தேடுதல்

வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் உள்ள குடிலின் முன் திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் உள்ள குடிலின் முன் திருத்தந்தை பிரான்சிஸ்  (VATICAN MEDIA Divisione Foto)

நேர்காணல் – அமைதியை அருளும் கிறிஸ்து பிறப்பு

இக்கட்டான உலகின் இன்றைய சூழலில், பிறக்க இருக்கும் பாலன் இயேசு அமைதியை நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்புடன் நாம் காத்திருக்கின்றோம். அமைதியின் இளவரசராம் இயேசுவிடம் அமைதிக்காக வேண்டுவோம்
அமைதியை அருளும் கிறிஸ்து பிறப்பு - மேதகு ஆயர் அந்தோணிசாமி சவரிமுத்து

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஞானத்தின் உருவம் அமைதி, அன்பின் வடிவம் அமைதி, தெளிவின் வெளிப்பாடு அமைதி. அமைதியில்லா மனிதன் வாழ்வில் மகிழ்வும் இருக்காது மனத்தெளிவும் இருக்காது. உலகத்தில் வாழும் மனிதர்கள் அதிகமாக நேசிக்கக்கூடியது அமைதியும் நிம்மதியும் தான். இன்று நாம் வாழும் கால கட்டத்தில் போர், மோதல்கள், இயற்கைப் பேரிடர்கள், கால நிலை மாற்றங்கள் என அமைதியை சீர்குலைக்கும் ஏராளமான செயல்கள் நடைபெற்று வருகின்றன. உள்மன அமைதியின் ஆற்றலைக் கண்டறியும் ஒருவரால் மட்டுமே தன்னிலும் தன்னைச் சுற்றிலும் அமைதியினை ஏற்படுத்த முடியும்.

மிகவும் செல்வச்செழிப்புள்ள ஒருவரின் கைக்கடிகாரம் பொருள் சேகரித்து வைக்கும் ஒரு பெரிய அறையில் காணாமல் போனது. பணியாளர்கள் மற்றும் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறார் என அனைவரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டும் கடிகாரம் கையில் அகப்படவில்லை. இறுதியில் ஒரு சிறுவன் மட்டும் தனியாக சென்று அந்த பெரிய அறையின் கதவை அடைத்துக் கொண்டு, தேடினான் சிறிது நேரம் கழித்து கையில் கடிகாரத்துடன் வந்தான். எப்படி எங்களால் முடியாதது உன்னால் மட்டும் முடிந்தது என மற்றவர்கள் அவனிடத்தில் கேட்க, அவனோ நான் அறையின் கதவுகளை மூடிக்கொண்டேன். அந்த அமைதியில் கடிகாரத்தின் டிக் டிக் ஓசையைக் கேட்டு கடிகாரம் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டேன் என்றானாம் . ஆம் அன்புக்குரியவர்களே பிறரின் ஏளனமான வெற்று வார்த்தைகளும் அவதூறுகளும் வாழ்க்கையின் போராட்டச் சூழ்நிலைகளும் நம்மைச் சுற்றிலும் சலசலப்பை ஏற்படுத்தலாம். ஆனால் அமைதியும் நிதானமும் நம்மில் குடிகொள்ளும் போது நமது இலக்கும் அதற்கான வெற்றிப்பாதையும் நம் கண்முன் தெரியும். இக்கட்டான உலகின் சூழலில் பிறக்க இருக்கும் பாலன் இயேசு அமைதியை நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்புடன் நாம் காத்திருக்கின்றோம். அமைதியின் இளவரசராம் இயேசுவிடம் அமைதிக்காக வேண்டுவோம் என்ற திருத்தந்தையின் வார்த்தைகளுக்கு ஏற்ப, அருள்வேண்ட இன்றைய நம் நேர்காணல் வழியாக கிறிஸ்து பிறப்பு செய்தியை நமக்கு வழங்க இருப்பவர் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோணிசாமி சவரிமுத்து.

1960ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி பிறந்த ஆயர் அந்தோணிசாமி அவர்கள், இளம்குருத்துவப் பயிற்சியை மதுரையிலும், மெய்யியல் மற்றும் இறையியலை பெங்களூருவிலும் பயின்றார். 1987ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி பாளையங்கோட்டை மறைமாவட்ட அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்டு, பிரான்ஸின் பாரிஸ் மாநகரில், திருஅவை சட்டங்களில் முனைவர் பட்டம் பெற்றார். மதுரை, மற்றும் பெங்களூரு அருள்பணித்துவ பயிற்சி இல்லங்களில் விரிவுரையாளர் மற்றும் அதிபராகவும் பணியாற்றி 2004ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை, பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளராகவும் பணியாற்றியுள்ளார். 2019ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் நாள் முதல் பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் ஆயராக திறம்பட பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆயர் அவர்களை அமைதியை அருளும் கிறிஸ்து பிறப்பு செய்தியை வழங்க அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 December 2023, 12:49