தேடுதல்

பலசமய உரையாடல் கூட்டத்தில் கர்தினால் Miguel Ángel Ayuso Guixot (கோப்புப் படம்) பலசமய உரையாடல் கூட்டத்தில் கர்தினால் Miguel Ángel Ayuso Guixot (கோப்புப் படம்)  

உரையாடலை வலியுறுத்தும் பலசமய உச்சிமாநாடு

நாம் அனைவரும் நமக்குரிய மத மரபுகளில் வேரூன்றியிருப்பதால், இரக்கத்தையும் அன்பையும் வளர்ப்பதற்கான நமது அர்ப்பணிப்பில் ஒன்றுபடுவோம் : கர்தினால் Miguel Ángel Ayuso Guixot

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கிறிஸ்தவர்கள் மற்றும் புத்தர்களாகிய நாம் ஒன்றிணைந்து, அன்பும் புரிதலும் மத மற்றும் கலாச்சார எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்பதைக் காட்டும் மாற்றத்திற்கான வினையூக்கிகளாக இருக்க முடியும் என்று கூறினார் வத்திக்கானின் மதங்களுக்கிடையிலான உரையாடலுக்கான திருப்பீடத் துறையின் தலைவரான கர்தினால் Miguel Ángel Ayuso Guixot.

நவம்பர் 13 முதல் 16 வரை தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பொது புத்த பல்கலைக்கழகமான மஹாசூலாலோங்கோர்ன்ராஜாவித்யாலயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார் Guixot.

சமூகத்தில் உள்ள பலவீனமான மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களைச் சுற்றியுள்ள ஆழமான ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி பலர் அறிந்திருக்கவில்லை என்று தனது உரையில் குறிப்பிட்ட கர்தினால் Guixot. அவர்கள், சிலர் அநீதி, சுரண்டல் மற்றும் வறுமையை சகித்துக்கொண்டிருக்கிறார்கள், மற்றவர்கள் விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் அழுகையை கவனிக்காமல் இருக்கிறார்கள் என்றும் எடுத்துக்காட்டினார்.

அரசியல் மற்றும் பொருளாதார உறுதியற்றநிலை மற்றும் காலநிலை மாற்றத்தின் அச்சுறுத்தல் ஆகியவற்றின் விளைவுகளால் வெளியேறும் புலம்பெயர்ந்தோரின் அவலநிலை பற்றிய அலட்சியத்தால் இது மேலும் அதிகரிக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார் கர்தினால் Guixot.

பிறரின் துயர் துடைப்போம்

புத்தரால் கற்பிக்கப்பட்ட இரக்கம், துன்பப்படுபவர்களுக்கு ஆதரவையும் புரிதலையும் வழங்கவும், வலியை எங்குக் கண்டாலும் அதைக் குறைக்கவும் நம்மைத் தூண்டுகிறது என்று எடுத்துரைத்த கர்தினால் Guixot அவர்கள், கிறிஸ்து கூறும் அன்பு, நமக்கு அடுத்திருப்போரை அன்புகூரவும், நம்மிலும் சிறியவர்களைக் கவனித்துக்கொள்ளவும், அனைவரின் நல்வாழ்வுக்காகத் தன்னலமின்றி செயல்படவும் நம்மைத் தூண்டுகிறது என்றும் கூறினார்.

நாம் அனைவரும் நமக்குரிய மத மரபுகளில் வேரூன்றியிருப்பதால், இரக்கத்தையும் அன்பையும் வளர்ப்பதற்கான நமது அர்ப்பணிப்பில் ஒன்றுபடுவோம் என்றும், நமது உலகத்தைப் பீடித்துள்ள நோய்களைக் குணப்படுத்தவும், ஒதுக்கப்பட்டவர்களை உயர்த்தவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும் அழைப்பு விடுத்தார் கர்தினால் Guixot.

ஒன்றிணைந்து பணியாற்றினால் வெற்றி

பெரிய சவால்கள் நிறைந்த காலத்தில் நாம் வாழ்கிறோம். பூமி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு காலநிலை நெருக்கடியை எதிர்கொள்கிறது மற்றும் உலகில் சமத்துவமின்மை மற்றும் அநீதி அதிகம் காணப்படுகிறது என்றும், ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான இடைவெளி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது வளர்ந்துவிட்டதாகக் கூறினார் தாய்லாந்திற்கான திருத்தந்தையின் திருத்தூதர் பேராயர் Peter Bryan Wells.

உலகம் எதிர்கொள்ளும் சமூக மற்றும் காலநிலை நெருக்கடியை சமாளிக்க ஒன்றிணைந்து செயல்படுமாறு இம்மாநாட்டின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்த பேராயர் Wells அவர்கள், நாம் ஒன்றிணைந்து பணியாற்றினால் இந்தச்  சவால்களை சமாளிக்க முடியும் என்றும், இரக்கத்தையும் அன்பையும் ஊக்குவிப்பதில் தீவிரம் காட்டுவோம் என்றும் கேட்டுக்கொண்டார்.

முழுமையான அணுகுமுறை வேண்டும்

தாய்லாந்தின் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரான மேதகு ஆயர் Joseph Chusak Sirisut அவர்கள், மனிதகுலத்திற்கும் பூமிக்கும் மிகவும் நிலையான, சமத்துவம் மற்றும் இரக்கமுள்ள உலகத்தை உருவாக்க ஒரு முழுமையான அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய Fratelli Tutti (அனைவரும் சகோதரர் சகோதரிகள்) என்னும் திருத்தூது மடலை மேற்கோள் காட்டிய ஆயர் Sirisut அவர்கள்,  உலகம் என்பது ஒரு மனித குடும்பம் என்றும், பூமியின் சக வாழ்கையாளர்களான நாம் ஒரே படகில் பயணம் செய்கிறோம், அதில் ஒருவருக்கு ஏற்படும் பிரச்சனைகள் அனைவருக்குமான பிரச்சனைகளாக அமைகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.

நாம் மேற்கொள்ளும் இந்த ஏழாவது மாநாடு, புத்தர்களும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான அழகான உறவு, உரையாடல், புரிதல் மற்றும் ஒருவருக்கொருவர் மீதான மரியாதை ஆகியவற்றின் வலிமையை எடுத்துக்காட்டுகிறது என்று கூறிய ஆயர் Sirisut அவர்கள், கிறிஸ்தவர்களும் புத்தர்களும்  இரக்கம் காட்டுவதையும் துன்பத்தைப் போக்குவதையும் வலியுறுத்துவதில் பொதுவான நோக்கத்தைக் கொண்டுள்ளனர் என்றும் விளக்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 November 2023, 15:48