்ன இது, எல்லாம் பாதிபாதியாக இருக்கு, இதையெல்லாம் எப்படி சாப்பிடுவது” எனக் கேட்டான். உடனே மனைவி, “நேற்று திருப்பலியில் பங்குத்தந்தை என்ன சொன்னார் என்பது மறந்துவிட்டதா உங்களுக்கு? நேற்று பங்குத்தந்தை நீ பாதி; நான் பாதி என்று சொன்னாறே ஞாபகம் இல்லையா? நான் அனைத்திலும் பாதி பாதி செய்துவிட்டேன். உங்களுக்கான பாதியை நீங்கள் சீக்கிரம் செய்தால் நாம் சீக்கிரமாக சாப்பிடலாம்” என்றாள். கணவன் அப்படியே மயங்கி விழுந்து விட்டான்.

இன்று நமது அன்னையாம் திருஅவை திருக்குடும்ப பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இன்றைய வாசகங்கள் தாய் தந்தையர் இறைபக்தியுடைவர்களாக, ஒருவர்மீது ஒருவர் நிறைவான அன்பு கொண்டு வாழவேண்டும் என்று நம்மைப் பணிகின்றன. குடும்பம் ஒரு கோவில், குடும்பம் ஒரு கதம்பம், குடும்பம் ஒரு பல்கலைக்கழகம், குடும்பம் கடவுள் வாழும் இல்லம் என்றெல்லாம் நம் முன்னவர்கள் கூறியிருக்கின்றனர். ஒரு குடும்பத்தின் கணவனும் மனைவியும் எப்போதும் சதையும் நகமும் போல ஒன்றித்திருக்க வேண்டும் என்பதே இயற்கை. ‘ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்து வந்தார். அப்போது மனிதன், “இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்” என்றான். இதனால், கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்’ (காண்க தொநூ 2:22-24) என்று தொடக்க நூலில் வாசிக்கின்றோம். இதனைத்தான், ‘இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை, இதயத்தில் விழுந்தது திருமண மாலை. உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம், உலகம் நமக்கினி ஆனந்த கோலம் இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை’ என்று கவிஞர் கண்ணதாசன் எழுதுகின்றார். "என் உயிர் நீதானே உன் உயிர் நாந்தானே, நீ யாரோ இங்கு நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே" என்று பஞ்சு அருணாசலம் இதனை வேறுவடிவில் எழுதினார். ஆக, கணவனும் மனைவியும் ஓருயிர் ஈருடலென வாழவேண்டும் என்பதே இதன் உள்ளார்ந்த தத்துவம். அதற்காகத் துன்பங்களையே அவர்கள் சந்திக்கூடாது என்று அர்த்தமில்லை, மாறாக, குடும்ப வாழ்வில் துன்ப துயரங்கள் நேரிட்டாலும் அவற்றை இணைந்தே சந்தித்து வெற்றிபெற வேண்டும். ஆகவே, ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும், அதன் தலைவனும் தலைவியும் எப்படி செயல்பட வேண்டும், அவர்தம் குழந்தைகளை எப்படிப் பேணி வளர்க்க வேண்டும் என்பதற்கு அன்னை மரியா, யோசேப்பு, இயேசு வாழ்ந்த திருக்குடும்பம் மாபெரும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. ‘வாழ்வில் எத்தனை துயரங்கள் வந்தாலும் என்னைத் தாங்கிக்கொள்வதற்கு நீ இருக்கும்போது எனக்கென்ன கவலை’ என்றும், ‘எனக்கான சிறிய உலகத்தில் நான் அமைத்துக்கொண்ட மிகப்பெரிய உறவு நீ’ என்றும் மரியாவும் யோசேப்பும் ஒருவரையொருவர் பார்த்துக் கூறிக்கொள்ளும் அளவிற்கு அவர்களின் குடும்ப வாழ்வு சிறப்புப் பெற்றிருந்தது என்றால் அது மிகையாகாது. இப்போது, திருக்குடும்பத்தில் விளங்கிய மூன்று முக்கியமான பண்புகள் குறித்துப் பார்ப்போம்.

01. இறைநம்பிக்கை

ஒரு குடும்பத்தில் உள்ள தாய்தந்தையருக்கு இருக்க வேண்டிய அடிப்படையான முதல் பண்பு இறைநம்பிக்கை. இறைநம்பிக்கையிலிருந்தான் மற்ற எல்லா நற்பண்புகளும் ஊற்றெடுக்கின்றன. எந்தச் சூழ்நிலையிலும் இறைவன்மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கை உதிர்ந்துபோய்விடக்கூடாது. இந்த இறைநம்பிக்கை இல்லையெனில் குடும்ப வாழ்வு பாழ்ப்பட்டுப் போகும் என்பது திண்ணம். அன்னை மரியாவும் யோசேப்பும் இறைவன்மீது தாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருபோது பின்வாங்கவில்லை. ‘நம்மை இணைத்த இறைவன் பார்த்துக்கொள்வார், துணித்து முன்னேறுவோம்’ என்று அவ்விருவரும் முன்னேறிச் சென்றனர். “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” (காண்க. லூக் 1:38) என்று மரியா கூறியதும், யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டதும் (காண்க. மத் 1:24) இருவரும் இணைந்த நிலையில் இறைதிருவுளத்தை ஏற்க முன்வந்தனர் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.

02. அன்பு

இரண்டாவதாக, பெற்றோரிடம் துலங்கவேண்டியது அன்பு. ‘அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக!’ (காண்க எபே 3:17) என்ற பவுலடியாரின் வார்த்தைகள் திருக்குடும்பத்தில் இழையோடியதைப் பார்க்கின்றோம். அன்னை மரியாவும் யோசேப்பும் ஒருவர்மீது ஒருவர் கொண்டிருந்த அன்பு மிகவும் ஆழமானது. இருவரும் இறைவன்மீது எந்தளவுக்கு புனிதமான அன்பு கொண்டிருந்தனரோ அதே அளவுக்கு ஒருவர்மீது ஒருவர் அன்புகொண்டிருந்தனர். இதே அன்பை தங்கள் மகனும் மீட்பருமாகிய இயேசுவிடமும் கொண்டிருந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” (காண்க லூக் 2:47) என்ற மரியாவின் வார்த்தைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. மேலும் இயேசு இளைஞராக இருந்தபோது யோசேப்பு இறைபதம் சேர்ந்துவிட்டாலும், மரியா இறுதிவரை உறுதியான அன்பு கொண்டவராக இயேசுவின் கல்வாரி மரணம் வரை உடனிருந்தார். ஆகவே, ஒரு குடும்பத்தின் பெற்றோர் தங்கள்மீது மட்டுமல்ல இறுதிவரை தங்கள் பிள்ளைகள்மீதும் அன்புகொண்டு அவர்களுடன் உடன் பயணிக்க வேண்டும் என்ற படிப்பினையை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறே இயேசுவும் தன் பெற்றோர்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இயேசு சிலுவையில் தொங்கியபோது, “அம்மா, இவரே உம் மகன்”  பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” (காண்க யோவா 19:26) என்று கூறுவதன் உண்மையான அர்த்தம் என்ன? இறையியல் கருத்துப்படி அன்னை மரியா இவ்வுலக மக்கள் அனைவருக்கும் தாயாகக் கொடுக்கப்பட்டார் என்பது ஒருபக்கம் இருந்தாலும், மறுபுறம், தன் தாயைக் கவனித்துக்கொள்ளுமாறு அவரை தம் சீடர் யோவானிடம் அவர் ஒப்படைகின்றார் என்பதை இதலிருந்து நாம் அறிந்துகொள்கின்றோம். அதனால்தான், "இவரே உம் தாய்” என்று யோவானிடம் கூறியதும், அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்" (வச 27) என்று அந்நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

03. கீழ்ப்படிதல்

மூன்றாவதாக, ஒரு குடும்பத்தின் தாய்தந்தையரிடம் இருக்கவேண்டிய முக்கியமான பண்பு கீழ்ப்படிதல். இது அடிமைநிலையைக் குறிப்பதல்ல, மாறாக, ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு நடந்துகொள்ளும் செயலாக அமைகின்றது. இதில், ‘அவர் என்ன சொல்வது நான் என்ன செய்வது’ என்று கெளரவம் பார்த்தால் ஒன்றும் நடக்காது. யோசேப்பு, தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்கு அழைத்தபோது (லூக் 2:4) மரியா கீழ்ப்படிந்து நடந்துகொண்டார். அவ்வாறே, ஏரோது அரசன் குழந்தை இயேசுவைக் கொல்லத் தேடியபோது வானதூதரின் சொற்படி மரியாவை எகிப்திற்கும், பின்னர் அங்கிருந்து இஸ்ரயேல் நாட்டிற்கும், பிறகு கலிலேயப் பகுதிகளுக்கும், இறுதியாக நாசரேத்திற்கும் யோசேப்பு அழைத்தபோதெல்லாம், மரியா அவரின் அழைப்புகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்துகொண்டார் (காண்க மத் 2:13-15;19-23) எனப் பார்க்கின்றோம். மேலும் தாய்தந்தையிடமிருந்து பெற்றுக்கொண்ட இந்தக் கீழ்ப்படிதல் என்ற பண்பு இயேசுவின் வாழ்விலும் சிலுவை மரணம்வரை வெளிப்படுகிறது. ஆக, இந்த மூன்று முக்கிய பண்புகளையும் ஒவ்வொரு குடும்பத்தின் பெற்றோரும் கொண்டிருக்கும்போது அந்தக் குடும்பம் தெருக் குடும்பமாக அல்ல, மாறாக, திருக்குடும்பமாகத் திகழும் என்பது உறுதி. ஏனென்றால் இறைநம்பிக்கையிலிருந்து அன்பும், அன்பிலிருந்து கீழ்ப்படிதலும் ஊற்றெடுக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

ஓர் ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவளை அவளின் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறார் ஓர் ஏழை விவசாயி. வாகன வசதி இல்லாத காலம் அது. கடும் வெயிலின் காரணமாக, கர்ப்பிணியான அவரின் மனைவிக்குத் தாகம் எடுக்கிறது. ஆளில்லா நடைபாதையில் என் கணவர் தண்ணீர்க்கு எங்குச் செல்வார்! என்று அதை கணவனிடம் சொல்லாமலே வருகிறாள். ஆனால் மனைவிக்குத் தாகம் எடுக்கிறது என்பதை அவளின் கணவர் புரிந்துகொள்கிறார். அப்போது தூரத்தில் ஒரு முதியவர் இளநீர் வியாபாரம் செய்வதைப் பார்த்து அவளை அங்கு அழைத்துச் செல்கின்றார் அக்கணவர். அங்குச் சென்ற பிறகுதான் தெரிகிறது அவரிடம் ஓர் இளநீர் வாங்குவதற்கு மட்டுமே காசு இருக்கிறது என்று. “சரி, ஓர் இளநீர் மட்டும் தாருங்கள்” என்கிறார் அவர். இளநீரை வாங்கிய அவர் தன் மனைவியிடம் கொடுத்து, “எனக்கு வேண்டாம் நீ குடிமா!” என்கிறார். அதற்கு அவள், “எனக்கு மட்டும் என்றால் வேண்டாம் நீங்கள் குடித்துவிட்டு எனக்குத் தாருங்கள்” என்கிறாள். இறுதியில் எப்படியோ மனைவியை சமாதானம் செய்து குடிக்க வைக்கிறார் கணவர். ஆனால் அவளோ, ‘என் கணவர் எனக்காகக் காடு மலையெல்லாம் அலைந்து வேலை செய்பவர் அவர் குடிக்கட்டும்’ என்று நினைத்து குடிப்பது போல் பாசாங்கு செய்கிறாள். இப்போது இளநீர் கணவன் கைக்கு வருகிறது. அவரும் மனைவியை போலவே, ‘இவள் என்னை நம்பி வாழ வந்தவள். அதோடு என் குழந்தையை சுமக்கிறாள். இன்னும் கொஞ்சம் இவள் குடித்தால் என்ன!’ என்று எண்ணி அவரும் குடிப்பது போல் பாசாங்கு செய்கிறார். இவர்களின் காதலையும் விட்டுக்கொடுக்கும் குணத்தையும் பார்க்கும் முதியவர் அந்தப் பெண்ணிடம், “நீ என் பொண்ணு போல இருக்கிறாய். இந்த இளநீரை நீ குடிமா” என்று வேறொரு இளநீரை வெட்டித் தருகிறார். கணவனின் அனுமதியோடு அதை வாங்கி தாகம் தீர குடித்துவிட்டு அவன் மார்பில் மெதுவாக சாய்ந்துக்கொண்டு, ‘என் மேல் உனக்கு இவ்வளவு பாசமா’ என்பது போல் அவள் அவரைப் பார்க்கிறாள். அவள் கணவனும், ‘நீ என் மனைவி. என் உயிரின் பாதி’ என்ற அர்த்தத்துடன் அவளைநோக்கி கண் சிமிட்டுகிறார்.  

விட்டுக்கொடுக்கும்போது கெட்டுப்போகமாட்டோம் என்று நம் முன்னவர்கள் கூறியிருக்கின்றனர். கணவனின் சூழல் அறிந்து மனைவி விட்டுக்கொடுப்பதும், மனைவியின் சூழல் அறிந்து கணவன் விட்டுக்கொடுப்பதும் குடும்ப உறவை மேலும் மேலும் வலுப்படுத்தவே செய்யும். விட்டுக்கொடுப்பது என்பது பொருள்களில் மட்டுமல்ல, ஒருவருக்கொருவர்மீதான உறவிலும் இது மேலோங்கிக் காணப்படவேண்டும். ஒருமுறை, கத்தோலிக்கப் பெண் நீதிபதி ஒருவரை பங்குப்பணியின்போது நான் சந்திக்க நேர்ந்தது. அந்நேரத்தில், குடும்ப உறவுகள் குறித்து அவருடன் உரையாடினேன். அப்போது அவர், “Father, இன்றையக் காலச் சூழலில் இளம் தம்பதியினர்தான் அதிகளவில் விவகாரத்துக் கேட்டு நீதிமன்றத்துக்கு வருகின்றனர். திருமணமாகி இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள்தான் ஆகியிருக்கும். வாழ்வின் எதார்தத்தைப் புரிந்துகொள்ளாமையும், சவால்களைச் சந்திக்கப் போதுமான மனப்பக்குவம் இல்லாமையும், உள்ளம் சார்ந்த உறவுகளைவிட உடல் சார்ந்த உறவுகளை மட்டுமே அதிகம் விரும்புவதாலேயும் விரைவில் அவர்களின் வாழ்வு கசப்புக்குள்ளாகி விவகாரத்துக் கேட்டு நீதிமன்றத்திறகு வருகின்றனர் என்பதை என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அதேவேளையில், அவர்கள் திருக்குடும்பத்தினை எடுத்துக்காட்டாகக் கொண்டு வாழ்ந்தால் இந்த நிலை கட்டாயம் ஏற்படாது” என்றும் கூறினார். ஆம் அன்புக்குரியவர்களே, அவரின் இந்தக் கூற்றில் எவ்வளவு உண்மை பொதிந்திருக்கின்றது பாருங்கள்! ஆகவே, திருக்குடும்ப பெருவிவாழவைக்க கொண்டாடும் நாம் அக்குடும்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு வாழ்வதற்கான அருள்வரங்களை இந்நாளில் இறைவனிடம் இறைஞ்சுவோம். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 December 2023, 16:46