தேடுதல்

காசாவிலுள்ள திருக்குடும்ப ஆலயம் காசாவிலுள்ள திருக்குடும்ப ஆலயம்  

இயேசுவின் தியாக வழியில் பிறரை அன்புகூர்வோம்!

மதியற்ற இந்த உலகில் இயேசுவே தனது அமைதி மற்றும் அன்பின் இல்லம் : காசா இளைஞர் Suhail Abo Dawod.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காசாவில் நிகழ்ந்து வரும்  போர் என்பது ஒருவர்மீது ஒருவர் இன்னும் கரிசனையும் அக்கறையும் கொள்வதற்கான ஓர் அழைப்பு என்று கூறியுள்ளார் அங்குள்ள திருக்குடும்ப பங்குத்தளத்தில் பிறரன்பு பணியாற்றிவரும் இளைஞர் Suhail Abo Dawod.

வத்திக்கான் செய்திகளுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள 18 வயது நிரம்பிய Suhail Abo Dawod என்ற இவ்விளைஞர், போர் மக்கள் ஒருவரையொருவர் அதிகமாக அன்புகூரவும், அவர்களின் அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ளவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்றும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தப் போர் மனிதகுலம் அனைத்திற்கும், நமக்கும், அனைவருக்கும் ஒரு செய்தியாக அமைந்துள்ளது என்று தான் உறுதியாக நம்புவதாகக் கூறியுள்ள Dawod, சிறப்பாக, காசாவில் உள்ள நமது கிறிஸ்தவச் சமூகத்திற்குக் கடவுளிடமிருந்து ஒரு செய்தி இருப்பதாகத் தான் நினைப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இயேசு எவ்வாறு மற்றவர்களுக்கு உதவினார், எவ்வாறு பணியாற்றினார் என்பதை போலவே, நாமும் ஒரு குடும்பமாக ஒருவரையொருவர் அன்புகூரவும், ஒருவருக்குக்கொருவர் உதவி செய்யவும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று உரைத்துள்ள Dawod, இயேசு நமக்காகத் தம்மையே தியாகம் செய்ததைப் போல நாமும் பிறருடைய நலன்களுக்காக நம்மையே தியாகம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாம்  வித்தியாசமானதொரு வாழ்க்கை முறையை வாழக் கற்றுக்கொள்வோம் என்றும், இயேசு தனது பெரிய மற்றும் அழகான ஆன்மாவால் பல நோய்களிலிருந்து மக்களைக் குணப்படுத்தியது போல், நாமும் ஒரு பெரிய மற்றும் தனித்துவமான இதயத்துடன் ஒருவருக்கொருவர் உதவுவோம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் Dawod.

அக்டோபர் 25, கடந்த புதன்கிழமையன்று, இஸ்ரயேல் இராணுவம் நிகழ்த்திய குண்டு வீச்சில் தனது வீட்டை இழந்துள்ள Dawod. இயேசுவை தனது உண்மையான இல்லமாகக் கருதுவதாகவும், மதியற்ற இந்த உலகில் இயேசுவே தனது அமைதி மற்றும் அன்பின் இல்லம் என்றும் கூறித் தனது இறைநம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்

அக்டோபர் 7, சனிக்கிழமையன்று, இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஏற்பட்டதைத் தொடர்ந்து 700-க்கும் மேற்பட்டோர் வடக்கு காசாவில் உள்ள திருக்குடும்ப ஆலய பங்குத்தளத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்கள் ஒரு கிறிஸ்தவச் சமூகமாக ஒன்றிணைந்துள்ளதுடன், திருப்பலி, செபமாலை செபித்தல் ஆகிய பக்தி முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக இறைவேண்டல் செய்து வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2023, 15:00