தேடுதல்

பேராயர் Joseph Arshad பேராயர் Joseph Arshad  

பொதுநிலையினருக்கென ஓர் ஆண்டு பாகிஸ்தான் திருஅவையில்

பாகிஸ்தான் மக்கள் தொகையில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை 1.5 விழுக்காடே எனினும் விசுவாசத்தின் உயிர்துடிப்பும், சான்று வாழ்வின் நடவடிக்கையும் நிறைந்துள்ளன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருஅவையில் திருவழிபாட்டு ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி கிறிஸ்து அரசர் விழாவிற்குப்பின் துவங்குவதை முன்னிட்டு, அவ்வாண்டை பொதுநிலையினர் ஆண்டு என அறிவித்துள்ளது பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்-ராவல்பிண்டி உயர்மறைமாவட்டம்.

இளையோரின் தனித்தன்மை, அழைப்பு, குடும்பம் மற்றும் பணியிடங்களில் அவர்களின் வேலை மற்றும் சான்று வாழ்வு, பாகிஸ்தானில் நீதியும் ஒட்டிணைவும் நிறைந்த சமூகத்தைக் கட்டியெழுப்புதல் போன்றவைகளை ஊக்குவிக்கும் விதமாக இந்த திருவழிபாட்டு ஆண்டில் திட்டமிட்டுள்ளதாக பெருமறைமாவட்ட பேராயர் Joseph Arshad தெரிவித்தார்.

2023-2024 திருவழிபாட்டு ஆண்டின்போது, ஒவ்வொரு பங்குதளமும், துறவு சபைகளும், திருஅவை நிறுவனங்களும் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள், கருத்தரங்குகள், பிறரன்பு நடவடிக்கைகள் வழியாக இதனைச் சிறப்பிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் பேராயர்.

சமூக அமைதிக்குப் பங்களிக்கும் உரையாடல், திருஅவையின் நற்செய்தி அறிவிப்புப் பணியில் இளையோரின் கடமைகள், உதவித் தேவைப்படுவோருக்கான பொதுநிலையினரின் பணி போன்றவைகளை  உக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இத்திருவழிபாட்டு ஆண்டு அறிவிப்பு என்ற பேராயர் Arshad அவர்கள், பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை 1.5 விழுக்காடேயெனினும் விசுவாசத்தின் உயிர்துடிப்பாலும், சான்று வாழ்வின் நடவடிக்கைகளாலும் கத்தோலிக்கப் பொதுநிலையினரின் இருப்பு நிறைந்து காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் கத்தோலிக்கரில் 70 விழுக்காட்டினர் தொடர்ந்து ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டங்களிலும் ஏனைய வழிபாடுகளிலும் கலந்து கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்தார் இஸ்லாமாபாத் பேராயர்.  

4 கோடியே 30 இலட்சம் மக்கள்தொகையைக் கொண்ட இஸ்லாமாபாத்-இராவல்பிண்டி உயர்மறைமாவட்டத்தில் ஏறக்குறைய 2 இலட்சத்து 20 ஆயிரம் கத்தோலிக்கர் வாழ்கின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 November 2023, 17:11