தேடுதல்

ஆயர்  Aldo Berardi ஆயர் Aldo Berardi  

புதிய வெளிச்சத்தைக் கொணர இருக்கும் திருத்தந்தையின் பயணம்

மறைசாட்சியாக மரித்த புனித அரேத்தாஸ் மற்றும் அவருடன் இறந்த ஏறக்குறைய 4000 கிறிஸ்தவர்கள் இறந்ததன் 1500ஆவது ஆண்டை முன்னிட்டு அரபு நாட்டுத் தலத்திருஅவையினர் இவ்வாண்டை யூபிலி ஆண்டாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஐக்கிய அரபு அமீரகத்திற்கானப் பயணமானது அங்கு வாழும் கிறிஸ்தவர்களின் இருப்பு, நற்செய்தி மற்றும் தனிப்பட்ட மாற்றத்திற்கான பல ஆண்டுகால உழைப்பை வெளிக்கொணர ஒரு புதிய வாய்ப்பாக, வெளிச்சமாக அமையும் என்றும், வெவ்வேறு நிறங்களை, சமூகங்களைக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகையைப் பெறுவது பெரும்பேறு என்றும் கூறியுள்ளார் ஆயர் ஆல்தோ பெரார்தி.

டிசம்பர் மாதம் 1முதல் 3 வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ள இருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான திருத்தூதுப்பயணம் குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த நேர்காணலின் போது இவ்வாறு கூறியுள்ளார் ஐக்கிய அரபு அமீரகத்தின் வடக்குப்பகுதி அப்போஸ்தலிக்க நிர்வாகியான ஆயர் ஆல்தோ பெரார்தி.    

மறைசாட்சியாக மரித்த புனித அரேத்தாஸ் மற்றும் அவருடன் இறந்த ஏறக்குறைய 4000 கிறிஸ்தவர்கள் இறந்ததன் 1500ஆவது ஆண்டை முன்னிட்டு அரபு நாட்டுத் தலத்திருஅவையினர் யூபிலியைக் கொண்டாடி மகிழும் வேளையில் அவர்களது யூபிலிக் கொண்டாட்டத்திற்கான காரணம், ஆன்மிக மற்றும் வரலாற்று முக்கியத்துவம் பற்றிய தனது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார் ஆயர் பெரார்தி.

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பஹ்ரைனுக்கு மேற்கொண்ட திருத்தூதுப்பயணமானது, அனைத்தும் மதங்களுக்கு இடையிலான உரையாடலில் ஆர்வத்தைத் தூண்டியது என்றும், திருத்தந்தையின் உரைகள் மற்றும் ஆவணங்களைப் பின்பற்றுவதற்கான, பிரதிபலிப்புக் கூட்டங்கள் பல்வேறு மதங்களின் தலைவர்கள் மத்தியில் தொடர்ந்து நடைபெறுகின்றன என்றும் தெரிவித்துள்ளார் ஆயர் பெரார்தி.

இதனால் பல ஆண்டுகளாக இருளில் இருந்த இந்தப் பகுதி தற்போது துடிப்புடன் செயல்பட்டு வருவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், இப்பகுதியில் பலர் கிறிஸ்தவர்களாக இருப்பதாகவும் கூறியுள்ளார் ஆயர் ஆல்தோ பெரார்தி.

மறைசாட்சிகளாக மரித்த புனிதர்களின் விழாவைக் கொண்டாடுவதில் ஐக்கிய அரபு அமீரகம் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், பாடல்கள், படங்கள், எழுத்துக்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் சுதந்திரமான மனநிலையை வளர்த்துக்கொண்டு பலர் தங்களது நம்பிக்கையைக் கலையின் வழியாக வெளிப்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும் கூறியுள்ளார் ஆயர் பெரார்தி.

இஸ்லாம் மதத்திற்கு முன்பு இங்கு வாழ்ந்த கிறிஸ்தவ விசுவாசிகளின் சமூகங்களை மீண்டும் கண்டுபிடிப்பது ஆர்வமாக உள்ளது என்று தெரிவித்துள்ள ஆயர் பெரார்தி அவர்கள், இது தொடர்பான வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி மிகவும் விரும்பத்தக்கதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவர்களிடையேக் கொண்டாடப்படும் இந்த யூபிலி ஆண்டிற்கான உற்சாகம் நமது கிறிஸ்தவ நம்பிக்கையைக் கொண்டாடவும், கிறிஸ்தவர்களாகிய நமது இருப்பு மற்றும் நம்பிக்கையின் சான்று வாழ்வை எடுத்துரைக்க வழிவகுக்கின்றது என்றும் கூறியுள்ளார் ஆயர் பெரார்தி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 November 2023, 10:51