தேடுதல்

தாவீதின் வெற்றியைக் கொண்டாடும் மக்கள் தாவீதின் வெற்றியைக் கொண்டாடும் மக்கள்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 48-2, எதிரிகளைச் சிதறடித்த இறைவன்!

தாவீது அரசரைப் போன்று நாமும் மாசற்றவர்களாகக் கடவுளை மட்டுமே உண்மை கேடையமாகப் பற்றிக்கொண்டு அவரது அன்பில் நீடித்து நிலைத்து வாழ்வோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 48-2, எதிரிகளைச் சிதறடித்த இறைவன்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர் ஓர் ஆற்றங்கரையைக் கடக்க வேண்டி இருந்தது. அந்நேரத்தில், அரசவை ஜோசியர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்” என்று சொன்னார். கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி விழிப்பாகிவிடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி கிடைக்கும். ஆனால், ஜோசியர் சொன்ன பின் கிருஷ்ண தேவராயருக்கு சந்தேகம் வந்துவிட்டது. உடனே தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார் அவர். தெனாலிராமன் ஜோசியரை அழைத்தார். “எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டான். அதற்கு ஜோசியர், “இன்னும் இருபது ஆண்டுகள் நான் உயிரோடு வாழ்வேன்” என்றார். தெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா?” என்று கேட்டார். ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. உடனே அவர் “முடியும்.. முடியும்” என்று அலறினார். “அவ்வளவுதான் மன்னா இவரின் ஜோசியம்! உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும். ஆகவே, உங்கள்மீது நம்பிக்கை வைத்து செல்லுங்கள் மன்னா, உங்களுக்கு வெற்றி நிச்சயம் என்று கூறி புன்னகைத்தார் தெனாலிராமன். சற்றும் தாமதியாமல் கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரிகளை போர்க்களத்தில் சந்தித்தார். அவரின் போர்த்திறமையைக் கண்டு எதிரிகள் ஆளுக்கொரு பக்கமாக அஞ்சிநடுங்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இறுதியில் வெற்றியுடன் அரண்மனைத் திரும்பினார் அரசர் கிருஷ்ண தேவராயர்.

கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'கடவுளே அனைத்திற்கும் மேலானவர்!' என்ற தலைப்பில் 48-வது திருப்பாடலில் முதல் மூன்று இறைவார்த்தைகளை நமது தியானச் சிந்தனைகளுக்கு எடுத்துக்கொண்டோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 4 முதல் 8 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது அமைந்த மனதுடன் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். இதோ! அரசர் அனைவரும் ஒன்று கூடினர்; அணிவகுத்து ஒன்றாக வந்தனர்; அந்தோ! பார்த்ததும் திகைத்தனர்; திகிலடைந்து ஓட்டம் பிடித்தனர். அங்கே அச்சம் அவர்களை ஆட்கொண்டது; பேறுகாலப் பெண்போல் அவர்கள் துடிதுடித்தனர். தர்சீசுக் கப்பல்களைக் கீழைக் காற்றினால் நீர் தகர்த்தெறிகின்றீர். கேள்விப்பட்டவாறே நேரில் யாம் கண்டோம்; படைகளின் ஆண்டவரது நகரில், ஆம், கடவுளின் நகரினில் கண்டோம்; கடவுள் அந்நகரை எந்நாளும் நிலைத்திருக்கச் செய்வார். (வச. 4-8)

இன்று நாம் தியானிக்கும் இறைவார்த்தைகளில் முதலாவதாக, "இதோ! அரசர் அனைவரும் ஒன்று கூடினர்; அணிவகுத்து ஒன்றாக வந்தனர்; அந்தோ! பார்த்ததும் திகைத்தனர்; திகிலடைந்து ஓட்டம் பிடித்தனர். அங்கே அச்சம் அவர்களை ஆட்கொண்டது; பேறுகாலப் பெண்போல் அவர்கள் துடிதுடித்தனர்" என்கின்றார் தாவீது அரசர். இந்த இறைவார்த்தைகள் கடவுளின் பெருந்துணையுடன் தாவீது எப்படி தனது எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றிகண்டார் என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றது. இங்கே 'அவர்கள் அணிவகுத்து வந்தனர்' என்ற வார்த்தைகள் தாவீது என்ற ஒன்றை அரசரை வீழ்ந்த முடியாமல் அவரது எதிரிகள் அனைவரும் ஒன்றுதிரண்டு வந்ததை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. இன்றைய உலகில் இறையன்பையும், மனித உரிமைகளையும், மனித மாண்பையும், அமைதியையும் நிலைநிறுத்தப் போராடும் கிறிஸ்தவத்திற்கு எதிராக எதிரிகள் ஒன்றுதிரண்டு வந்து எப்படியெல்லாம் நம்மை வீழ்ந்த நினைக்கின்றனர் என்பதை இங்கே நம்மால் ஒப்பிட்டுப் பார்க்க முடிகின்றது. அதற்கடுத்து, 'திகைத்தனர்' என்கின்றார் என்கின்றார் தாவீது. பொதுவாக, திகைப்பு என்பது யாருக்கு வரும்? தவறு செய்பவர்களும், தீவினையை விதைப்பவர்களும், கடவுளை ஒரு பொருட்டாகக் கருத்தாதவர்களும் பெரும்தோல்வியைத் தழுவும்போது இந்தத் திகைப்பை அடைவர் என்பது உறுதி அன்றோ!. தாவீது கோலியாத்தை வென்றபோது பிலிஸ்தியர்கள் இத்தகைய திகைப்பை அடைந்தனர் என்பதை நம் நினைவுக்குக் கொண்டு வருவோம்.

அடுத்து, ‘திகிலடைந்து ஓட்டம்பிடித்தனர்’ என்கின்றார் தாவீது. திகைப்பைடவிட திகில் இன்னும் ஆபத்தானது மட்டுமன்றி பேரச்சம் விளைவிக்கக் கூடியது என்பதை நாம் அறிவோம். அப்படியென்றால், இத்தகைய திகைப்பையும் திகிலையும் ஏற்படுத்தக்கூடிய அளவிற்குத் தாவீதின் போர்த்திறமையும், வீரமும், விவேகமும், விளங்கிற்று என்பதும் திண்ணமாய் வெளிப்படுகிறது. பொதுவாக ஒரு மனிதரை அச்சம் ஆட்கொள்ளும்போது,  அவரது இதயத் துடிப்பு மிகவும் அதிகமாக இருக்கும், அதுவே சில நேரங்களில் அவருக்கு மரணத்தை ஏற்படுத்திவிடும். இல்லையேல், பிறகு நாளாக நாளாக அம்மனிதரின் உடலுறுப்புகளை அந்தப் பயம் சிறிது சிறிதாக செயலிழக்கச் செய்துவிடும், இதனால், பல்வேறு நோய்கள் அவரை ஆட்கொண்டுவிடும். இறுதியில் அவர மரணத்தைத் தழுவீவிடுவார். இதன் காரணமாகவே, திகைத்தனர், திகில்கொண்டனர், அவர்களை அச்சம் ஆட்கொண்டது என்றெல்லாம் குறிப்பிடுகின்றார் தாவீது அரசர்.

இன்னும் குறிப்பாக, 'பேறுகாலப் பெண்போல் அவர்கள் துடிதுடித்தனர்' என்று எதிரிகள் பெற்றிருந்த கொடியநிலையை நமக்கு எடுத்துக்காட்டுகிறார் தாவீது. பேறுகாலப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை நாம் எல்லோருமே நன்கு அறிவோம். பெண்களுக்குப் பிரசவ வலி என்பது மிகவும் கொடியதாக இருக்கும். அவர்கள் அவற்றிலிருந்து தப்பிப்பது என்பது மறுபிறப்பு அடைவது போன்று என்று நாம் கூறக் கேள்விப்பட்டிருக்கின்றோம். பேறுகாலத்தின்போது எத்தனையோ பெண்கள் பிரசவ வலிதாங்க முடியாமல் இறந்துவிடுகின்றனர். சில நேரங்களில், பிள்ளையும் கூட இறந்துவிடுகிறது, மேலும் இந்தப் பிரசவ வலி என்பது சம்மந்தப்பட்ட தாயை மட்டும் பாதிப்பதில்லை, மாறாக, அவளுக்கு என்ன நேருமோ என்று மருத்துவமனைக்கு வெளியே பதைபதைப்புடன் காத்துகொண்டிருக்கும் அப்பெண்ணின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் கூட ஏற்படுகின்றது என்பதையும் நாம் பார்க்கின்றோம். பொதுவாக, 'ஒரு மனிதன் 45 டெல் யூனிட் அளவுதான் வலியைப் பொறுத்துக்கொள்ள முடியும், ஆனால் பிரசவத்தின்போது ஒவ்வொரு பெண்ணும் 57 டெல் யூனிட் வலியைப் பொறுத்துக்கொள்கின்றாள் என்றும், இது நமது உடலிலுள்ள 27 எலும்புகள் ஒரேநேரத்தில் உடைந்து ஏற்படும் வலிக்குச் சமம்' என்றும் கூறுகிறது      ஓர் ஆய்வு. ஆகவே, இந்தப் பேறுகால வேதனையின் உண்மைமுகத்தை அறிந்தவராக, இத்தகையதொரு நிலை தனது எதிரிகளுக்கு ஏற்பட்டபோது அவர்கள் பேறுகாலப் பெண்கள் போல துடிதுடித்துப் போனார்கள் என்று எடுத்துக்காட்டுகிறார் தாவீது.

இரண்டாவதாக, “தர்சீசுக் கப்பல்களைக் கீழைக் காற்றினால் நீர் தகர்த்தெறிகின்றீர். கேள்விப்பட்டவாறே நேரில் யாம் கண்டோம்; படைகளின் ஆண்டவரது நகரில், ஆம், கடவுளின் நகரினில் கண்டோம்; கடவுள் அந்நகரை எந்நாளும் நிலைத்திருக்கச் செய்வார்" என்கின்றார் தாவீது. இங்கே எருசலேமின்மீது படையெடுத்து வந்து அதனைத் தகர்த்தழிக்க நினைக்கும் எதிரிகளின் செயல் படுதோல்வியையே சந்திக்கும் என்பதன் அடையாளமாகத்தான் தாவீது அரசர் இவ்வாறு கூறுகின்றார். அதாவது, பெரும்புயல்காற்றினால் உடைபட்டு சிதறடிக்கப்படும் ஒரு கப்பலைபோல ஒன்றுதிரண்டு வரும் அவரின் எதிரிகள் சிதறுண்டு போவார்கள் என்பதைக் குறித்துக்காட்டவே இதனை உருவகமாகக் கூறுகின்றார் தாவீது. மேலும் தான் ஒரு மாசற்றவன் என்றும், தனக்கு எதிராகச் செயல்படும் தனது எதிரிகளான இறைப்பற்றில்லாதோரை கடவுள் எப்படி சிதறடிப்பார் என்றும் யோபுவும் கூட மிகவும் தெளிவாகக் கூறுகின்றார். "திகில் வெள்ளம்போல் அவர்களை அமிழ்த்தும்; சுழற்காற்று இரவில் அவர்களைத் தூக்கிச் செல்லும். கீழைக் காற்று அவர்களை அடித்துச் செல்லும்; அவர்களின் இடத்திலிருந்து அவர்களைப் பெயர்த்துச் செல்லும்; ஈவு இரக்கமின்றி அவர்களை விரட்டும்; அதன் பிடியிலிருந்து தலைதெறிக்க ஓடுவர். அவர்களைப் பார்த்து அது கைகொட்டி நகைக்கும்; அதன் இடத்திலிருந்து அவர்கள்மேல் சீறிவிழும்" (காண்க யோபு 27:20-23) என்ற யோபுவின் வார்த்தைகள் இங்குத் தாவீது கூறும் வார்த்தைகளுடன் ஒப்புநோக்கத்தக்கதாக உள்ளன. மேலும் "நீரே என் அரசர்; நீரே என் கடவுள்! யாக்கோபுக்கு வெற்றி அளிப்பவர் நீரே. எங்கள் பகைவர்களை உமது துணையால் தாக்கி வீழ்த்துவோம்; எங்களுக்கு எதிராய் எழுந்தோரை உமது பெயரால் மிதித்துப் போடுவோம். என் வில்லை நான் நம்புவதில்லை; என் வாள் என்னைக் காப்பாற்றுவதுமில்லை. நீரே பகைவரிடமிருந்து எங்களைக் காப்பாற்றினீர்; எங்களை வெறுப்போரை வெட்கமுறச் செய்தீர்" (காண்க திபா 44:4-7) என்று தாவீது எப்போதும் வெற்றியின் வேந்தராக விளங்கும் கடவுளை மட்டுமே உண்மையான அரசர் என்றும் தனது மீட்பர் என்றும் எடுத்துரைக்கின்றார். இறுதியாக, எருசலேம் என்னும் கடவுளின் திருநகர் எப்போதும் யாராலும் அழிக்க முடியாததாக நிலைத்திருக்கும் என்றும் ஆணித்தரமாக மொழிகின்றார்.

ஆகவே, தாவீது அரசரைப் போன்று நாமும் மாசற்றவர்களாகக் கடவுளை மட்டுமே உண்மை கேடையமாகப் பற்றிக்கொண்டு அவரது அன்பில் நீடித்து நிலைத்து வாழ்வோம். இந்நாளில் இவ்வருளை இறைவனிடம் கேட்டுப் பெறுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2023, 12:05