புனித பூமியின் அமைதிக்கு ஜெபிக்க அழைக்கும் ஆஸ்திரேலிய ஆயர்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
புனித பூமியில் துன்புறும் மக்கள் குறித்து ஆஸ்திரேலிய கத்தோலிக்க சமுதாயம் மிகுந்த வேதனை அடைவதாக, சிட்னியில் கூடிய அந்நாட்டு ஆயர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
புனிதபூமி மக்களின் நிலை குறித்த ஆஸ்திரேலிய கத்தோலிக்க சமுதாயத்தின் துயர்களோடு தாங்களும் கலந்துகொள்வதாகக் கூறும் ஆஸ்திரேலிய ஆயர்கள், நாம் இன்று புனித பூமி பகுதி குறித்துக் காண்பது, வெறும் செய்திகளோ, தொலைக்காட்சி நாடகங்களோ அல்ல, மாறாக, கடவுளின் குழந்தைகளாகிய அப்பகுதி மக்களின் உண்மை நிலை என தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மத்தியக் கிழக்குப் பகுதியின் தற்போதைய வன்முறைகள் குறித்த நீண்ட வரலாற்றை ஆராய்வதே, வன்முறைகளைத் தாண்டி மோதலுக்கு நீதியான முடிவைக் காண்பதற்கான முதல்படி எனக்கூறும் ஆஸ்திரேலிய ஆயர்கள், நீதியின் வழியாகவே அமைதியைக் கொணர முடியும் என்பதையும் வலியுறுத்தியுள்ளனர்.
மத நம்பிக்கையாளர்கள் அனைவரும் நீடித்த நிலையான அமைதிக்கும், மனித மாண்பு வெற்றிவாகைச் சூடுவதற்கும் இறைவேண்டல் செய்வதோடு, பெரிதும் துன்பங்களை அனுபவிக்கும் மத்தியக் கிழக்குப் பகுதி மக்களுக்கு, தாராளமனதோடு பிறரன்பு உதவிகளைச் செய்ய வேண்டும் எனவும் அழைப்புவிடுத்துள்ளனர் ஆஸ்திரேலிய ஆயர்கள்.
அப்பாவி மக்களின் உயிர்களைக் காப்பாற்ற, முறையான வகையில் மனிதாபிமான உதவிகளை வழங்கவேண்டியது அவசியம் என்பதால், மனிதாபிமான அமைப்புக்கள் மோதல் இடம்பெறும் பகுதிகளில் பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என மேலும் கூறும் ஆஸ்திரேலிய ஆயர்கள், புனித பூமியின் மக்களுக்காகத் தொடர்ந்து செபிப்பதோடு, அவர்களையும் அவர்களின் துயர்களையும் இதயத்தில் தாங்கிச் செல்வதாகவும் கூறியுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்