தேடுதல்

ஜோர்டான் கத்தோலிக்க ஆலயம் ஜோர்டான் கத்தோலிக்க ஆலயம் 

பாலஸ்தீனியர்களுடன் ஜோர்டான் கிறிஸ்தவர்களின் ஒருமைப்பாடு

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் நிறுத்தப்படுவதால் சேமிக்கப்படும் தொகை, காசாவின் குழந்தைகளின் நலனுக்காகச் செலவளிக்கப்படும் என்கின்றன ஜோர்டான் கிறிஸ்தவ சபைகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

போரால் மாண்டுகொண்டிருக்கும் பாலஸ்தீனிய மக்களுடன் ஒருமைப்பாட்டை அறிவிக்கும் நோக்கத்தில் இவ்வாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ஆடம்பரமின்றி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர் ஜோர்டான் நாட்டு கிறிஸ்தவர்கள்.

இயேசுவின் வருகையைக் கொண்டாட வழக்கமாக அலங்கரிக்கப்படும் மின்விளக்குகள் இந்த ஆண்டு ஏற்றப்படாது என உரைக்கும் ஜோர்டான் கிறிஸ்தவர்கள், தங்கள் எல்லைக்கருகே மடிந்துகொண்டிருக்கும் பாலஸ்தீனிய மக்களுடன் ஒருமைப்பாட்டை அறிவிக்கும் விதமாக இது இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.  

அக்டோபர் 8ஆம் தேதி காசா பகுதியில் துவங்கிய போரில் இதுவரை 18 ஆயிரம் பேர் இறந்துள்ள நிலையில், இந்த கிறிஸ்மஸ் திருநாளில் ஆடம்பர கொண்டாட்டங்கள், திருவிழாக் கடைகள், இசைக் கச்சேரிகள், கிறிஸ்மஸ் பரிசுகள் வழங்குதல் போன்றவை ஜோர்டான் கிறிஸ்தவர்களிடையே நிறுத்திவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

கிறிஸ்மஸ் ஆடம்பரக் கொண்டாட்டங்கள் நிறுத்தப்படுவதால் சேமிக்கப்படும் தொகை, காசா பகுதியிலுள்ள குழந்தைகளின் நலனுக்காகச் செலவளிக்கப்படும் என ஜோர்டான் கிறிஸ்தவ சபைகளின் அவை அறிவித்துள்ளது.

இஸ்ராயேல்-பாலஸ்தீனிய போரில் இதுவரை ஏறக்குறைய 20 இலட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறைகளுக்குப் பலியானவர்கள் குறித்து உலகம் அழுது கொண்டிருக்கும்போது, திருவிழாக் கொண்டாட்டங்கள் ஏற்புடையவை அல்ல என்று ஜோர்டானின் கிறிஸ்தவத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே ஐ.நா. பொதுஅவை, காசாவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்திருக்கும் வேளையில், அப்பகுதியில் மனிதாபிமான உதவிகளை எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்படவேண்டும் என தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது WHO என்னும் உலக நலவாழ்வு அமைப்பு.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 December 2023, 14:11