தேடுதல்

புனிதர் ஸ்தனிஸ்லாஸ் கோட்ஸ்கா புனிதர் ஸ்தனிஸ்லாஸ் கோட்ஸ்கா  

இவ்வாரப் புனிதர்கள் – நவம்பர் மூன்றாம் வார புனிதர்கள்

புனிதர்கள் ஃபிரான்செஸ் சேவியர் கேப்ரினி, ஸ்தனிஸ்லாஸ் கோஸ்ட்கா, பெரிய ஆல்பர்ட், ஸ்காட்லாந்து நாட்டின் மார்கரெட், ஹங்கேரியின் எலிசபெத் ஆகியோரின் வாழ்க்கைச் சுருக்கம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, வரும் வாரத்தில் திருஅவையில் நாம் சிறப்பிக்கவிருக்கும் சில முக்கியப் புனிதர்களின் வாழ்க்கைச் சுருக்கத்தை இன்றைய நிகழ்ச்சியில் நாம் காண்போம். இன்று,  புனிதர்கள் ஃபிரான்செஸ் சேவியர் கேப்ரினி, ஸ்தனிஸ்லாஸ் கோஸ்ட்கா,  பெரிய ஆல்பர்ட், ஸ்காட்லாந்து நாட்டின் மார்கரெட், ஹங்கேரியின் எலிசபெத் ஆகியோரின் வாழ்க்கைச் சுருக்கத்தை இன்று காண்போம்.

நவம்பர் 13 - புனிதர் ஃபிரான்செஸ் சேவியர் கேப்ரினி

“ஃபிரான்செஸ் சேவியர் கேப்ரினி” (Frances Xavier Cabrini) என்றும், “அன்னை கேப்ரினி”  என்றும் அழைக்கப்படும் இப்புனிதர், ஓர் இத்தாலிய-அமெரிக்க அருள்சகோதரி. "இயேசுவின் திருஇதயத்தின் மறைப்பணி சகோதரிகள்" (Missionary Sisters of the Sacred Heart of Jesus) என்ற துறவு சபையை நிறுவியவர் இவர். இச்சபையானது இத்தாலியிலிருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து வந்து குடியேறியவர்களுக்கு உதவுவதற்காக துவக்கப்பட்டது. வட இத்தாலியின் லோதியில் 1850ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி  பிறந்த இவர், பதின்மூன்று குழந்தைகளில் கடைக்குட்டி ஆவார். பதின்மூன்று பேரில் ஒன்பது பேர் வளர் இளம் பருவத்திலேயே இறந்து போயினர். இரண்டு மாத குறைப் பிரசவத்தில் பிறந்த கேப்ரினி, மிகவும் சிறிய உருவம் கொண்டவராகவும் பலவீனராகவும் காணப்பட்டார். வாழ்நாள் முழுதும் நோய்த்தொற்றுள்ளவராகவே வாழ்ந்தார். இவர், கொடோஞ்ஞோ என்னுமிடத்திலுள்ள இறைபராமரிப்பு அனாதை இல்லத்தின் தலைமை ஆசிரியை ஆனார். அங்கே கற்பிக்கும் பணியாற்றிய இவர், அங்கேயே ஆன்மீக வாழ்வு வாழ்வதற்காக ஒரு சிறு சமூகத்தை உருவாக்கினார். 1877ஆம் ஆண்டு, தமது சமூகத்திற்குரிய வாக்குறுதிகளை ஏற்ற கேப்ரினி, இயேசு சபை புனிதரும் மறை பரப்புப் பணிகளின் பாதுகாவலருமான ஃபிரான்சிஸ் சேவியரை கௌரவிக்கும் விதமாக தம் பெயருடன் சேவியர் என்ற பெயரை இணைத்துக் கொண்டார்.

கேப்ரினி, தனது முப்பதாவது வயதிலேயே பல பொறுப்புகளை ஏற்றிருந்தார். நோயாளிகள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், வழிதவறி அலைந்த இளைஞர்கள் ஆகியோருக்கு சேவைப் புரிந்துள்ளார். விதவைப் பெண்களை ஒன்று சேர்த்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் வாழ்விற்கு வழிகாட்டியுள்ளார்.

இவ்வாறு பல பணிகளை செய்த இவர் நீண்ட நாள் தன் மனதில் இருந்த, சபை ஒன்றை நிறுவும் கனவை நிறைவேற்ற முடிவு செய்தார். 1880ஆம் ஆண்டு, தம்முடன் ஆறு அருட்சகோதரியரையும் இணைத்துக்கொண்டு, "இயேசுவின் திருஇதயத்தின் மறைப்பணி சகோதரிகள்" (Missionary Sisters of the Sacred Heart of Jesus) என்றொரு சபையை நிறுவினார். இவரே அச்சபையின் முதல் சபைத் தலைவியாக பொறுப்பேற்று வழிநடத்தினார்.

கி.பி. 1877ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், சீன நாட்டில் மறைப்பணி சகோதரிகளின் இல்லம் ஒன்றினை தொடங்கிட திருத்தந்தை ஒன்பதாம் பயசின் அனுமதி வேண்டிச் சென்றார். ஆனால், திருத்தந்தையோ சீன நாட்டுக்கு பதிலாக அவரை அமெரிக்கா செல்ல அறிவுறுத்தினார். இத்தாலியிலிருந்து புலம்பெயர்ந்து அமெரிக்க நாடுகளுக்கு செல்லும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் அவர்களுக்கு வழிகாட்டவும் அங்கே இவரது சேவைகள் தேவைப்படும் என்று இயம்பிய திருத்தந்தை அவர்கள், கிழக்கேயல்ல, மாறாக மேற்கே செல் என்று அறிவுரை கூறினார்.

திருத்தந்தையின் அறிவுரைப்படி தமது சக அருட்சகோதரிகள் ஆறு பேருடன் அமெரிக்கா கிளம்பிய கேப்ரினி, கி.பி. 1889ஆம் ஆண்டு, மார்ச் 31ஆம் நாள், நியூ யார்க் நகர் சென்றடைந்தார்.

நியூ யார்க் நகரில் "கொலம்பஸ் மருத்துவமனை", "இத்தாலியன் மருத்துவமனை" ஆகிய இரண்டு மருத்துவமனைகளை நிறுவினார். 1980களில் அவையிரண்டு மருத்துவமனைகளும் "காப்ரினி மருத்துவ மையம்" என்ற பெயரில் ஒன்றிணைக்கப்பட்டன. புனிதர் கேப்ரினி அமெரிக்காவின் பல நகரங்களிலும் தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் நாடுகளிலுமாக மொத்தம் 67 நிறுவனங்களை நிறுவினார்.

67 வயதான கேப்ரினி, உள்ளூர் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் இனிப்புகள் தயார் செய்யும் பணியிலிருந்தபோது 1917ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் 22ஆம் நாளன்று, சிக்காகோவிலுள்ள கொலம்பஸ் மருத்துவமனையில் மரணமடைந்தார். திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் அவர்கள் இவரை 1946ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி புனிதராக அறிவித்தார்.

நவம்பர் 13 - புனிதர் ஸ்தனிஸ்லாஸ் கோட்ஸ்கா

1550ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி போலந்தில் பிறந்த புனிதர் ஸ்தனிஸ்லாஸ் கோட்ஸ்கா, இயேசு சபை கல்வி நிலையத்தில் கல்வி பயில்வதற்காக 1564ஆம் ஆண்டு தமது சகோதரருடன் அனுப்பப்பட்டார். அப்போது அவரின் வயது 14. தமது அன்பான அணுகுமுறை மட்டுமல்லாது, உற்சாக குணம் மற்றும் மத ஈடுபாடு ஆகியவற்றால் தமது மூன்றாண்டு கால மாணவ பருவத்தில், பிற மாணவர்களின் கவனத்தைக் கவரக் கூடியவராக திகழ்ந்தார்.

தனது இளம்வயதிலேயே இயேசு தன்னுடன் உரையாடுவதை உணர்ந்தார். இயேசு தன்னை துறவற வாழ்வை வாழ அழைப்பதாக உணர்ந்ததால் துறவற இல்லம் ஒன்றை நாடிச் சென்றார். இயேசுவின் குரலுக்கு மட்டுமே ஸ்தனிஸ்லாஸ் செவிமடுத்தார்.

இவர் 14ம் வயதில் முதன்முறையாக பெற்ற திருக்காட்சியில், பிச்சைக்காரனைப்போல் உடை உடுத்தி, வியன்னாவை விட்டு ஆக்ஸ்பூர்க் வருமாறு கூறிய குரலைக் கேட்டார். அக்குரல் கூறியதை செய்ததன் பேரில் டில்லிஞ்சன் வந்து சேர்ந்தார் ஸ்தனிஸ்லாஸ். ஒரு மாதகாலம் அங்கேயே தங்கியிருந்த அவர், அங்கிருந்து உரோமில் உள்ள இயேசு சபையின் தூய அந்திரேயா புகுமுக துறவு மடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பயண களைப்பால் நலிந்திருந்த அவரை, இயேசு சபையின் தலைவராக இருந்த புனித ஃபிரான்சிஸ் போர்ஜியா அவர்கள், மடத்தில் சேர்த்துக்கொள்ள நீண்ட நாட்கள் தாமதித்தார். பின்னர் அவர், ஸ்தனிஸ்லாசை அவரது 17ஆம் பிறந்த நாளன்று தன் சபையில் நவத்துறவகத்தில் சேர்த்தார்.

ஸ்தனிஸ்லாஸ் மிகக் குறைந்த நாட்களிலேயே புகுமுக குரு மாணவர்களாலும், குருக்களாலும் கவரப்பட்டார், அன்பு செய்யப்பட்டார். இவர் எப்போதும் மகிழ்ச்சியானவராகவும், உடனடியாக எதையும் எதிர்பாராமல் தேவையில் இருப்போருக்கு குறிப்பறிந்து உதவி செய்பவராகவும் இருந்தார். தூய இலாரன்சின் நினைவுத் திருநாள் மாலையில், அதாவது ஆகஸ்ட் 10ஆம் நாளன்று கடுமையான காய்ச்சலால் தாக்குண்டார். தமது மரணம் சமீபித்திருப்பதாகவும், அது என்று நிகழும் என்றும் முன்னறிவித்தார். அவரைத் தாக்கிய காய்ச்சலை குணப்படுத்தமுடியாமல் அவர் முன்னறிவித்த நாளிலேயே ஆகஸ்ட் 15 (1568ஆம் ஆண்டு) அன்று இறந்து போனார். இவர் இறப்பதற்கு முந்தின நாள், நாளை நான் இறந்துவிடுவேன் என்பதை தன்னுடன் இருந்தவர்களை நோக்கிக் கூறினார். அவர் சொன்னவாறே இறைவனடி சேர்ந்தார். இவரை 1726ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் அவர்கள், புனிதராக அறிவித்தார்.

நவம்பர் 15 - புனிதர் பெரிய ஆல்பர்ட்

புனிதர் பெரிய ஆல்பர்ட் என்று அழைக்கப்படும் இவர், ஜெர்மானிய டொமினிக்கன் சபைத் துறவியும் ஆயரும் ஆவார். உலக அளவில் மாபெரும் மேதையாக அறியப்பட்ட இவரின் ஆர்வம் அறிவியல், மெய்யியல், இறையியல் என பரந்து விரிந்ததாய் இருந்தது. “ஆர்சனிக்” (Arsenic) என்ற இரசாயன தனிமத்தை கண்டுபிடித்தவர் இவரேயாவார். அத்துடன் “சில்வர் நைட்ரேட்” (Silver nitrate) உள்ளிட்ட ஒளியுணர் கனிம கலவையையும் ஆராய்ந்தவர் இவர்.

கிறிஸ்தவ நம்பிக்கை பகுத்தறிவுக்கு எதிரானது அல்ல என்றும், இவ்வுலகப் படைப்பானது, இறைவனால் எழுதப்பட்ட ஒரு புத்தகமாக நோக்கப்பட்டு, வெவ்வேறு அறிவியல்களால் அதனதன் வகையில் வாசிக்கப்பட்டு புரிந்துகொள்ளப்பட முடியும் என்பதனை இப்புனிதர் வெளிப்படுத்தினார். அரிஸ்டாட்டில் குறித்த இப்புனிதரின் எழுத்துக்கள் மெய்யியல் மற்றும் இறையியல் என்னும் அறிவியல்களுக்கிடையேயான வேறுபாடுகளைக் காட்டுகின்றது.

ஆல்பர்ட், 1280ஆம் ஆண்டில் இறந்தபோது இவருக்கு 80 வயது எனக் கூறப்படுவதால், இவர் 1200க்கு முன்பே பிறந்துள்ளார் என நம்பப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட வரலாற்று சான்றுகளின்படி, இறக்கும்போது 87 வயது முடிந்திருந்ததாக அறியப்படுவதால், இவர் 1193ல் பிறந்ததாகப் பொதுவாக ஏற்கப்படுகிறது. ஆல்பர்ட், தற்போது ஜெர்மனியின் பவேரியா எனப்படும் லவிஞ்சனில் பிறந்திருக்கலாம். ஏனெனில் இவர் தன்னை லாவிஞ்சனின் ஆல்பர்ட் என அழைத்துக்கொண்டார். அல்லது அது வெறுமனே அவர் குடும்பப் பெயராகவும் இருக்கலாம்.

1223 அல்லது 1229ஆம் ஆண்டில் தொமினிக்கன் சபையின் உறுப்பினராகி, பொலோஞ்ஞா மற்றும் பிற இடங்களில் இறையியல் கற்றார். இறையியலில் மாபெரும் தேர்ச்சி பெற்ற இவர், பாரீசில் தன் படிப்பை முடித்தபின் கொலோனில் கல்வி கற்பிக்கும் பணியைத் துவக்கினார். இவர், கற்பிப்பதற்கும் எழுதுவதற்கும் என திரும்பினார். பல பல்கலைக் கழகங்களில் இறையியல் பேராசிரியராக பணிபுரிந்தார். இவரது வகுப்புகள் மிகவும் சிறந்த முறையில் இருந்ததால், மிக அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் இவரது வகுப்புகளுக்கு வந்தனர். இதனால், இவரது பாடங்களை வகுப்புகளில் நடத்த முடியாமல் திறந்த வெளிகளில் நடத்தினார்.

1254ஆம் ஆண்டு, ஆல்பர்ட் டொமினிக்கன் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார். பெரும் அக்கறை மற்றும் செயல்திறனுடன் தன் கடமைகளை நிறைவேற்றினார்.

1260ஆம் ஆண்டில், திருத்தந்தை நான்காம் அலெக்சாண்டர்  இவரை ஜெர்மனியின் பவேரியாவிலுள்ள ரீகன்ஸ்பர்க் ஆயராக நியமித்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் அந்த பதவியிலிருந்து விலகினார். 1278ஆம் ஆண்டு உடல் நலம் சீர்குலைந்ததைத் தொடர்ந்து  1280ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் 15ஆம் நாள்  ஆல்பர்ட் இறைபதம் சேர்ந்தார்.

1931ஆம் ஆண்டு திருத்தந்தை பதினொன்றாம் பயஸ், இவரை புனிதராகவும், மறைவல்லுனராகவும் உயர்த்தினார்.

நவம்பர் 16 -  ஸ்காட்லாந்து நாட்டின் புனிதர் மார்கரெட்

ஸ்காட்லாந்து நாட்டின் புனிதர் மார்கரெட், ஆங்கிலேய இளவரசர் எட்வர்ட் அவர்களின் மகள் ஆவார். 1045ஆம் ஆண்டு பிறந்த ஆங்கிலேய இளவரசியும், ஸ்காட்லாந்தின் அரசியுமான இவர், ஸ்காட்லாந்தின் மார்கரெட் என்று அறியப்படுகிறார். ஹங்கேரி அரசில் பிறந்த இவரும் இவரது குடும்பத்தினரும் 1057ஆம் ஆண்டு, இங்கிலாந்துக்குத் திரும்பினார்கள். மார்கரெட் 1057ஆம் ஆண்டிலிருந்து தன் மாமாவின் கண்காணிப்பில் இங்கிலாந்தில் வளர்ந்தார். 1066ஆம் ஆண்டு நார்மன் இங்கிலாந்தை வெற்றி கண்டதும், இவரின் 20ஆம் வயதில் ஸ்காட்லாந்திற்குத் திரும்பிச் சென்றார். அங்கே, 1070ஆம் ஆண்டின் இறுதியில், ஸ்காட்லாந்தின் அரசர் 3ஆம் மால்கம் என்பவரிடம் பழகி, பின்னர் அவரையே திருமணம் செய்து, ஸ்காட்லாந்தின் அரசியானார். அவருடைய கணவர், அவரை கிறிஸ்தவ மறையை தழுவக்கூடாது என்று கட்டளையிட்டார். ஆனால் அவர் தன் கணவரின் பேச்சை கேட்க மறுத்து, தன் கிறிஸ்தவ விசுவாசத்தில் வேரூன்றி இருந்தார்.

பக்தியுள்ள பெண்ணான அரசி, ஏழை மக்களின் வாழ்வில் அதிக அக்கறை கொண்டு வாழ்ந்தார். அவர்களுக்கு பலவிதங்களில் உதவினார். ஏழைகளை தன் இதயத்தில் சுமந்து உதவினார். தான் ஓர் அரசியாக இருந்தபோதும், துறவிகளைப் போலவே, ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தார். தவறாமல் நோன்பிருந்து செபித்து பல நலன்களைப் பெற்றார். பலவிதங்களிலும் ஒறுத்தல் செய்து வாழ்ந்தார். அநேக தொண்டு பணிகளைச் செய்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒரு போரில் கலந்துகொள்ளச் சென்ற இவரது கணவரான அரசர் மூன்றாம் மால்கமும், அவரது இருபத்தியிரண்டே வயதான மூத்த மகன் எட்வர்டும் 13 நவம்பர் 1093 அன்று கொல்லப்பட்டனர். ஐம்பது வயதுகூட பூர்த்தியாகாத மார்கரெட் ஏற்கனவே தொடர் நோன்பு மற்றும் ஒருத்தல்களினால் பலவீனமாக இருந்தார். தமது கணவரும் மூத்த மகனும் இறந்துபோன செய்தியைக் கேள்வியுற்ற அவர் மூன்றாம் நாளே அதாவது, 1093ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் நாள் உயிர்துறந்தார். 1250ஆம் ஆண்டு திருத்தந்தை நான்காம் இன்னசன்ட்  இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார்.

நவம்பர் 17 - ஹங்கேரியின் புனிதர் எலிசபெத்

ஹங்கேரி நாடு, மற்றும் ஜெர்மன் பகுதிகளின் இளவரசியான புனிதர் எலிசபெத், புனிதர் ஃபிரான்ஸிஸின் மூன்றாம் நிலை சபையின் ஆதிகால அங்கத்தினராவார்.

ஹங்கேரி நாட்டின் அரசர் இரண்டாம் ஆண்ட்ரூவின் மகளான இவர், 1207ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி பிறந்தார். தமது பதினான்காம் வயதில் குறுநில மன்னரான நான்காம் லூயிஸை திருமணம் செய்த எலிசபெத், இருபது வயதில் விதவையும் ஆனார். ஆறாவது சிலுவைப்போரில் (Sixth Crusade) பங்கேற்பதற்காக இத்தாலி பயணித்த லூயிஸ், வழியில் விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 1227ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 11ஆம் நாள் மரணமடைந்தார். தமது கணவரின் மரணத்திற்குப் பின்னர், தமக்கான வரதட்சணைப் பணத்தை திரும்ப பெற்றுக்கொண்ட இவர், அந்த பணத்தில் ஒரு மருத்துவமனையைக் கட்டினார். தாமே முன்வந்து நோயாளிகளுக்கு சேவை செய்ய ஆரம்பித்தார்.

பெரும் செல்வந்தராக இருந்தபோதிலும், எலிசபெத் தவம் மற்றும் துறவு வாழ்வையே தேர்ந்தெடுத்தார். இவரது இந்த தேர்வு, ஐரோப்பா முழுவதுமுள்ள சாதாரண பொதுமக்கள் இதயத்தில் அவருக்கு ஓர் இடத்தை பெற்றுத் தந்தது. எலிசபெத், தமது குறுகிய கால வாழ்க்கையிலேயே, ஏழைகள் மற்றும் நோயுற்றோர் மீது அளவற்ற அன்பினை வெளிப்படுத்தினார்.

எலிசபெத்துக்கு வயது ஆக ஆக, பக்தியும் வளர்ந்து கொண்டிருந்தது. 1228ல், ஃபிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். ஃபிரான்சிஸ்கன் சபை துறவிகளின் வழிகாட்டுதலின் பேரில், செப வாழ்வில் ஈடுபட்டார். ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் உதவத் தொடங்கினார். தினமும் தன் வாசலுக்கு வந்த நூற்றுக்கணக்கான ஏழைகளுக்கு உணவளித்தார். ஏழைகளிடமும் நோயாளிகளிடமும் கிறிஸ்து இயேசுவைக் கண்டு அவர்களுக்கு சேவை செய்து வந்தார்.

ஒரு மருத்துவமனையைக் கட்டி அங்கு போய் தொழு நோயாளிகளுக்கு இவரே சிகிச்சை செய்தார். ஏழைகளுக்கு உதவி செய்ய அரச ஆடைகளையும், ஆபரணங்களையும் விற்றார்.

இவருடைய கணவரின் சகோதர்கள் அரண்மனையைக் கைப்பற்றிக் கொண்டு இவரை விரட்டி விட்டனர். இவர் பிரான்சிஸ்கன் துறவிகளின் ஆலயத்திற்குச் சென்று, இந்த துன்பத்திற்காக கடவுளுக்கு நன்றி செலுத்தி ததேயும் என்னும் நன்றியறிதல் கீதத்தைப் பாடினார்.

தமது இருபத்து நான்காம் வயதில் 1231ல் நவம்பர் 17ஆம் தேதி  மரணமடைந்த எலிசபெத், கிறிஸ்தவத் தொண்டிற்கு ஓர் அடையாளமாக ஆனார். தமது மரணத்திற்குப் பின், 1235ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி திருத்தந்தை ஒன்பதாம் கிரகரி அவர்களால் புனிதராக அறிவிக்கப்பட்டார்.

நவம்பர் 18 - தூய பேதுரு மற்றும் பவுல் பேராலய அர்ப்பண திருவிழா

உரோம் நகரிலுள்ள நான்கு முக்கிய பேராலயங்களில் இரண்டு பேராலயங்களின் அர்ப்பண விழாவை, அதாவது,  தூய பேதுரு மற்றும் பவுல் பேராலய அர்ப்பண திருவிழாவை நவம்பர் 18ஆம் தேதி கொண்டாடுகிறது திருஅவை.

தூய மேரி மேஜர் பேராலய அர்ப்பண விழாவை ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதியும், தூய யோவான் இலாத்தரன் பேராலய அர்ப்பண விழாவை நவம்பர் மாதம் 9ஆம் தேதியும் கொண்டாடினோம். நவம்பர் 18ஆம் தேதி, தூய பேதுரு மற்றும் பவுல் பேராலய அர்ப்பணத் திருவிழா சிறப்பிக்கப்படுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 November 2023, 11:41